10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கும் குடும்ப உறவு “அப்பா”

மனதில் எம்மை சுமந்துக்கொண்டிருக்கும் தந்தையரைப்போற்றுவோம்!

தோளில் குடும்பத்தையும்- கையில் பிள்ளைகளையும்- இதயத்தில் சுகத்தையும், சோகத்தையும் சுமக்கும் நடமாடும் சுமைதாங்கி. தன் பசியை மறந்து குடும்பத்தின் பசி தீர்க்க உழைத்து மகிழ்பவர்! சுகத்தை கொண்டாட முடியாமலும், சோகத்தை சொல்ல முடியாமலும் நெஞ்சாங் கூட்டுக்குள் மறைத்து கொண்டு குடும்ப கூட்டை கட்டிக்காக்கும் அற்புதமானவர்.

வாழ்க்கையில் தந்தை என்ற பட்டத்தை பெற்ற பிறகு அவர் இழப்பது ஏராளம்.

ஆனால் பெறுவது………..?

‘நல்ல அப்பா’ என்று தன் பிள்ளைகள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்….. உலகையே வென்று விட்டதாக அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மெழுகுவர்த்தியாய் தன்னையே அழித்து குடும்பத்துக்காக வெளிச்சம் கொடுக்கும் தியாக திருஉருவங்கள் அப்பாக்கள்!

நண்பர்கள் தினம், காதலர்தினம், அன்னையர் தினம் என்று எத்தனையோ தினங்களை இந்த உலகம் கொண்டாடினாலும் தந்தையர் தினத்தை கொண்டாடினால்தான் அத்தனையும் முழுமை அடையும்.

தாய்க்கு கொடுக்கும் கவுரவமும், மரியாதையும் தந்தைக்கு கொடுக்கிறோமா என்றால் கொஞ்சம் குறைவுதான் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

1909-ம் ஆண்டு இதே ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகர தேவாலயத்திற்கு சோனோரா ஸ்மார்ட்டோட் என்பவர் செல்கிறார். அங்கு அன்னையர் தினத்தை புகழ்ந்து பிரார்த்தனை கூட்டம் நடக்கிறது.

அதை பார்த்ததும் சோனோராவுக்கு மனதில் ஒரு எண்ணம்.

தாயை போல் தந்தையும் போற்றுதலுக்குரியவர் தானே தந்தையர் தினத்தையும் கொண்டாடினால் என்ன? என்று தனக்குத்தானே கேள்வி கேட்டவர் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

அவரது யோசனைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கல்வின் கூலிட்ஜ் ஆதரவளித்தார்.

இதனால் தந்தையர் தினத்துக்கும் விடுமுறை விடப்பட்டு கொண்டாடப்பட்டது.

அன்று முதல் தந்தையர் தினமும் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடும் பழக்கம் பரவியது.

உலகில் 52 நாடுகளில் தந்தையர் தினம் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஹங்கேரி, மொரீசியஸ், பிரான்ஸ், கிரீஸ், கனடா, பல்கேரியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் நாளை தான் தந்தையர் தினம்.

வேறு பல நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

சொனோராவின் தந்தை தனிமனிதராக இருந்து 6 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியவர்.

அவரது தியாகத்தை அருகில் இருந்து பார்த்ததால் சொனோரா தந்தையை கௌரவிக்க இந்த தினத்தை கொண்டாடி இருக்கிறார்.

இப்போது ‘மதர்ஸ்டே’ வைப்போல் ‘பாதர்ஸ்டே’வும் கோலாகல கொண்டாட்டமாகி விட்டது.

வியாபார யுக்திகளும் உள்ளே புகுந்ததால் வாழ்த்து அட்டைகள் மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட எலக்ட்ரானிக் பரிசு பொருட்கள் ஏராளமாக விசே‌ஷமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த நாளில் பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து தந்தையர்களை மகிழ்வித்து பிள்ளைகளும் மகிழ்கிறார்கள்.

இந்த கலாச்சாரம் இன்னொரு நாட்டில் இருந்து பரவினாலும் தாய்க்கும் தந்தைக்கும் பெருமை சேர்ப்பது நம் நாட்டு கலாச்சாரம்.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தாயிற்சிறந்த கோவிலும் இல்லை என்று தான் சொன்னார்கள்.

தந்தையின் வழிகாட்டல்தான் வாழ்க்கைக்கு உற்ற துணையாக இருக்கும். காரணம் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சந்தித்து அனுபவப்பட்டவர் தந்தை.

அவரது அனுபவம்தான் பிள்ளைகளுக்கு பாடம். அதைதான் அவர் சொல்லி தருகிறார். அதுதான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப்பாடமாகிறது.

வளரும் தலைமுறைக்கு பாடமாக வாழ்ந்து வழிகாட்டும் ஒவ்வொரு தந்தையையும் போற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.

0 Comments

Leave A Reply