10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ?………[:]

[:ta]

எனது அப்பாவுக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் அடிக்கடி மது அருந்துவார், மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லும்போது சிலநேரங்களில் எமது வீட்டை தாண்டித்தான் செல்வார், அப்படி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போகும் போது எமது வீட்டு கேற்றில் நின்று ‘சபேசன், சபேசன்’ என்று அப்பாவை உரக்க அழைப்பார். எங்களுக்கு அவர் குரல் தெரியும் எனவே நாங்களும் அப்பாவிற்கு பின்னால் அவரை பார்க்க ஓடுவோம். அப்படி ஒருநாள், அவர் மிகவும் குடித்துவிட்டு வந்தபோது ‘சின்னத்தம்பி(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஏனடா இப்படி அடிக்கடி குடிக்கிறாய், இப்படி குடிச்சா கெதியாய் இல்லோ சாகப்போறாய்” என்று அப்பா சொல்ல. “சபேசன், நீ சொல்லுறதைத்தான் நானும் செய்யிறன், கவிஞர் கண்ணதாசன் கூறியது போல், நானே எல்லா மதுவையும் குடித்து, என் மது ஒழிப்புத்திட்டத்தின் மூலம், மற்றவர்கள் குடிக்கவிடாமல் அவர்களை காப்பாற்றுகிறேன். நீ குடிப்பதில்லை, நீ சுயநலவாதி, நான் பொதுநலவாதி!” என்று பதில் சொன்னார். எங்களுக்கு இவர்கள் உரையாடலை கேட்க சிரிப்பாக இருந்தாலும், இவர்கள் பேசுவதிலிருந்து மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று மாத்திரம் விளங்கிக்கொண்டது.

இப்போதெல்லாம் சினிமா படங்கள் தொடங்கும் போது மது அருந்துதலும், புகைபிடித்தலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று விளம்பரம் செய்கிறார்கள். இப்படி காட்டுவது பலருக்கு, குறிப்பாக இதைப்பற்றி தெரியாத சிறுவர்களுக்கு மது அருந்துவதற்கும், புகைபிடித்தலுக்கும் கொடுக்கப்படும் அழைப்பாகவே அமைந்து விடுகிறது! ‘இதை பாரடா, ஏதோ செய்ய வேண்டாமென்று சொல்லுறாங்களாடா, அப்ப இதிலை ஏதோ விசயம் இருக்கு’ என்று ஒருதடவை அதை செய்து பார்த்து, அது பல தடவையாக மாறி, மீளமுடியாமல் அதற்கு அடிமையாகியவர்கள் பலர்! சிகரெட் பெட்டிகளில் ‘Smoking Kills’ என்று எழுதியிருப்பது தெரிந்திருந்தும் பலரும் அதை வாங்கி புகைக்கிறார்கள். எனவே மதுவாலும், புகைபிடித்தலாலும் வரும் விளைவுகளுக்கு இதைவிட விளம்பரங்களோ, மேலதிகமான கவனயீர்ப்போ தேவையில்லை என்று எண்ணவே தோன்றுகிறது. சொர்க்கம் மதுவிலே என்று நினைக்கும் போது கிண்ணங்கள் காலியாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

சினிமா விளம்பரங்கள் மதுவிற்கும், புகைபிடித்தலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு கொடுப்பதில்லை, சினிமா படங்களில் பலர் வரிசையாக நிலத்தில் இருந்து, வயிற்றை நிலத்திற்கு பாரம் கொடுத்துவிட்டு, சோற்றில் பாத்தி கட்டி, பலதடவை போட்டு வாங்குவதால் உடலிற்கு வரும் கோளாறுகளை நாங்கள் எமது கவனத்திற்கு எடுப்பதோ அல்லது அதைப்பற்றி ஆழ்ந்து யோசிப்பதோ குறைவு. அண்மையில் கிடைத்த புள்ளிவிபரங்களின் படி மதுவையும், புகைபிடித்தலையும் விட ஆரோக்கியமற்ற, அளவுக்கதிகமான உணவே இளமையில் பலர் இறப்பதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்கள். ஆரோக்கியமற்ற, அளவுக்கதிகமான உணவால் இருதய நோய்கள், பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் வருவது மட்டுமன்றி உடல் பருமனடைந்து, மூட்டுவலி, நாரிவலி , இடுப்புவலி, முள்ளந்தண்டு வளைதல் என வேறுபல நோய்களும் எம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. சிலருக்கு, வயிறு நிறைமாத கர்ப்பிணிகள் போல அதிகமாக வளர்ச்சியடைந்ததால், உடலினுள் இருக்கவேண்டிய புவியீர்ப்பு மையம் கூட உடலைவிட்டு வந்து, வெளியே நின்று தள்ளாடுகிறது (மன்னிக்கவும், எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது என் நோக்கமல்ல).

நான் சிறுவனாக இருக்கையில் எமது வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து உணவு உண்போம், முடிவில் சாப்பாடு மிஞ்சி விட்டால் அம்மா சொல்லுவார் ‘ஏன் இதை மிச்சம் விட்டனி, வீணாய் போகப்போது,  சாப்பாட்டை வீணாக்கினா கடவுளில்லே கோவிக்கப்போறார், அச்சாப்பிள்ளை, உதை சாப்பிட்டு முடிச்சுவிடு’ என்று. எனக்கோ வயிறு வெடித்துவிடும் போலிருக்கும் ஆனாலும் எப்படியோ ஒருமாதிரி உள்ளே தள்ளிவிடுவேன். இப்போது, பலவருடங்களுக்கு பிறகு, சமைத்து வைத்துவிட்டு, அதே அம்மா சொல்கிறார் ‘சோற்றை குறைத்து, நல்லா கறியிலை போட்டு சாப்பிடு, சோறு மிஞ்சினா பறவாயில்லை ‘ என்று. அதற்கு ‘அம்மா, இப்பமட்டும் கடவுள் என்ன கோவிக்காமல், ஆசீர்வதிக்கவா போகிறார்? தொட்டில் பழக்கத்தை எப்படி உடனே மாற்றுவது?’ என்று பதில் கூறுவேன். விதண்டாவாதமல்ல, உண்மை! அம்மாக்களுக்கு  பிள்ளைகள் கொழு கொழு என்று இருப்பதை பார்ப்பதில் கொள்ளை இன்பம், ஆனால் பிழையான உணவுப்பழக்கத்தை சிறுவயதில் ஏற்படுத்திவிட்டால் வளர்ந்தபின் அதை மாற்றுவது அவ்வளவு இலகுவல்ல! எனவே பசிக்கும்போது மட்டும் சாப்பிட்டால், எமதுபிள்ளைகள் மட்டுமல்ல நாங்களும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

எதுவும் அளவுக்கு அதிகமானால் அதனால் விளைவுதான், தெரியாமலா எமது முன்னோர் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறியிருக்கிறார்கள். பலருக்கு தெரிந்திருக்காது, அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதாலும் உடலுக்கு ஆபத்து ஏற்படும், அளவுக்கு அதிகமாக நீர் அருந்தும்போது  உப்பு அல்லது சோடியத்தின் (salt or sodium) செறிவு/அளவு இரத்தத்தில் குறைவதால் உடலில் விளைவுகள் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள், சிலர் இதனால் இறந்தும் இருக்கிறார்கள். நாங்கள் தேவையான அளவு தண்ணீரையே ஒவ்வொருநாளும் பருகுவதில்லை எனவே நீர் எம்முடலில் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று கூறி உப்பை அதிகமாக சாப்பிட்டாலும் உடலுக்கு பாதிப்புத்தான். எனவே, எதையும் அளவோடு வைத்திருப்போம்.

கையில் ஏந்தும் கிண்ணத்தால் மாத்திரம் எமது உடலுக்கு அபாயம் அல்ல, மார்புக்கு கீழ் இருக்கும், நாம் நாளாந்தம் தடவித்தடவி வளர்க்கும், பெரிய கிண்ணம் அதைவிடப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் !

“Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper!”

அன்புடன்

கனகசபேசன் அகிலன்

[:]

0 Comments

Leave A Reply