10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் இராமுப்பிள்ளை பழைய மாணவர்களே………

நான் அறிந்தவரையில் சில தினங்களிட்கு முன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பழைய மாணவர் சங்கத்தினரால் சேகரிக்கும் பணத்தின் மூலம் சுற்றுமதில் அமைக்க தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகளாக மண், கல், சல்லி என்பன பறிக்கப்பட்டு அத்திவாரம் இடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சீமெந்துக்கல் அரியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [ கடும் மழை காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது ]. பொருட்கள் சங்கத்தினரால் கொள்வனவு செய்து வழங்கப்படும். கட்டுவதற்கான கூலி அடி ஒன்றிற்கான அடிப்படையில் ஒப்பந்தத்தில் வழங்கப்படவுள்ளது. மதிலின் மொத்த நீளம் ஏறக்குறைய 500 அடிகளாகவும் மொத்த செலவு 6-7 லட்சம் வரையிலுமாக மதிப்பிடப்படுள்ளது [ செலவுத்தொகை அதிகரிக்கலாம் ]. தற்போது கிடைத்துள்ள தொகையைக்கொண்டு ஒரு பகுதியையாவது கட்டுவதே சங்கத்தினரின் நோக்கம்.

என்னை பொறுத்தவரையில் இம்மதில் அமைக்கும் பணியானது பாடசாலையின் பாதுகாப்பு , மாணவர்களின் பாதுகாப்பு, பாடசாலையின் அழகு, எமது ஊரின் அழகு, வகுப்பறையின் வெளியே வைத்து கற்பிக்கும்போது மாணவர்களின் கவனம் கலையாமலிருத்தல் ஆகிய காரணங்களால் முக்கியமாகிறது.

இதற்கான நிதி சேகரிப்பில் நல்ல உள்ளம் கொண்ட எம் பழைய மாணவர்கள் பெரிய தொகைகளை வைப்பிலிட்டுள்ளனர். [ நிட்சயமாக அவர்களின் ஏதோ ஒரு செலவீனத்தை தியாகம் செய்து ]. அவர்களிற்க்கு என் மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

ஆனால் இப்பங்களிப்பு சிறிய எண்ணிக்கையான வெளிநாடுகளிலுள்ள ஆண் பழைய மாணவர்களினாலேயே பெரும்பாலும் செய்யப்பட்டுள்ளது.

எனது கணிப்பில் பழைய மாணவர்களாக குறைந்தது 500 பேராவது [25 பேர் வீதம் 20 ஆண்டுகள்] உள்ளனர். பழைய மாணவர் சங்கம்
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் முகநூலில் மாத்திரம் தற்போது 235 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவ்வளவு தொகையானவர்கள் இருந்தும் சிறிதளவினரே பங்களிப்பு செய்துள்ளமைக்கு
1. இத்தகவல்கள் அனைவரையும் சென்றடையாமை
2. சிறிய தொகைகளை வைப்பிலிடுவது பொருத்தமானதா என்ற எண்ணம் / பழைய மாணவிகள் பங்களிப்பு செய்யலாமா என்ற எண்ணம்
3. வழங்கப்படும் தொகையானது சரியான முறையில் பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம்
என்பன காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.

எனவே இவ்விடயங்களை எம்மால் முடிந்த அளவிற்கு நாம் அனைவரும் எம்முடன் தொடர்பிலுள்ள பழைய மாணவர்களிற்கு [ஆண்\ பெண்] தெரியப்படுத்தி இதற்காக பங்களிப்பு செய்ய ஊக்கப்படுத்துவோம்.

சிறு துளி பெரு வெள்ளம். உதவும் தொகையை விட உதவும் மனமே மிக முக்கியம். சிறு தொகையாயினும் சங்கம் பெரு மனதுடன் எதிர்பார்த்துள்ளது. எனவே எம்மாலான தொகையை மனத்திருப்தியுடன் வழங்குவோம்.

இங்கு கிடைக்கும் நிதியானது பழைய மாணவர் சங்க நிர்வாக குழுவினர் , அதிபர் , பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாக குழுவினர் ஆகியவர்களிட்கிடையில் வெளிப்படையாகவே கையாளப்படும். அத்தோடு கணக்கறிக்கையும் வெளிவிடப்படும். உதவியவர்களிட்கான நன்றி தெரிவிற்கும் கடிதம் அவர்கள் தபால் அல்லது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமிடத்து அதிபரினால் அனுப்பிவைக்கப்படும். முகநூலில் வெளியிடப்படும். உச்ச மொத்த வெளிப்படைத்தன்மை பேணப்படும். எனவே நிதி கையாளலில் தவறு நடப்பதற்கான சந்தர்பமே இல்லை என்பதை என்னால் கூற முடியும்.

நாம் அனைவரும் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை பங்களிப்பு செய்வதின் மூலமே இம்மதிலை முழுமையாக கட்டி முடிக்க முடியும்.

என்னை பொறுத்தவரையில் தற்போது அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றிட்கிடையில் மிக சிறந்த உறவும் பாடசாலையை சிறப்பாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மிக உயர் நிலையில் உள்ளது. இவ்வாறான நல்ல நிலைமை இலகுவில் கிடைப்பதில்லை. எப்போதும் நிலைப்பதில்லை. எனவே இவ்வாய்ப்பை பயன்படுத்தி சிறு பங்களிப்பானாலும் எம்மாலானதை வழங்கி எம்மை வளர்த்து ஆளாக்கிய எம் பாடசாலை அன்னையையும் எம் ஊரையும் வளர்ச்சியடையச் செய்வோம்.

என் சொந்த கருத்துக்களான இவற்றின் மேலான உங்கள் விமர்சனங்களை பெரு விருப்புடன் ஏற்றுக்கொள்வேன்.

**** 15/11/2015 அன்று எமது அதிபர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் பாண்ட் வாத்திய கருவிகளை வழங்க கோரி வேண்டுகோள் கடிதம் ஒன்றை வழங்கி உள்ளார். அவரும் அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் இது பற்றி பரிசீலிக்க உறுதி செய்துள்ளார்.

Dr . இராசேந்திரம் விசாகரூபன் [ பழைய மாணவன்]

0 Comments

Leave A Reply