10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

இன்ரநெற் மயமாகும் நீர்வேலி……….

நீர்வேலியின் தற்போதய நிலையில் இருந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தோமாயின் அக்காலத்தில் நீர்வேலி எப்படி இருந்தது என்பதை முதலில் நோக்குவோம். 1990 ஆம் ஆண்டில் நீர்வேலி வாழ்ந்த மக்கள் தொகை அதிகமாகவே காணப்பட்டது. மறவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையாலும் போர் மேகங்கள் மூடி இருந்தமையாலும் நீர்வேலியில் வாழ்ந்த மக்கள் மனங்களில் தொழில்நுட்பம் செல்வாக்குச் செலுத்தியிருக்கவில்லை. மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தடை காரணமே அதற்கு முக்கிய காரணமாகும். தற்போது வெளிநாடுகளில் வாழும் எமது நீர்வேலி உறவுகள் முக்கால்வாசிப்பேர் அக்காலத்தில் நீர்வேலியில் வசித்துக்கொண்டிருந்தனர். மின்சாரம் இல்லை தொலைத்தொடர்பு இல்லை என வாழ்ந்த மக்கள் பெரிதும் நம்பியிருந்தது கடிதத்தொடர்பினை மட்டுமே. எங்கள் ஊரில் கடிதக்காரன் வீடு வருவதைக்கண்டால் அனைவரது மனங்களும் துள்ளிக்குதிக்கும் காலம். வெளிநாட்டில் உள்ள உறவுகளிடம் கதைப்பதென்றால் கொழும்பு சென்றே அல்லது வவுனியா சென்றே கதைக்க வேண்டும். நீர்வேலியில் இருந்து வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு போட்ட கடிதம் அவர் குழந்தை காதுக்குத்தின் பின்னரே போய்ச்சேரும். ஆங்கிருந்து போட்ட கடிதம் உறவுகள் இறந்த பின்னரே நீண்ட நாட்களின் பின் வந்துசேரும். ஆவ்வாறன காலத்தில் ஊரில் இருப்பவர்கள் ஓருவரை ஒருவர் சந்திப்பதென்றால் அவரவர் வீடுகளுக்கு சென்றோ அல்லது கோயில் குளம் கடைத்தெரு இப்படி பல இடங்களிலும் கூடுவர். நீண்ட நேரம் கதைத்து உறவாடுவர்.அவர்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு உதவி செய்யும் மனப்பாங்கு கூடி உண்ணும் பக்குவம் என பலவகையான நற்பண்புகள் இருந்தன. இலண்டனிலும் கனடாவிலும் ஏனைய நாடுகளிலும் அனல்பறக்கும் ஆங்கிலத்திலும் மற்றும் ஏனைய வெளிமொழிகளிலும் பேசுவோர் 1990 களில் தமிழை பலவடிவங்களில் பேசிக்கொண்டிருந்தவர்கள். அது ஓரு இனிமையான காலமாகத்தான் இருக்கும்.

1995 ம் ஆண்டு யாழ்ப்பாணம் எதிர்கொண்ட பாரிய இடப்பெயர்வில் எமது ஊர் மக்களும் தென்மராட்சி வன்னி என இடம்பெயர்ந்து ஒவ்வொரு திக்காக தொலைந்து போனார்கள். பின்னர் 1996 திரும்பவும் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த மக்களுக்கு பல தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கத்தொடங்கின. ஆதில் தொலைத்தொடர்பு நிலையங்கள் சந்திக்கு சந்தி என அமையத்தொடங்கின. வெளிநாட்டுத் தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் தொலைத் தொடர்பு நிலையங்களில் தவம் கிடந்தனர். குந்தசாமி கோவிலடியில் ஸ்ரீ முருகன் கொமினிகேசன் மற்றும் யூனியன் நடாத்திய கொமினிகேசன் அதனை விட அத்தியார் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் உள்ள மாஸ்ரர் கொமினிக்கேசன் குறக்கு றோட்டில் உள்ள ஒரு சில கொமினிக்கேசன் என நீர்வேலி எங்கும் பரவலாக தொடர்பாடல் நடைபெற்றது. ஆக்காலத்தில் இன்ரநெற் என்பது எமது இளைய சமூகத்திற்கு புதிராகவே இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த ரெலிகொம் இணையத்திற்கு கொடுத்த கட்டுப்பாடுகள் வசதிக்குறைவுகள் காரணமாக இணையம் பிரபல்யம் அடையவில்லை.

அதன்பின்னர் 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதானத்தின் விளைவாக யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி பாவனை உருவாகியது. நீர்வேலியில் மின்சாரம் பாதிப்பேருக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பாதிப்பேரில் 24 மணித்தியாலமும் மின்சாரம் கிடைக்கவில்லை.2003 இல் நீர்வேலி எங்கும் மின்சாரம் வந்திருந்தது. அனைவரது வீடுகளிலும் தொலைக்காட்சி வரத்தொடங்கியது. ஆன்றுமுதல் தெருவில் கூடிநிற்போர் மதவில் இருப்போர் மட்டுமல்ல கோவிலுக்கு வருகின்ற சனங்களும் குறைவடையத் தொடங்கியது. இக்காலத்தில் நீர்வேலியில் இன்ரநெற் வரவில்லை. 2005 இல் இன்ரநெற் படித்தவர்கள் மட்டும் அறிந்திருந்தனர். மீண்டும் 2006 இல் ஏற்பட்ட நாட்டுப்பிரச்சினையின் காரணத்தால் தொழில்நுட்பத் தொடர்பாடல் மறைந்து உயிருக்குப் பயம் தொற்றிக்கொண்டது. சண்டை முடிவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு நீர்வேலியில் உள்ள வசதிபடைத்தவர்கள் இன்ரநெற்றினை பயன்படுத்தத்தொடங்கினர். டொங்கிள் எனப்படும் வயர்லெஸ் கருவி மூலம் இணைய இணைப்பினை பெறமுடிந்தது. நீர்வேலியில் மிக குறுகிய மக்களே இணையம் பாவிக்கத்தொடங்கியிருந்தனர்.2006 ஆம் ஆண்டு பேஸ்புக் பிரபல்யம் அடைந்திருந்தாலும் அதனை நீர்வேலி மக்கள் 2010 இன் பின்னரே அமோகமாக பயன்படுத்த தொடங்கியிருந்தனர். தற்போது பேஸ்புக் இல்லாத மக்களை குறிப்பிட்டு கூறக்கூடிய அளவில் குறைவடைந்து விட்டது. டொங்கிள் ஒன்று நாலாயிரம் ரூபாவிற்கு மிகத்திறமையான ஒன்றினை வாங்க முடியும். ஆதனில் சிம்மினை சொருகி வயர்லெஸ் மூலம் இணைய இணைப்பினை இலகுவாக பெறமுடியும். இணைய இணைப்பினை நீர்வேலியின் எந்த மூலைமுடுக்கு எங்கும் கணனியில் கொழுவி பயன்படுத்த முடியும்.இதனால் அனைவரும் டொங்கிள் வைத்து இருக்கின்றனர். இதனை விட இலங்கை ரெலிகொம் யாழ்ப்பாணத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது.

ரெலிகொம் வயர்கள் நீர்வேலி வராதா என ஏங்கிக்கொண்டிருந்வர்களுக்கு நீர்வேலியின் அனைத்துப்பகுதிகளுக்கும் இணையத்துடன் தொலைபேசி தொலைக்காட்சி சனல்கள் என மூன்றையும் மிகக் குறைந்த கட்டணத்திலும் அதிக வேகத்திலும் வழங்கி வருகிறது. அனைவரது வீடுகளிலும் இன்ரநெற் சாதாரணமாகி விட்டது. நீர்வேலியில் வதியும் இளைஞர்கள் இணையத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்தி வெளிநாட்டவர்களுக்கும் வெளிஊரவர்களுக்கும் சவாலாக வளர்ந்து வருகின்றனர். நீர்வேலியில் இருந்தே வெளிநாடுகளுக்கும் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கும் ஒரு சில இளைஞர்கள் இணையம் சார்ந்த வேலைகளை செய்து கொடுத்துவருகின்றனர். இணையத்தளவடிவமைப்பு சீ சீ ரி வி கமரா பொருத்துதல் வலைப்பின்னல் ஏற்படுத்தல் மென்பொருட்களை உருவாக்குதல் நேரடி ஒளிபரப்புச்செய்தல் போன்ற பல இணையம் சார்ந்த வேலைகள் நீர்வேலியில் இருந்து நடைபெற்று வருகிறது.

சந்தையில் Smart phone களின் விலை குறைவும் வெளிநாட்டவர்களின் தொடர்பாடலாலும் நீர்வேலியில் உள்ள இளையவர்கள் கைகளில் நவீனரகமான Smart phone கள் உலாவருகின்றன. இதன் மூலம் Viper , Skype ,Whatsup , messenger ,oovoo,gmail என அனைவரது Smart phone களில் காணப்படுவதால் தொடர்பால் துல்லியமாகவும் நொடிப்பொழுதில் அமைந்துவிடுகின்றது. பக்கத்துவீட்டு கமலாக்கா வேலிக்கால கூப்பிட்டு விசயம் சொல்லுறத்துக்குள்ள வெளிநாட்டில உள்ளவை அறிந்து முதலே விசயத்தினை சொல்லி விடுகினம்.

இலங்கை ரெலிகொம் தனது சேவையை நீர்வேலிக்கும் விஸ்தரித்து வருகிறது. ADSL என்கின்ற mega line ஐ வழங்கிவருகிறது. இணையத்தின் வேகமானது 4 mbps ஆக காணப்பட்டது. தற்போது வேகமானது 16 mbps ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் 25 mbps வேகத்தினை விண்ணப்பித்து பெற முடியும். ஆதற்கான கட்டணம் சற்று அதிகமாகவே காணப்படும். யாழ்ப்பாணத்தில் fiber optical cable எனப்படும் ஒளியியல் நார்கள் மூலம் அதிவேக இன்ரர்நெற் FTTH வழங்கப்பட்டு வருகிறது. இதனுடைய வேகம் 100 mbps ஆகும். தற்போது கோப்பாய் சந்திவரை வந்துள்ள FTTH நீர்வேலிக்கு வருமா என இணையத்தில் தொழில் செய்கின்ற இளைஞர்கள் அதற்காக விண்ணப்பித்துவிட்டு ஆவலாக உள்ளனர். FTTH ம் நீர்வேலி வந்தால் இணையத்தின் வேகம் அதிகரித்ததன் விளைவாக நீர்வேலி இன்ரநெற் மயமாகும்.

(முடிந்தது)

0 Comments

Leave A Reply