10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

எமது ஊருக்கு சிறந்த சேவையாற்றிய ஒலியமைப்பாளர் நாதன்-அவர்களின் மறைவு குறித்த இரங்கல் செய்தி

456                                           ஒலித்தொழினுட்பத்தின் நாதன்
(அண்மையில்காலமாகிய சிறுப்பிட்டி நாதன் அண்ணர் பற்றிய அஞ்சலிக் குறிப்பு)
நாதன் அண்ணர் காலமாகிவிட்டார் என்ற செய்தியை தெரிவித்தபோது நாம் ஒரு கணம் துணுக்குற்றோம். காலை வேளைகளில் எனது அலுவலகப் பணிக்காகப் பயணிக்கும் போதெல்லாம் வீதியோரத்தில் பெரிதாகக் கையசைத்து வாய்நிறையப் புன்னகையை அள்ளி இறைக்கும் நாதன் அண்ணரா மறைந்தார்? என் மனம் இன்றைக்கும் ஏற்க மறுக்கின்றது.

நாதன் அண்ணரின் ஒலிவாங்கியில் பேசுபவர்களுக்கு மைக்மோனியா (பேசப்பிடித்தால் விடாத வியாதி) வந்துவிடுவதுவும் உண்டு. அவ்வளவு துல்லியமாக – பேசுபவருக்கு உற்சாகம் அளிப்பதாக அவருடைய ஒலிஅமைப்பு இருக்கும். இதனால் விடாக்கண்டர்களாகப் பேசத் தொடங்கிவிடுவோர் பலரைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இவர்களுக்கும் நிலைமையை எடுத்துக்கூறி நேரகாலத்துடன் நிகழ்வுகளை ஆற்றுப்படுத்தும் திறன் நாதன் அண்ணருக்கு வாய்த்திருந்தது. அப்படி மேடையேறுவோர் கூட அவர் மேல் ஒரு மரியாதையை வைக்குமளவிற்கு நாதன் அண்ணரின் ஆளுமை அமைந்திருந்தது.

நிகழ்ச்சிகள் என்றால் வெள்ளை சேட் – வெள்ளை வேட்டிதான். வாய்நிறைய வெற்றிலை. தாம்பூலம் தரிப்பது இலட்சுமியைக் குடியேற்றுவதற்கு ஒப்பானது என அடிக்கடி கூறிக்கொள்வார். தன்னுடைய ஒலிவாங்கியில் யார் யாரெல்லாம் பேசியுள்ளார்கள், பாடியுள்ளார்கள் எனக் கூறுவதிலும் அலாதி இன்பமடைவார். அவர்கள் தன்னை எப்படியெல்லாம் பாராட்டினார்கள் என்றும் கூறாமல் விடமாட்டார். இப்படித் தொழிலை நேசித்த ஒருவராக அவரைத் தரிசிக்க முடிந்தது.

குடும்பம் என்ற தளத்தில் நல்ல தந்தையாக – சமூகம் என்கின்ற தளத்தில் மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்தவராக வாழ்ந்த பெருமைக்குரியவர். வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் கிராமிய மட்டங்களில் பண்பாட்டு விழாக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபோது முதல்விழாவை சிறுப்பிட்டியில் அறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளையைக் கௌரவித்து முன்னெடுக்கலாம் என்ற முன்மொழிவை பேரவையின் உபதலைவர் என்ற நிலையில் நான் முன்மொழிந்தேன். உடனடியாகவே அன்று கிராம அலுவலராக இருந்த திரு. ஸ்ரீ அண்ணர் நடத்தும் பொறுப்பை தமதாக்கிக்கொண்டார். அந்த வேளையில் “உங்களுக்கு என்னப்பா நாதனும் ஊரோடுதானே இருக்கிறார்” எனச் சில குரல்கள் பேசிக் கொண்டதையும் கேட்டிருக்கிறேன். அப்படி நிலைமையறிந்து செயலாற்றும் பண்புடையவராக நாதன் அண்ணர் எம்மத்தியில் திகழ்ந்தார்.

இன்று நாதன் அண்ணரின் பிள்ளைகள் தந்தையை விஞ்சக் கூடிய அளவுக்கு ஒலித்தொழினுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் பண்புடைமை மிக்கவர்களாகவும் வளர்த்தெடுத்த பெருமை நாதன் அண்ணரையே சாரும். இன்னும் சில காலம் வாழ்ந்திருக்க மாட்டாரா என்ற ஏக்கம் நம்மெல்லோரது ஆதங்கமாக இருந்தாலும் ஊழின்; வலியை வெல்லவல்லார் யார்?

நாதன் அண்ணரின் நினைவுகள் எம் நெஞ்சங்களில் நீடு வாழும். நாதன் சவுண்ஸ் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் அவரும் கூட இருப்பார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.

திரு.லலீசன் அவர்கள்

விரிவுரையாளர்

0 Comments