10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஒரு நாள் போதுமா ……………ஒரு அனுபவப்பகிர்வு

(இது சில வருடங்களுக்கு முன் அத்தியார் இந்துக்கல்லூரி ஒன்று கூடல் நிகழ்வுக்காக நான் எழுதியது, அந்த நாளை, அந்த நிகழ்வை மனதில் கொண்டே எழுதப்பட்டது, அடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு ஜூன் மாதம் இருபத்தைந்தாம் திகதி வருவதால் அதை திரும்பவும் இங்கே பதிவு செய்துளேன் )

1980 களில் நான் யாழ் இந்துக்கலூரியில் கல்வி கற்றுக்கொண்டிருன்தேன். பாடசாலை முடிந்தவுடன் நாம் யாழ் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு கால்நடையாக செல்ல வேண்டும். மிகுந்த களைப்புடன் அங்கு சென்றால் பஸ்சுக்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும். வரிசையில் நிற்கும் எமக்கு தெரிந்தவர்கள் கூட எம்மை தெரிந்தது போல் காட்டிக்கொள்ள மாட்டார்கள். வரிசையின் இடையே புகுந்தால் தான் நேரத்துக்கு வீடு செல்ல முடியும், ஆனால் அப்படிப் புகுந்தாலோ அங்கிருக்கும் ‘பெரியவர்களின்’ தூற்றுதல் அதிகமாக இருக்கும் “பிள்ளையளையே பெற்றிருக்கினம், இதுகள் ஆடுமாடுகள் அல்லோ” என்று எம் பெற்றோரையும் அவர்கள் வாழ்த்துவதுண்டு. எம் பெற்றோர் மீதுள்ள மரியாதை காரணமாக நாம் ஒழுங்காக வரிசையில் நிற்பதுண்டு. இப்படி களைத்து நிற்கும் எம்மை கனிவு படுத்துவதற்காக மணிக்குரல் விளம்பர சேவையினர் பல சினிமா பாடல்களை போடுவார்கள். அப்படி நான் கேட்ட பாடலில் ஒன்று தான்;

நான் பெற்ற கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவும் இல்லை ஆயிரம் இருந்து –
செல்வம் ஆயிரம் இருந்து
பெற்ற கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
கல்வி கற்ற கடன் குருவிடத்தில் சேர்ந்து கிடக்கு ………

இப்படி இந்தப்பாடல் தொடர்கிறது. பலர் கூறி தலையில் ஏறாத விடயம் சில நேரங்களில் சினிமா பாடல் மூலம் சில வினாடிகளில் ஏறிவிடுவதுண்டு.எமது பெற்றோரிடம் நாம் பட்ட கடன்களை ஒருபோதும் முழுமையாக அடைத்துவிட முடியாது, அது ஒரு அடையாக்கடன் !

அடுத்தபடியாக குருவிடம் பெற்ற கடன்களை பார்ப்போம்.

‘தாரமும், குருவும் தலைவிதிப்படி’ என்று கூறுவார்கள். ஒரு நாள் நண்பன் ஒருவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன், அவன் சொன்னான், தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனது கணித ஆசிரியர் வகுப்புக்கு வந்து நித்திரை கொள்வதை தவிர வேறெதுவும் செய்வதில்லையாம்.ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்திருந்தால் தன வாழ்க்கை எப்படியோ இருந்திருக்குமாம்.

ஒரு குரு நல்ல வழிகாட்டியாக இருந்தால் வாழ்க்கை நல்லபடியாக அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், அதேசமயத்தில் நல்ல ஆசிரியர்களை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கும் இன்றியமையாததாகும்.ஆசிரியர்களை கேலி செய்தல்,அவர்களை மதியாமல் ஒழுங்கின்றி நடத்தல் என்பன ஆசிரியர்களின் மனநிலையை மிகவும் பாதிக்ககூடிய விடயங்களாகும். இப்படியான மாணவர்களின் மத்தியில் தமது கடமைகளை செய்ய முடியாது ஆசிரியர்கள் மிக அல்லல் படுகிறார்கள்.

நாம் ஆசிரியர்களிடம் இருந்து எவ்வளவற்றை கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவற்றையும் பணிவுடன் கற்றுக்கொள்ள வேண்டும். தடியில்லா படிப்பறையை உருவாக்க உதவ வேண்டும்!

பெற்றோரும் ஆசிரியர்களும் எமக்கு கூறும் அறிவுரைகள் அந்த நேரத்தில் கசப்பாக இருந்தாலும் காலம் போகப்போக நெல்லிக்கனி போல் இனிமை தரும். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன்;

நான் கா.போ.தர உயர்தரப் பரீட்ச்சையை எழுதிவிட்டு நண்பர்களுடன் ஊர்சுற்றித் திரிந்த பொழுது, எனது தகப்பனார் என்னை என்றும் என் பெருமதிப்புக்குரிய ‘பயிற்றப்பட்ட’ ஆங்கில ஆசான் (Trained Teacher) திரு த.ந. பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்களிடம் அனுப்பி வைத்தார். ஆங்கில வகுப்புகள் அவரது வீட்டில் மாலை நேரங்களில் தான் அதிகமாக நடைபெறும். ஒரு நாள் ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் (William Shakespeare) ‘As you Like it’ ல் சில பகுதிகளை சொல்லித் தந்தார். நானோ என் மனதுக்குள் ‘ I don’t like it’ என்று மனதுக்குள் புறுபுறுத்துக்கொள்வேன். காரணம், எனது மனம் வீதியில் கிரிக்கெட்டும், கிளித்தட்டும் விளையாடும் என் நண்பர்களை தேடியது. ஆங்கிலக் கல்வியின் அருமை எனக்கு அப்போது அவ்வளவாகப் புரியவில்லை! வில்லியம் ஷேக்ஸ்பியரை நான் விசித்திரமான மனிதனாக நினைக்கவில்லை, என்னை விளையாட விடாமல் தடுக்கும் ஒரு வில்லங்கமான மனிதராகத்தான் நினைத்தேன்.

மாலை நேரத்தில் வகுப்புகள் நடப்பதாலும், அங்கு அப்போது மின்சாரத்தடை இருந்ததாலும், நேரத்துடன் இருட்டி விடவேண்டும் என்று நான் கடவுளை வேண்டுவதுண்டு. ஆனால் ஆசிரியரோ மெழுகுதிரியி கொழுத்திவைத்து பாடத்தை தொடருவார். இருட்டிவிட்டதே என்று எம்மை வீட்டுக்கு அனுப்பாமல் அவர் அன்று ஏற்றிவைத்த மெழுகுதிரிகள் எமது பிற்கால வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது. காலம் செல்லச் செல்லத்தான் அவர் கற்றுக்கொடுத்த பாடங்களினதும், அறிவுரைகளினதும் அருமை எமக்குப் புரிந்து கொண்டது.

இன்னுமொரு உதாரணம், நான் அப்போது அத்தியார் பள்ளிக்ககூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன், பாலா டீச்சர் தான் எங்களது ஆசிரியை, அவரை நீர்வேலியில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எங்களுக்கு அப்போது கொலர்ஷிப் (Scholarship) பரீட்ச்சை நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் அதைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் விளையாடித்திரிந்துகொண்டிருந்தோம், அந்த நேரத்தில் ரியூசன் வகுப்புகள் எல்லாம் இருக்கவில்லை, எமது நிலைமை பரிதாபகரமாக இருப்பதை அறிந்த பாலா டீச்சர், பாடசாலை முடிந்தவுடன் எம்மில் சிலருக்கு அருகில் இருந்த தனது வீட்டில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தினார், எங்களுக்கு இதில் ஒருவித விருப்பமும் கிடையாது, மாமரத்து அணில்களுடன் மாம்பழத்துக்கு போட்டி போடும் எங்களை மாமரத்துக்குகீழ் புத்தகங்களுடன் இருத்தினால் எப்படி இருக்கும்? எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்று திட்டத்தை தீட்டினோம், நாங்கள் ஐந்து பேருமாக சேர்ந்து ‘டீச்சர் நுளம்பு கடிக்குது’ என்று சொன்னோம். ‘எல்லோரும் வீட்டுக்குள்ளை வாங்கோ’ என்று பதில் வந்தது. விடுவோமா நாங்கள் ‘டீச்சர் இப்பவும் நுளம்பு கடிக்குது’ என்று சொன்னோம் , சிறிது விநாடிகளில் வேப்பம்கொட்டை புகை வந்து மூக்கில் நுழைந்து மூளையில் சொருகிக்கொண்டது , நாங்கள் விடுவதாக இல்லை ‘டீச்சர், இப்பவும் நுளம்புகள் சரியாக கடிக்குது’ என்று திரும்பவும் முறையிட்டோம். அவர் தனது மகளை கூப்பிட்டு சொன்னார் ‘பிள்ளை நுளம்புக்கு புகை பழகிப்போச்சு போலை எல்லா தட்டத்திலையும் எண்ணை பூசி இவங்களிட்டை குடு , அவங்கள் நுளம்பு வரேக்கை விசுக்கட்டும், அப்ப நுளம்ம்புகள் அதிலை ஒட்டீடும்’, அப்பாடா கணக்கில் இருந்து தப்ப எண்ணி நுளம்பிடம் பிணக்கில் மாட்டிக்கொண்டு விடோமே என்று மனமுடைந்தபடி திரும்பவும் மௌனமாய் கணக்கிலேயே புகுந்து விட்டோம். அன்று தட்டத்தில் ஒட்டிக் கொண்ட நுளம்புகளைவிட எம்முடன் ஒட்டிக்கொண்ட கணக்குகள் தான் அதிகம்!

எம்மை நல்ல மனிதர்களாக்க எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது ஆசிரியர்கள் செய்யும் சேவை அளப்பரியது. அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதி மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்கள் மூலமாக இவ்வுலகை செம்மைப்படுத்துவதிலேயே கழிந்து விடுகின்றது. நல்ல்லாசிரியர்களின் வழிநடத்தல் இல்லையெனில் இந்த உலகம் கெட்டுக்குட்டிச்சுவராகிவிடும்.

ஆசிரியர்களின் சேவைபற்றிப் பார்த்தோம், இனி கலைச்சேவைக்கு தன்னை அர்ப்பணித்து சில வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்த நீர்வைக் கவிஞன், கலாநிதி முருகையன் அவர்களைப்பற்றி சில வார்த்தைகள். இவரைப்பற்றி எழுதுவதற்கு எனக்கிருக்கும் ஒரே தகுதி நானும் அவர் ஊரவன் என்பது மாத்திரமே.

நான் சிறுவனாக இருக்கும் பொழுது முருகையன் அவர்கள் எனது வீட்டைத் தாண்டித்தான் காலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு செல்வது வழக்கம். அவரது உடை மிகவும் தூய்மையாகவும், நடை மிகவும் துரிதமாகவும் இருக்கும். மனம் எதையோ ஆழ்ந்து சிந்தித்தபடி இருக்கும். அவர் என்னைப்பார்த்து ஒருமுறையாவது சிரிக்க வேண்டும் என்பதற்காக அவர் வரும் வழியில் வேண்டுமென்றே நான் நிற்பதுண்டு, ஆனால் அவர் பார்வை எம்மேல் இருக்காது. யார் இவர்? என்று பெரியவர்களிடம் கேட்பேன். “இவர் தான் கவிஞர் முருகையன்” என்று பதில் கிடைக்கும்.

முருகையன் ஒரு தனித்துவமான கவிஞர் , ‘சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை’ என்று ஒரு பாடல் வரியுண்டு. இது போலவே முருகையன் அவர்களும் பெருமையை தேடிச்செல்லாத ஒரு கிராமத்துக்குயில், அதுவும் நீர்வேலிக் கிராமத்துக்குயில் என்பதை எண்ணி நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டும். இவரது கலைச்சேவை காலத்தால் அழியாது என்றும் ஒளிதரும்.

நாட்டுக்கும், ஊருக்கும் , எமது உறவுகளுக்கும் சேவை செய்வோரை கண்டறிந்து ஊக்குவிப்பது எமது கடமையாகும்.

நாளுக்கு நாள் வாழ்க்கையின் வேகத்தை அதிகரித்து, அந்த வேகத்தில் எம்மை நாமே இழந்து, நேரமின்மை என்ற கடிகாரத்தை இறுக்கிபிடித்துக்கொண்டு அலையும் மனிதர்களிடையே மக்கள் சேவைக்கென தம் பொன்னான நேரத்தை ஒதுக்கும் சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அந்த வகையில் Newneervely.com என்ற இணையத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நிர்வகித்துவரும் அதன் நிர்வாக குழுவினரை நாம் பாரட்டியாகவேண்டும்.

இப்போதெல்லாம் எனக்கு இலண்டனில் இருக்கிறோம் என்ற நினைவே இல்லை, ஏதோ கந்தசாமி கோவில் முந்தலில் இருந்து கச்சான் சாபிடுவது போன்ற உணர்வு. இதற்க்கு காரணம் நியூநீர்வேலி இணையம். உடனுக்குடன் சுடச்சுட செய்திகளையும், புகைப்படங்களையும், காணொளிகளையும் அள்ளித்தரும் வள்ளல்களாக இவர்கள் இருக்கிறார்கள் . இவர்கள் சேவை என்றும் நன்றே தொடர எமது வாழ்த்துக்கள்.

எமது கிராமத்துக்கும், மக்களுக்கும் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கு இன்றொரு நாள் போதுமா? நிச்சயமாக இல்லை!

நீங்கள் இன்றுபோல் என்றும் உங்களாலான உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கவேண்டும்.

மகாத்மா காந்தி கூறியது போல்,

“There is more to life
than increasing its speed”

எம் வாழ்கையின் வேகத்தில், மிக முக்கியமான தேவைகளையும், கடமைகளையும் மறந்து விடுகிறோம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல் விட்டு விடுகிறோம், வாருங்கள் …………………….

கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மளலைகள் ஆவோம் …………………

அன்புடன்

கனகசபேசன் அகிலன்

0 Comments

Leave A Reply