அனுபவம் அறிவு……………….ஒரு அனுபவப்பகிர்வு
நான் சிறுவனாக இருக்கையில் பள்ளிகூடத்தில் தேவாரம் மனனம் செய்யத் தருவார்கள், ஒரு எழுத்துப்பிழை விட்டால் கூட வாங்கின் மேல் ஏறிநின்று அடிவாங்க வேண்டும். ஒரு எழுத்துப்பிழைக்குகூட கடவுள் கையை விட்டுவிட்டாரே? என்று நான் அப்போது கவலைப்படுவதுண்டு . தேவாராம் என்ன சோறா போடப்போகிறது? என கோபத்தில் நான் புறுபுறுத்துக்கொள்வதுண்டு. கல்லை கட்டி கடலில் போடப்பட்ட அப்பர், சொற்றுணை வேதியன் பாடி, விஞ்ஞான விளக்கங்களையும் மீறி, மிதந்ததின் பின்பு எனக்கு தெரிந்தவரை கல்லை கட்டி கிணற்றில் விழுந்து இறைவனை அடைந்தவர்கள் தான் அதிகம். தேவாரம் போன்ற விடயங்களை கற்றுக் கொள்ளல் மிக அவசியம், ஆனால் அதற்கு அளவுக்கு அதிகமான நேரமோ தேவைக்கதிகமான முக்கியத்துவமோ கொடுக்கப்பட்டால் அந்த நேரத்தில் வேறு பல வாழ்க்கைக்கு முக்கியமான விடயங்களை படிக்க முடியாமல் போய்விடும்.தேவாரம் இங்கு ஒரு உதாரணம் மாத்திரமே.
ஆண்டுகள் பல கழிந்து விட்டன , கடவுளை கனிவு படுத்துவதற்கு ஐந்தாறு தேவாரம் தெரிந்திருக்கிறதே என்று சந்தோசமாக இருந்தாலும், இப்படி தேவாரம் போன்ற விடயங்களில் செலவழித்த நேரத்தில் சிறு பகுதியையாவது ஓரிரு தொழிற்கல்வியை கற்பதில் பயன் படுத்தியிருக்கலாமே என்ற ஆதங்கம் இன்னும் என் மனதிலே இருக்கத்தான் செய்கிறது. நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ற கல்வியை கற்பது மிக அவசியம், எமது பாட திட்டங்களும் அதற்கேற்றபடி ஒழுங்குபடுத்தப்படவேண்டும். கைத்தொழில், மரவேலை, சங்கீதம் , சித்திரம், நாடகம், தொழில்நுட்பக்கல்வி போன்ற பாடங்களை கட்டாய பாடங்களாக்கி, அவைக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு சிறு கதை, ஒரு பண்டிதர் ஒவ்வொருநாளும் ஒரு ஆற்றை கடந்துதான் தன் வேலைக்கு செல்வது வழக்கம், அப்படி ஒரு நாள் அவர் சிறு படகு ஒன்றில் செல்லும் போது, அந்தப் படகோட்டும் பையனிடம் கிண்டலாக சில கேள்விகளை கேட்டார் ; ‘தம்பி நீ இராமாயணம் படித்திருக்கிறாயா?‘ இல்லையையா, என்று பதில் கிடைத்தது. பண்டிதர் சொன்னார் ‘அப்படியானால் நீ உன் வாழ்கையில் அரைவாசியை இழந்து விட்டாய் , சரி மகாபாரதம் படித்திருக்கிராயா?’ அதற்கும், இல்லை என்று பையன் பதிலளித்தான். பண்டிதர் உடனே சிறிதாக சிரித்தபடி ‘ நீ உன் வாழ்கையில் எழுபது வீதத்தை இழந்துவிட்டாய்’ என்றார். எல்லாவற்றையும் இதுவரை அமைதியாக கேட்ட அந்த பையன் திடீரென ‘ஐயா , உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’ என்றான். ‘இல்லையடா தம்பி’ என்று பதற்றப்பட்ட பண்டிதரைப் பார்த்து , ‘ஐயா, படகில் ஒரு ஓட்டை வந்து ஆற்று நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது, படகு சிறிது நேரத்தில் ஆற்றில் தாழ்ந்து விடும், நான் நீந்தி தப்பித்துக் கொள்வேன் ஆனால் நீச்சல் தெரியாத உங்கள் வாழ்க்கையே முடியப்போகிறதே என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது’ என்றான்.
தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றால் போல் எம் கல்வியும் திறமையும் இருக்க வேண்டும். காட்டில் வேட்டையாடி உண்பவன் கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்து என்ன பயன்? (மாரீசன் என்ற மானுக்கு இராமன் அம்பெய்தாரே அதைப் பார்த்து விலங்குகளை வேட்டையாட பழகலாம் என்று சிலர் மனதுக்குள் நினைப்பது புரிகிறது)
நாம் எந்தத் துறையில் கல்வி கற்றாலும், ஏட்டுக் கல்வியுடன் முடித்துவிடாது அதை செயற்கையிலும் பயன் படுத்த வேண்டும். ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? எவ்வளவுதான் கல்வி கற்றாலும் அதை சந்தர்ப்பம் வரும் போது உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். எம் கண் முனால் இருக்கும் வாய்ப்புகளை எத்தனை தடவை நாம் தெரியாமல் நழுவ விட்டிருக்கிறோம்? இப்படியான வாய்ப்புகளை கண்டறிந்து அதை எமது வாழ்க்கைக்கு சாதகமாக உபயோகித்துக்கொள்ளும் திறனை நாம் வளர்த்துக்கொள்வது மிக அவசியமாகும்.
ஒரு உதாரணம், ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று இருந்தது. இந்தக் கோவிலுக்கு மணி அடிப்பதற்கு ஆள் தேவையென விண்ணப்பம் கோரி இருந்தார்கள். இந்த வேலைக்கு ஒரு வறிய குடியானவனும் விண்ணபித்திருந்தான். ஆனால் அவனுக்கு படிப்பு அதிகம் இல்லையெனக்கூறி அந்த வேலையை அவர்கள் கொடுக்கவில்லை. வேலை கிடைக்காத கவலையில் காட்டு வழியே நடந்து கொண்டிருந்த குடியானவனுக்கு பெருந் தாகம் எடுத்தது ஆனால் அவன் எங்கு தேடியும் தாகத்தை தீர்க்க நீர் கிடைக்கவில்லை. இப்படித்தானே காட்டு வழியே கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் அவஸ்த்தைப் படுவார்கள் என நினைத்து அவன் ஒரு தேநீர்க் கடையை ஆரம்பித்தான். சிறிதாக ஆரம்பித்த அந்தக் கடை நாளடைவில் மிகப்பெரிதாகியது. இப்படி இருக்கையில் அந்தக்கோவிலுக்கு ராஜ கோபுரம் கட்டி அதன் விழாவிற்கு ஒருவரை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். விழாவன்று பிரதம விருந்தினரை பார்த்த கோவில் தர்மகர்த்தாவுக்கு பெரும் அதிர்ச்சி , காரணம், அந்த பிரதமவிருந்தினர் வேறு யாருமல்ல, மணியடிக்கத் தகுதியில்லாத அந்தக் குடியானவன் தான் அவன். தனக்கு நிகழ்ந்த அந்த கவலையான சம்பவத்தை நினைத்து கவலைப்பட்டு கண்ணீர்விடாது, கிடைத்த சந்தர்ப்பத்தை தன் முன்நேற்றத்துக்கு பயன்படுத்தி பெரிய செல்வந்தனானான் அந்தக் குடியானவன்.
வாழ்கையில் வளர்ச்சியடைந்து செல்லும்போது, ஒரு நிலையை அடைந்தபின் தனித்து இயங்குவது என்பது மிகக் கடினம், மேலும் மேலும் வளர்ச்சி அடைவதற்கு பலருடன் சேர்ந்து கூட்டாக இயங்குவது மிக முக்கியமாகும் . இப்படிக் கூட்டாக சேர்ந்து வேலை சேயும் போது, ஒவ்வொருவரதும் மனநிலையையும், அறிவுநிலையும் பொறுத்து வாக்குவாதங்களோ அல்லது ஒருவரை ஒருவர் அவமதிப்பதற்கான சந்தர்ப்பங்களோ உருவாகலாம். இப்படியான நேரங்களில் நிதானம் தவறாது, தராதரம் பாரக்காது, எல்லோரது அபிப்பிராயத்துக்கும் மதிப்புக்கொடுத்து நடத்தல் அவசியமாகும். சில நேரங்களில் மற்றவர்கள் கூறுவது முட்டாள் தனமாக தெரிந்தாலும் கூட உடனே கோபப்பட்டு மறுத்துக்கூறி அவர்களைப் புண்படுத்தாது, அவர்கள் கூறியதை ஆற ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, ஆனால் அமைதியாக கேட்க வேண்டும்.
ஒரு உண்மை நிகழ்வு, ஒரு நாட்டில் குளிர் காலத்தில் மின்ச்சாரக்கம்பிகளின் மீது பனி விழுந்து , பனியின் பாரத்தால் கம்பிகளில் பெரிய தொய்வுகள் ஏற்ப்பட்டது. இதை எப்படி தடுக்கலாம் என்பதை ஆரைவதற்க்காக ஒரு குழுவை நியமித்தார்கள. இந்த விடயத்தை கலந்தாலோசிப்பதற்கு அவசரக்கூட்டம் ஒழுங்குசெயப்பட்டது. ஒருவர் கூறினார், இந்த கம்பிகளின் மீது எலி போன்ற ஒரு சிறு பிராணியை ஓட விட்டால் எல்லாப் பனியும் விழுந்து விடும் என்று. அடுத்தவர் சொன்னார் எலி போன்ற பிராணி ஏன் இப்படியான உயரக்கம்பிகளின் மீது ஏறவேண்டும்? அது ஏறுவதானால் அதை கவருவதற்கு எதாவது உணவு இருக்கவேண்டுமல்லவா என்றார்.
இப்படி வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய சிறிய அனுபவங்கள் பல, எல்லாவற்றையும் எழுத இங்கு இ டம் போதாது. நான் தொடக்கத்தில் கூறியது போன்று, மேலே கூறியவை எல்லோருக்கும் பயன்கொடுக்காவிடாலும் ஒரு சிலராவது இவற்றால் பயனடையலாம் என்பது என் நம்பிக்கை. நான் எழுதியதில் குறை இருந்தால் தயக்கமின்றி கூறுங்கள். அந்த அனுபவத்தையும் அறிவாக்கிக் கொள்கிறேன்.
வாழ்க்கை, வாழ்க்கை என்று பலதடவை மேலே கூறியிருக்கிறேன். என்னடா வாழ்க்கையிது ? வாழ்க்கை என்றால் என்ன ? என்ற கேள்விகள் எமது மனதில் குறைந்தது ஒரு தடவையாவது தோன்றி இருக்கும். நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளின் விளைவுதான் வாழ்க்கை. இந்த முடிவுகளில் பல நேரங்களில் சரி எது, பிழை எது, என்று கூறமுடியாது, ஒவ்வொருவருடைய தேவையையும் அவர்களுக்கு கிடைத்த தகவல்களையும் பொறுத்து முடிவுகள் மாறுகின்றன. இப்படி நாம் எடுக்கும் முக்கியமான முடிவுகள் வாழ்க்கையின் பாதையும் மாற்றி விடுகின்றது. ஆகவே எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் எமக்குத்தேவையான எல்லா தகவல்களையும் சேகரித்து கொள்வது மிக முக்கியமாகும். அவதிப்பட்டு, தேவையான தகவல்களை சேகரிக்காமல், ஆராயாமல் எடுக்கும் முடிவுகள் எம்மை பிழையான பாதையில் கொண்டு சென்றுவிடும், எனவே எமது வாழ்கையின் ஒவ்வொரு படிகளிலும் முடிவுகளை ஆராய்ந்து எடுப்பது முக்கியம். என்னடா அறிவுரை சொல்கிறானே, இவன் எல்லாம் சரியாகவா செய்கிறான்? என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால், அதற்க்கு என் பதில் ‘இல்லை’. நான் விட்ட பிழைகளை மற்றவர்களும் விடக்கூடாதல்லவா? அதற்காகத்தான் என் அனுபவத்தில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தேன். அனுபவத்தை விட பெரிய ஆசான் யாருமே இருக்க முடியாது!
எமது முடிவுகள் அதிகமாக எமது, அல்லது எம்மில் பலரது, சந்தோசத்தையே குறியாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன. இந்த முடிவுகளால் எமக்கு எப்படியான வாழ்க்கை அமைந்தாலும், அதில் இன்பத்தை தேடி கண்டுகொள்ளும் மனநிலையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விரக்தியடைந்து வாழ்கையை தொலைத்துவிடக்கூடாது.
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் சந்தோசம் காணாத வாழ்வுண்டா ?
Life is no brief candle for me. It is a sort of splendid
torch which I have got hold of for the moment, and I want
to make it burn as brightly as possible before handing it
on to future generations.
– George Bernard Shaw –
அன்புடன்
கனகசபேசன் அகிலன்
0 Comments