10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இளமை இதோ இதோ……

என்றும் போலவே இன்றும் தாத்தா தொலைகாட்சியை பார்த்தபடி எனக்கருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். என் மனதுக்குள் பழைய நினைவுகள், தாத்தா தான் என்னை முப்பதைந்து வருடங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு கொண்டுவந்தார், எப்படியெல்லாம் இளமையுடன், துடியாட்டமாய் இருந்த மனுஷன், என்னைப்போலவே அவரும் ஓய்வெடுத்ததில்லை, தாத்தாவின் மனைவி என்னை மதிப்பது கிடையாது ஆனால் தாத்தா மாத்திரம் எவ்வளவு அவசரம் என்றாலும், மனைவி பேசப்பேச, என்னை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்க்காமல் வெளியே போகமாட்டார், என்னுடைய அழகும், மதிப்பு அவருக்குத்தான் தெரியும். இப்படி நான் நினைவுகளை இரை மீட்டிக்கொண்டிருந்த பொழுது, தாத்தாவின் பத்து வயதுப் பேரன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான், வந்தவன் தாத்தா அருகில் சென்று ‘அப்பா, இந்தப் பழசு கனகாலமாய் இப்படித்தான் ஒரே இடத்திலை அசையாமல் இருக்குது, ஏன் இன்னும் இஞ்சை வச்சிருக்கிறியள்…..’ என்று சொல்லிமுடிக்கமுன் தாத்தாவின் முகமெல்லாம் மாறி அவருக்கு மூச்சு வாங்க தொடங்கியது.

இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த சிறுவனின் அப்பா பெரும் கோபத்துடன் ஓடிவந்து ‘தம்பி, தாத்தாவை பார்த்து இப்படியே கதைக்கிறது, தாத்தா உனக்கு……..’ என்று தொடர, இடையே மறித்து ‘ இல்லை அப்பா, அப்படியில்லை, நான் என்ன சொல்ல வந்தனான்……..’ என்ற சிறுவனைப் பார்த்து ‘ நீ சொன்னதெல்லாம் போதும், இனி ஒன்றும் சொல்ல வேண்டாம், தாத்தா நீ பிறந்தபோது உன்னை தூக்கிக் கூத்தாடி எனக்கு பேரன் பிறந்திட்டான் என்று எவ்வளவு சந்தோசபட்டவர் தெரியுமே? தனக்கு ஏலாத நேரத்திலும் எத்தினை தரம் உன்னோடை பந்தடிச்சு விளையாடியிருக்கிறார், நீ தள்ளாடி விளேக்கை தூக்கி தடவி விட்டிருக்கிறார், என்ரை பேரன் கெட்டிகாரன் என்று எல்லோரிடமும் பெருமையாய் பேசியிருக்கிறார், இப்ப அவருக்கு ஏலாத நேரத்திலை நீ இப்படியே கதைக்கிறது?’ என்று பொரிந்து தள்ளினார். இதையெல்லாம் பார்த்த தாத்தாவினதும், பேரனதும் கண்களில் நீர் முட்டிவிட்டது. எனக்கும் கவலைதான், ஆனால் நான் தான் மரம் போல் என்றும் எதற்கும் உணர்சிகளை வெளிபடுதியதோ அழுததோ கிடையாதே!

கண்ணை கசக்கியபடி, தேம்பிப்தேம்பி, பேரன் திரும்பவும் வாயை திறந்து பேசினான் ‘நான் தாத்தாவை சொல்லேல்லை’…… ‘என்ன? தாத்தாவை சொல்லேல்லை எண்டா அப்ப ஆரைப்பார்த்து சொன்னனி’ என்று அதட்டிய தகப்பனை பார்த்து ‘அதை, என்று என்னை நோக்கி தன் கையை நீட்டினான்’, என் இதயம் எப்போதும் போல் பட பட என்று அடித்துக்கொண்டேயிருந்தது ‘என் கதையும் முடியப் போகுது போலை’ என்று மனதுக்குள் நான் நினைக்க, அப்பா அந்தப் பையனை பார்த்து ‘என்ன, உந்த சுவர்க்கடிகாரத்தை பார்த்தே சொன்னனி, நானும் ஏதோ அப்பாவை பார்த்து சொனன்னியாகும் என்று நினைச்சன், உதை அப்பவே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே ‘ என்று கூறி முடித்த அப்பாவை பார்த்து அவன் தொடர்ந்தான் ‘நான் அப்பவே சொல்ல வந்தனான் ஆனா நீங்கள் தான் விடேல்லை, இப்பதானே iPhone, iPad, Apple-watch என்று எல்லாத்திலையும் நேரம் காட்டுது ஏன் இந்த பழைய கடிகாரம், இடத்தை வீணாக்கியபடி, அசிங்கமாய், இதை ஆர் இப்ப பாக்கினம்? ‘ தாத்தாவுக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதி.

ஆமாம், நான் ஒரு பழைய, காலத்தால் அழகிழந்த சுவர்க்கடிகாரம். என்னை எறிந்துவிட்டு புதிதாக இன்னொன்றை வாங்கி சுவரில் மாட்டி விடலாம், ஆனால் தாத்தாவை ?

தாத்தாவும் நானும் திரும்பவும் எமது ஓய்வை நோக்கிய ஓட்டத்தை தொடர்ந்தோம்……….இனிவரும் புதுமைகளுக்கு எப்படி முகம் கொடுப்பது என்ற கேள்வியுடன்……………….

அன்புடன்

கனகசபேசன் அகிலன்

0 Comments

Leave A Reply