இலண்டன் கலைமாலை நிகழ்வு சிறப்புற வாழ்த்துகிறோம்
நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரின் 11 வது ஆண்டு நிறைவு விழாவும் “கலை மாலை நிகழ்வும் ” 27.10.2013 இன்று இலண்டனில் நடைபெறுகிறது.இது எமக்கும் எமது மண்ணிற்கும் பெருமை தருகின்ற விடயமாகும்.கடந்த பதினொரு ஆண்டுகளாக எமது பாடசாலை மீதும் எமது நீர்வேலி மண் மீதும் தாங்கள் கொண்ட ஆழ்ந்த பற்றின் காரணமாக நீங்கள் செய்த செய்து கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கள் அளவிடமுடியாதவை.உங்களுடைய சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் எமது ஊர் சார்பாக தாயகத்தில்இருந்து வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.கலைமாலை நிகழ்வும் மலர்வெளியீடும் சிறக்கவேண்டும் என உளமாரவாழ்த்துகிறோம்.
– நீர்வேலி இணையம்
………………………………………………………………………………………………………………………………………
அத்தியார் இந்துக்கல்லூரி அதிபரின் உள்ளத்தில் இருந்து….
நீர்வையம்பதியில் அவதரித்த அத்தியார் அருணாசலம் என்ற வள்ளலாரின் முயற்சியால் அவதரித்த கல்வித்தாய் அத்தியார் இந்துக்கல்லூரி சிந்திய முத்துக்களான பழைய மாணவர்கள் இன்று உலகெங்கும் பரந்து பலசிறப்புக்களை பெற்று சிறந்துவிளங்குகின்றனர்.”பட்டங்கள் பெறுவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நிகழ்த்த வந்தோர்” என்ற கூற்றுக்கிணங்க எமது பழைய மாணவர்கள் கல்லூரிக்கு ஆற்றிவரும் பங்களிப்பு மிக முக்கியமானதொரு பதிவாகும்.இவர்களின் செயற்பாடு கண்டு அகம் குளிர்ந்து மகிழ்கிறேன்.கடந்தகாலங்களில் எமது பழைய மாணவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துச்செயற்பாடுகளும் வெற்றிபெறவேண்டும்.உங்களது செயற்பாடு கண்டு கல்லூரித்தாயவள் இறும்பூதெய்தவேண்டும் என வாழ்த்துகிறேன்.
நன்றி
செ.பத்மநாதன்
அதிபர்
அத்தியார் இந்துக்கல்லூரி
…………………………………………………………………………………………………………………………………………..
கலைகளின் வழியே உறவுகளை இணைக்கும் உயரிய நிகழ்ச்சி………………………
நான்குக்கு மேற்பட்ட பேராலயங்களுடன் பல சிற்றாலயங்கள் நிறைந்து சைவத்தமிழ் மணம் கமழும் ஊர். அத்தியார் இந்துக்கல்லூரி முதலாக இன்னும்நான்கு பாடசாலைகளைத் தன்னகம் கொண்ட அறிவு தேடுபவர்கள் நிறைந்த ஊர். வாழை,மா, பலா என்ற முக்கனிகள் நிறைந்து இன்னும் நெற்செய்கை தொட்டு புகையிலை,வெங்காயம் போன்ற சிறு பயிர்ச்செய்கைகளும் சிறப்பாக நடக்கும் ஊர்.சிறுகத்தி முதலாக சிற்பத் தேர் வரை செய்ய வல்ல கைத்தொழிலாளர்கள் நிறைந்தஊர்..
இப்படி எத்தனையோ சிறப்புக்கள் மிக்க நீர்வைக்கிராமத்தின் புகழை மேலும்
வளர்ப்பதற்கும் அதன் தனித்துவத்தைப் பேணுவதற்கும் புலம்பெயர்ந்த நீர்வை
மண்ணின் மைந்தர்களின் பணி மகத்தானது. போற்றுவதற்குரியது.
அதிலும் ஐக்கியஇராச்சியத்தவர்களின் ஐக்கிய(ஒற்றுமை) உணர்வும்,
செயலூக்கமும் அறிவு சார் எழுச்சியும் அவை சார் பணிகளும் அதி உன்னதமானவை.
வெறும் வாய்ப்பேச்சாகவோ, புகழ்ந்துரைகளாகவோ அல்லாமல் இவர்கள் சாதித்த
காரியங்கள் அதிகம்… அவற்றை ஒரு முறை நீர்வேலியைச் சுற்றிப் பார்ப்பவர்கள்
தெளிவாகக் கண்டு கொள்வர்.
இத்தகு அன்புள்ளங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் ஒன்றுகூடல்
நிகழ்வை இவ்வாண்டும் சிறப்பாக நடாத்துகிறார்கள். நீர்வை மண்ணை நேசிக்கும்
நலன்புரிச்சங்கத்தாரும், அத்தியார் இந்துவின் பௌதீக, கல்வி, விளையாட்டு
வளர்ச்சிக்கெல்லாம் கைகொடுக்கும் பழையமாணவர் சங்கத்தாரும் நடாத்துகிற இவ்
ஒன்று கூடல் நிகழ்வு நம் மண்ணுக்கு மகிமை தரும் என்பதில் ஐயமில்லை.
பனிபடர்ந்த நாடுகளில் வாழுகிற இவ்வுறவுகளின் இப்புனிதப்பணி மேன்மேலும்
சிறக்க வேண்டும். இத்தோடு இவர்கள் வெளியிடும் ‘கலைமாலை’ என்ற சஞ்சிகையின்
வெளியீடும் காலத்தின் தேவையாக இருக்கிறது.
கலைகள் வழியே உறவுகளை இணைத்து, உன்னதமான கைங்கரியங்களை செய்வதை நாம்
பாராட்டுகின்றோம். இம்முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் நாம்
வழிபடும் செல்லக்கதிர்காமத்துச் செவ்வேள் திருவடிகளைச் சிந்தித்து
வாழ்த்துகின்றோம்..
‘நீர்வைமணி’ பிரம்மஸ்ரீ. கு.தியாகராஜக்குருக்கள்
………………………………………………………………………………………………………………………………………….
………………………………………………………………………………………………………………………………………………
நீர்வேலி நலன்புரிச்சங்கம் – கனடாக்கிளையின் தலைவர் உள்ளத்தில் இருந்து……………………………….
நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரின் 11 வது ஆண்டு நிறைவு விழாவும் கலை மாலை நிகழ்வும் இன்று நடைபெறுகிறது. இதற்கு எமது நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா கிளை தனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரின் அர்பணிப்பான சேவையும் உதவிகளும் நீர்வேலியில் மேற்கொள்கின்ற கல்வி அபிவிருத்திகளும் என்றுமே மறக்க முடியாதவையாகும்.கடந்தகாலங்களைப்போல இனிவரும் காலங்களிலும் உங்கள் உன்னதசேவை தொடர எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
திரு.ப.ஜெகன்
தலைவர் நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா
………………………………………………………………………………………………………………………………………….
இலண்டன் மாநகரில் நடைபெறும் ”கலை மாலை ” நீர்வேலியின் புகழைப் பரப்பட்டும்………………………………
நீர்வளமும் நிலவளமும் சூழ்ந்த எமது நீர்வேலிக்கிராமத்தின் மைந்தர்கள் நாம்.எமது ஊரின் வளர்ச்சிக்காகவும் அதன் புகழைப்பேணுவதற்காகவும் உழைக்கின்ற அனைவரும் போற்றுதற்குரியவர்கள்.நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரின் பதினொராவது ஆண்டு நிறைவு விழாவும் கலை மாலை நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.இது எமக்கு பெரும் மகிழ்ச்சியினைத்தருகிறது.பதினொராவது ஆண்டில் கால்பதிக்கும் அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் சங்க ஐக்கிய இராச்சிய கிளை மேலும் மேலும் வளர்ச்சிபெற்று எதிர்காலத்தில் நீர்வேலியின் புகழையும் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் புகழையும் மேலோங்கச்செய்யவேண்டும் என்று நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம்- கனடாக்கிளை சார்பாக எமது உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
அன்புடன்
த.ஜெயக்குமார்
செயலாளர்
நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம்
கனடா.
……………………………………………………………………………………………………………………….
*END*
0 Comments