10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கண்களை விற்றுத்தான் ஓவியமா ?…. கிராமத்து ஞாபகங்கள்

என்றும் போல அன்றும் நீர்வேலிக் கிராமம் புத்துணர்வுடன் சிறிது சிறிதாக விழித்துக்கொண்டிருந்தது, கதிரவன் என் கட்டில் கால்களுடன் கதைபேசிவிட்டு போர்வைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த என் வலது காலை சூடேற்றிக்கொண்டிருந்தான். கண்களை மூடி கனவுகளை இரைமீட்டிக்கொண்டிருந்த என்னை அப்பாவின் அதிகாரக் குரல் சற்றே திடுக்கிட வைத்தது. “பள்ளிக்கூடம் போற நோக்கம் இல்லைப்போலை, இப்படிக் காலை வந்தபின்னும் காலை நீடிப்படுத்தால் கடைசியாய் தோட்டம் கொத்தத்தான் போக வேணும், ஒழுங்காய் படிச்சாத்தான் படுக்க கட்டிலாவது கிடைக்கும் .” “உழவன் இல்லையெனில் உலகம் இல்லை” என்று பதில் கூறத் தோன்றினாலும் அதை சொல்வதற்கு அப்போது துணிவு இல்லை. “நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள் ………” என்று முணுமுணுத்தபடி அப்பா அறையை விட்டு விலகிச் சென்றார்.

அப்போது நான் அத்தியார் பள்ளிகூடத்தில் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன், ஒரு நாள் மதியபோசன இடைவேளையின் போது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்த மைதானத்தின் ஒரு பகுதியை நெல் வயல்கள் அழகூட்டிக்கொண்டிருந்தன , ‘எம்மை வளர்த்த வயல்களில் தங்கலாமா இல்லை வியர்வை சிந்தி உழைத்த உழவர்களின் பானைகளில் சென்று பொங்கலாமா’ எனறு தம்முள் அளவளாவிக்கொண்டிருக்கும் நெற்கதிர்களின் அழகுக்கு நிகர் இல்லை. நாங்கள் அடிக்கடி அந்த வயலுக்ககுள் களவாக செல்வது வழக்கம், அப்படி ஒரு நாள் செல்லும் போது ஒரு பீங்கான் என் உள்ளம் காலை பதம் பார்த்து விட்டது, இரத்தம் ஒரு பக்கமும் , மனவருத்தம் மறுபக்கமுமாக இருந்த என்னை எனது அப்பப்பா வந்து மருத்துவரிடம் அழைத்துச்சென்றார்.

சுகந்தினி வைத்தியசாலை அப்போது பருத்தித்துறை வீதியில் அமர்ந்திருந்தது. பயத்துடன் சென்ற எனக்கு பக்குவமாய் கடுப்போட்ட மருத்துவரின் பெயர் திரு.விக்னேஸ்வரன், ஆனால் அவரை எல்லோரும் ‘சுகந்தினி டாக்டர் ‘ என்று தான் அழைப்பது வழக்கம், இன்றும் அப்படித்தான் அவரை நீர்வேலியில் அழைக்கிறார்கள். ஏழாலை என்ற ஊரில் இருந்து வந்து பல வருடங்களாக நீர்வேலி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். டாக்டர் என்ற புனிதமான சேவையை பெயரில் மாத்திரம் கொட்டையாக எழுதிவைத்திருக்கும் பலரிடையே இவர் ஒரு புதுமையான மருத்துவராகத் தென்பட்டார். அமைதி, அன்பு , பரிவாக நோயாளர்களிடம் பேசி நோயை அறிந்துகொள்ளும் தன்மை என பல நற்குணங்கள் இவரிடம் இருந்தன. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள், அறிவிருந்தும் இப்படியான நற்பண்புகள் இல்லா டாக்டர்களின் பட்டமும் குப்பபையில் போடத்தான் பொருத்தம். இவரை பார்த்தபின் நானும் ஒரு மருத்துவனாக வரவேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியது.

சில வருடங்களுக்குபின் நான் என் பெரியப்பாவின் பிள்ளைகளுடன் அவர்கள் வீட்டில் விளையட்டிக்கொண்டிருன்தேன், எமது பந்து கிணற்றுப் பக்கமாகசென்று தொலைந்து விட்டது. தேடிச் சென்ற எம் கண்ணில் பட்டது ஒரு தவளை தான். நாங்கள் அப்போது பள்ளிகூடத்தில் தவளையை பற்றி படித்துக்கொண்டிருந்ததால், எமக்கு தவளையின் உறுப்புகளை காட்டுவதற்க்காக பெரியப்பா அந்தத் தவளையை பிடித்து, மரப்பலகை ஒன்றில் அதை தலை கீழாக வைத்து, அதன் கால்களை ஊசிகளால் குத்தி அறுவை சிகிச்சை செய்தார்.

தவளையின் பல உறுப்புகளை எமக்கு காட்டிய பின் அதை திரும்பவும் தைத்துத் மண்ணில் தாவ விடுவரர் என்று எண்ணியிருந்த எனக்கு எம்மாற்றம் தான் மிச்சம். சும்மா இருந்த ஒரு தவளையை பிடித்து எம் அற்ப ஆசைக்கா இப்படி பலியாக்கி விட்டோமே என்ற ஆதங்கம் தான் என் மனதில் அங்கும் இங்குமாக தாவிக்க்கொண்டிருந்தது. அன்று விட்டுப்பிரிந்தது தவளையின் உயிர் மட்டுமல்ல மருத்துவனாக வேண்டும் என்ற என் எண்ணமும் கூடத்தான். மருத்துவத்துறையில் படித்துத் தேர்வடைவது ஒருபுறம் இருக்க, அதன் பின்பு இப்படியான இக்கட்டான சந்தர்பங்களில் என்னால் மனம் தளராது தொழில் புரிய முடியுமா என்ற கேள்விகள் என் மனதில் எழுந்தன.

இப்போதெல்லாம் பிள்ளைகள் தாயின் கருவில் இருக்கும் பொழுதே அவர்களின் பெறோர்களால் ‘டாக்டர் ‘ஆக்கப்பட்டு விடுகிறார்கள். சமூகத்தின் அழுத்தமும், சமூக அந்தஸ்தும் தான் இப்படியான முடிவுகளுக்கு காரணம். தமது பிள்ளைகளுக்கு இதற்குரிய தகுதியும் விருப்பமும் உண்டா என்பதை பெற்றோர் அறிந்து தெரிந்து கொள்வதில்லை. என்ரை பிள்ளை டாக்டர், என்ரை பிள்ளை என்ஜினியர் என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்கள், என்ரை பிள்ளை ஒரு தலை சிறந்த விவசாயியோ, வியாபாரியோ, அல்லது ஒரு சிறந்த கலைஞனோ என்று கூறுவதற்கு முன் வருவது குறைவு .எந்தத் தொழில் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல, அதை பிரியத்துடனும், மனச் சந்தோசத்துடனும் சரிவரச் செய்கிறோமா என்பது தான் முக்கியம்.

இலங்கையில் கடந்த வருடம் புலமை பரீட்சை முடிவுகள் உலக சிறுவர் தினத்தன்று வெளியானது, சிறுவர் தினத்தன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய பல சிறுவர்களின் நிலை பரீட்சை முடிவுகளால் கவலைக்கிடமானது. பல பிள்ளைகள் பெறோர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். முடிவுகளை சிறுவர் தினத்தன்று வெளியிட்டது அரசாங்கத்தின் தவறு, பிள்ளைகளின் சந்தோசம் இந்தப் பரீட்சை முடிவுகளால் பறிபோய்விட்டது என பல பெற்றோர் முறையிட்டார்கள்.

இதில் வினோதம் என்னவென்றால், பிள்ளைகளின் சந்தோசத்தை கெடுத்தது அரசாங்கம் அல்ல, முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாத பெற்றோர்கள் தான். எதிர்பார்ர்ப்பு என்ற பார மூட்டையை இளம் சிறுவர்களின் மேலே ஏற்றி வைத்து விட்டு, அதை அவர்கள் தூக்க முடியாமல் திண்டாடும் போது அவர்களை திட்டி, மனதை புண் படுத்துவதில் என்ன பயன்?

தமது பிள்ளைகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைபதிலேயும், அதற்காக முயற்சி செய்வதிலேயும் எந்தத் தவறும் கிடையாது ஆனால் அவர்களின் எதிபார்ப்புகள் பிள்ளைகளால் நிறைவு செய்யப்படாத போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு பிள்ளை பாஸ் பண்ணீ ற்றான் நீ ஏன் பரீட்சையிலை கோட்டை விட்டுட்டாய் என்று கூறி பிள்ளைகளின் மனதை புண்படுத்துவதில் யாருக்கு இலாபம்? பெற்றொரே தமது கதியென்ரறிருக்கும் அந்தச் சிறுவர்களின் தன்னம்பிக்கை சுக்குநூறாக உடைவதுதான் மிச்சம். இப்படியான சந்தர்ப்பங்களில் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு என்ன தெரியாது என்று ஏங்குவதை விட்டு விட்டு அந்தப் பிள்ளைக்கு ஆதரவாக இருந்து, பிள்ளைக்கு எதில் ஈடுபாடு உண்டு, எதை அந்தப் பிள்ளையால் இலகுவாகவும் திறமையாகவும் செய்ய முடியும் என்று கண்டறிய வேண்டும்.

இந்த உலகத்தில் ஜனனம் எடுக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் குறைந்தது ஒரு திறமையாவது உண்டு, அதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.

பரீட்சைகள் பிள்ளைகளின் எல்லா திறமைகளையும் சோதிப்பது கிடையாது. சில பாடங்களில் சித்தி அடையாதவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்ததாக அர்த்தம் இல்லை. ஒரு உதாரணம், காட்டில் ஒரு நாள் விலங்குகளுக்கு ஓட்டப்போட்டி வைத்தார்கள், குரங்கு, சிங்கம், கழுகு , தவளை ,குதிரை என்ன எல்லோரும் போட்டிக்கு வந்திருந்தன. போட்டியில் குதிரைக்கு முதலிடம். மற்ற மிருகங்களுக்கு மனஸ்தாபம். தவளையின் திறமை பாய்சலிலும் நீச்சலிலும், குரங்கின் திறமை மரத்தில் ஏறுவதிலும் தாவுவதிலும், கழுகின் திறமை உயர்ப்பறப்பதில், எனவே ஒருபோட்டியை வைத்து எல்லா மிருகங்களினதும் திறமையை எடைபோட முடியாது என்று சிங்கம் கர்ச்சித்தது.

எல்லோரும் திறமைசாலிகள், எமது திறமையை காட்டுவதற்கு நாம் தான் சரியான ஆடுகளத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்பிரட் ஐன்ஸ்டீன் (Alfred Einstein) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

“Everybody is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will spend its whole life believing that it is stupid.”

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு கணக்காளராக வந்திருந்தால் உலகம் ஒரு சிறந்த நடிகனை இழந்திருக்கும். அவரது நடிப்பில் களிப்படைந்தவர்களை கணக்கில் இட முடியாது. இவரது நடிப்பில் மயங்கி காஞ்சிப்பெரியவரே இவரை ஒருமுறை தன் இருப்பிடத்துக்கு அழைத்த்து, சிவாஜி கணேசனின் தாயாரிடம் ‘இவனை பெற்றதற்கு நீ பல புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்று புகழ்ந்தார்.

இன்னொரு தடவை சிவாஜி கணேசன் அவர்கள் சாயி பாபா அவர்களை சந்திப்பதற்கு புட்டபத்திக்கு சென்றிருந்தார். எல்லோருக்கும் சாயி பாபா அவர்கள் ஆசிகூறி விட்டு சிவாஜி கணேசனுக்கு மட்டும் எதுவும் கூறாமல் உள்ளே சென்று மண்டபத்தில் வெகு தூரத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். வெளியே கவலையில் அமர்ந்த்திருந்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு உள்ளே வரும்படி அழைப்பு வந்தது. தூரத்தில் இருந்த சாயி பாபாவை நோக்கி சிவாஜி கணேசன் நடந்து சென்றார்,அவர் அருகே சென்றபின் “ஏன் உன்னக்கு அப்போதே வெளியில் வைத்து ஆசி கூறவில்லை என்று தெரியுமா?” என்று சாயி பாபா கேட்டார் . விடை தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த நடிகர் திலகத்தை பார்த்து சாயி பாபா தொடர்ந்தார் “அப்போதே உனக்கு ஆசி கூறியிருந்தால் உனது வீரபாண்டிய கட்டப்பொம்மன் நடையை என்னால் ரசித்துப் பார்த்திருக்க முடியுமா? அதனால் தான் உன்னை உள்ளே அழைத்து வீறு நடை போடபோடவைத்தேன் ” என்றார் . அவரது நடிப்பு பாமர மக்களை மாத்திரம் மகிழவைக்கவில்லை, முற்றும் திறந்தோரையும் நெகிழவைத்தது. சிவாஜி கணேசனன் எச்சில் துப்பினால் அந்த எச்சில் கூட நடிக்கும் என்று அவரின் அபிமானிகள் பெருமையாக கூறுவார்கள்.

இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை கேட்பதற்கு காட்டு யானைகள் காட்டுக்கு அருகில் உள்ள ஒரு சினிமா கொட்டகைக்கு குறித்த நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்துபோனதாக கேள்வி.

தாமஸ் அல்வா எடிசன் (Thomas Alva Edison) அவர்களின் வாழ்கையை பாருங்கள், ஆறு வயதில் தன வீட்டில் உள்ளுள்ள கொட்டகைக்கு நெருப்பு வைத்து தகப்பனாரால் தண்டிக்கப்பட்டார். ஒளியை தேடி அவர் பயணம் அன்றே ஆரம்பமாகி விட்டது! சில வருடங்களின் பின் பாடசாலை சென்றபோது இவர் ஒரு முட்டாள் என ஆசிரியரால் அழைக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த அவர் தாயார் தானே எடிசனுக்கு கல்வி கற்பித்தார். பல ஆண்டுகள் களித்தும் தன் தாயார் தனக்கு கொடுத்த ஊக்கமும் தன்நம்பிக்கையும் தான் தன் முன்னேற்றத்துக்கு காரணம் என அன்புடன் நினைவு கூர்ந்தார்.

இப்படி பல துறைகளிலும் கொடிகட்டிப் பறந்த மனிதர்கள் பலரை உதாரணமாக கூறலாம். பிள்ளைகளுக்கு எதில் திறமையுண்டோ அந்த துறையில் அவர்களை மேம்படுத்த வேண்டும்.பெற்றோரின் விருப்பிற்காக பிள்ளைகளின் உணர்வுகளை கொன்று, அவர்களை எமது எதிர்பார்ப்புகளை தாங்கிச் செல்லும் உயிரில்லா ஓவியங்களாக உலாவ விடுவதில் என்ன பயன்?

மனிதர்களை கொன்று மருத்துவர்களை உருவாக்காதீர்கள், அந்த மன நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு நாம் மனிதர்களை தேட வேண்டியிருக்கும். கண்களான உங்கள் பிள்ளைகளை அன்புடன் அரவணைத்துக்கொள்ளுங்கள், அழகான ஓவியங்கள் தானாகவே வரையப்படும்.

அன்புடன் கனகசபேசன் அகிலன்

0 Comments

Leave A Reply