அரசகேசரி விநாயகனின் தேர்த்திருவிழா -சிறப்புப்பக்கம்
.இலங்கையின் வடபால் யாழ்ப்பாண மாநகரின் நீர்வேலிக் கிராமத்தில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக அமைந்து அனைவருக்கும் அருளை அள்ளி வழங்கும் ஸ்ரீ அரசகேசரி விநாயகனுக்கு இன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. எமது ஊரின் அனைவருக்கும் எம்பெருமானின் திருவருள் கிடைக்கவேண்டும் என பிரார்த்திப்பதுடன் அனைவரும் பகை மறந்து கோபம் நீங்கி ஒற்றுமையாக தேரேறும் விநாயகனை வைத்து வடம் பிடித்து இழுப்போமாக.
சர்வதேச இந்துசமய கலாச்சார அமைப்பின் தலைவர் அவர்கள் வழங்கிய தேர் சிறப்பு செய்தி”
இலங்கையின் வடபால் யாழ்ப்பாணமாநகரின் நீர்வேலிக்கிராமத்தில் ராஜசிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் -2014 ம் ஆண்டு மகோற்சவ கொடியேற்றத்துடன் 29.08.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்று தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக பக்திபூர்வமாக இடம்பெறுகின்ற இந்நாளில் எம்பெருமானின் திருவருள் கிடைக்க எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் பாதங்களை பணிந்து போற்றுகின்றோம்
…………………………………………………………………………………………………………………………………………………………………

லயம் என்கிற சொல் ஆன்மா ஒடுங்கும் இடம் என்றும் ஆணவம் ஒடுங்கும் இடம் என்றும் பொருள் கொள்வர் சான்றோர்.தேவாலயமானது எங்கும் வியாபகரமாய் மறைந்திருக்கும் கடவுள் தம்மை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சாந்நித்தியராய் எழுந்தருளி இருக்கும் இடமாகும்.அரசகேசரி விநாயகனும் நாம் உய்யும் வண்ணம் தோற்றம் பெற்றவனே.வழிபாட்டின் மூலம் நீர்வைமக்கள் அறிகுறியாக அறிவைப்பெருக்கியும் அருள்நெறியாக அன்பைவளர்த்தும் அனுபவவாயிலாக அழியாப்பேரின்பத்திற்கு அடிகோலியும் பெருவிழா உற்சவங்களில் தம்மை ஆற்றுப்படுத்தியும் வருகின்றனர்.செந்திமிழ் வளர்ச்சியிலும் சிவநெறி ஈடுபாட்டிலும் சிறந்து நிற்பவர்கள் நீர்வைமக்கள்.நிறைந்திருக்கும் பக்தி உணர்விற்கு இங்கு நடைபெறும் திருவிழாக்களும் வழிபாடுகளும் சான்று கூறுவன.பெருவிழாக்களில் இடம்பெறும் தேரோட்டம் மக்கள் மனதில் சமய எழுச்சியையும் பேதமற்ற மனப்பான்மையையும் விருந்தோம்பும் பண்பாட்டையும் விளக்கக் காண்கின்றோம்.
பிரபஞ்சத்தின் உள்ளேயும் வெளியேயும் நின்று அதனைப்படைத்தும் காத்தும் அழித்தும் மறைந்தும் அருளும் இறைசன் பிரபஞ்சமாகிய தேரின் உள்ளேயும் வெளியேயும் நின்ற விநாயகப்பெருமான் ஆரோகணித்து உலாவருகின்றவேளை எல்லோருக்கும் அருட்கடாட்சம் கிட்டவும் அமைதியும் மகிழ்வும் பூக்கவும் அன்பர்க்கு நல்லபலன் கிட்டவும் வாழ்த்துவோம் வணங்குவோம் .போற்றி உய்வோமாக.
திரு.துரை எங்கரசு
ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்
நீர்வேலி.
…………………………………………………………………………………………………………………….
நீர்வையம்பதியில் எழுந்தருளி கோவில் கொண்டு சகலருக்கும் தனது அருட்கடாட்சத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அரசகேசரியான் தேரேறி வீதி உலா வருகின்றார். இவ் அரும்பெரும் கண்கொள்ளாக்காட்சியை நியூ நீர்வேலி இணையத்தினூடாக புலத்தில் இருக்கின்ற நாமெல்லாம் கண்டு தரிசித்து விநாயகப்பெருமானின் இஷ்டசித்திகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கின்றோம். இம்முறை இவ்வரிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தி வழங்கிக் கொண்டிருக்கும் நியூநீர்வேலி இணையத்தினருக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்.அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைத்து நல்வாழ்வு வாழபிரார்த்திக்கின்றேன்
அடியவன்
ஜீவாகோபாலசிங்கம்
கனடா.
……………………………………………………………………………………………………….
0 Comments