10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

காலியில் தேயிலை வளர்க்கும் தமிழரிடையே சமயப் பிரசாரம்……

G 17நீர்வை மகன் ஒருவரின் நேரடி அனுபவம்
                  –  ச.லலீசன் விரிவுரையாளர்.
காலி மாவட்டத்திலும் மலைகள் உண்டு என அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். அழகான கடற்கரை சீமெந்துத் தொழிற்சாலைடச்சுக் கோட்டை எனக் காலியை அடையாளப்படுத்தும் இடங்களைத்தான் இதுவரையில் நான்  அறிந்திருந்தேன். காலி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் ஆயிரத்தைந்நூறு மக்கள் வாழும் பிரதேசம் தலங்ககா. காலியில் இருந்து உடுகம செல்லும் பாதையில் 30 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கிறது இவ்வூர். கூகுள் வரைபடத்தில் கூட இப்படியொரு இடம் இருப்பதாகத் தகவல்களைக் காணமுடியாத துலக்கமில்லாத ஊர். நாக்கியாதெனிய என்ற அஞ்சல் அலுவலக பிரதேசத்துள் இவ்விடம் இருக்கிறது.

ஆங்கிலேயரால் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள்  இப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களின் கல்விக்காக க.பொ.த. சாதாரண தரம் வரை உள்ள ஒரு பாடசாலை மாத்திரம் காணப்படுகின்றது. அது தலங்ஹகா சரஸ்வதி வித்தியாலயம். அங்கு சில யாழ்ப்பாண ஆசிரியர்கள் அண்மையில் நியமனம் பெற்றுக் கல்வி கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

கல்வியில் பொருளாதாரத்தில் என எல்லாத்துறைகளிலும் வறுமையை எதிர்கொள்ளும் இவர்கள் மொழியையும் சமயத்தையும் மாற்றிக்கொண்டால் உய்வடையலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

“தலங்ஹகாவில் தீவிர மதமாற்றம் இடம்பெறுகின்றது. மற்றைய சமயம் சார்ந்த பிரசாரகர்கள் அடிக்கடி இங்கு வந்து பிரசாரம் செய்கிறார்கள். இந்து சமயம் சார்ந்து யாரும் வருவதில்லை. இந்தமுறை நவராத்திரியை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு எமது சமயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தித் தாருங்கள்.”

G 15

இது அந்தப் பிரதேசத்தில் வாழும் ஒரே ஒரு அரச உத்தியோகத்தரான ஆசிரியர் சுப்பையா இராஜேந்திரன் என்னிடம் விடுத்த வேண்டுகோள். அங்கு பணியாற்றும் யாழ்ப்பாண ஆசிரியை சங்கீதா ஊடாகக் கிடைத்த இந்த அழைப்பை ஏற்று தயங்கித் தயங்கித் தலங்ககா நோக்கிப் பயணமானேன்.

காலியில் இருந்து வளைந்து வளைந்து உயர்ந்து செல்லும் குறுகலான பாதை வழியே பயணம். வழிவழியே அழகிய இயற்கைக் காட்சிகள். இயற்கையின் அழகு பயணத்தின் கடினத்தை மறைத்தது. சத்யா என்ற அன்பர் என்னைத் தனது மோட்டார் சைக்கிளில் ஒரு மணி நேரத்தில் தலங்ஹகாவிற்கு அழைத்துச் சென்றார்.

எனது வருகைக்காகக் காத்து நின்றவர்கள் போல் வாய்நிறையப் புன்னகையுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ‘சுவாமி’ என்ற எதிர்பார்ப்போடு வரவேற்றனர். (சத்தியமாக எனக்கு அப்படியொரு நினைப்பும் இல்லை) முதலில் தலங்ககாப் பாடசாலை பற்றிக் கூற வேண்டும். தலங்ஹக சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் 18 ஆசிரியர்களும் 311 மாணவர்களும் உள்ளனர். அதிபர் திரு. ஏ.ஜே.எம். யசூர் பாடசாலை மீது பற்றுக்கொண்டவா்.

அதைவிடத் தனது சமயத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். இந்து சமய நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில் அவரிடம் நாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை.

G 16

தலங்ககா பாடசாலையில் கற்பிக்கும் 18 பேருள் இராஜேந்திரன் ஒருவரே ஊரவர். ஏனையவர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் அல்லது காலியின் வேறு இடங்களைச் சேர்ந்தோராவர். இவர்களுள் எட்டுப் பேர் வரையிலேயே இந்துக்கள். வசதிகளற்ற நிலையிலேயே அங்கு தங்கியுள்ளனர். பெண்கள் ஒரு வகுப்பறையிலும் ஆண்கள் இன்னோர் வகுப்பறையிலும் தங்கியுள்ளனர். விரைவில் விடுதி அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினா்.

இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். தமிழர்கள். ஆயினும் இங்கு இப்பாடசாலையை விட்டால் கல்வி பெறுவதற்கு சிங்களப் பாடசாலைகளுக்குத்தான் போக வேண்டும். உயர் கல்வி ஆயின் காலி நகருக்கு வர வேண்டும். அங்கு தமிழ் மொழியில் கற்பதாயின் முஸ்லிம் பாடசாலைகளில் தான் கற்க வேண்டும். அல்லது தெனியாய போன்ற இடங்களுக்குப் போய் கத்தோலிக்கப் பாடசாலைகளில் கற்க வேண்டும். இதனால் கல்விக்காக மதம் மாறுகின்றவர்களும் இருக்கின்றனர். இதைவிடப் பொருளாதாரத்தில் வறுமையுற்றவர்கள் ஆதலாலும் கல்வியில் போதிய அக்கறையை வெளிப்படுத்தாதவர்கள் என்பதாலும் இலகுவில் மற்றையவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கும்  அவர்கள் வழங்கும் அன்பளிப்புக்களுக்கும் மயங்கி இந்து சமயத்தை விட்டு வேறு வசதியான சமயம் ஒன்றிற்குப் போய் விடுகின்றனா்.

G 07

இந்தப் பிரதேசத்தின் வரலாற்றில் இந்த ஆண்டிற்தான் ஒரு மாணவன் பல்கலைக்கழகத்திற்கும் ஒரு மாணவி கல்விக் கல்லூரிக்கும் அனுமதி பெற்றுச் சென்றுள்ளனர். மாணவன் தனது உயர்கல்வியை நீண்ட தூரத்தில் உள்ள கொட்டகலையில் பெற்றுள்ளார். மாணவி மதமாற்றத்திற்கு உட்பட்டு நீண்ட தூரத்தில் உள்ள தெனியாய சென்று உயர்கல்வியைப் பெற்றுள்ளார்.

“எங்களைத் தேடி முதன்முதலாக இந்துசமயம் சார்ந்து செய்தி சொல்ல வந்தவர் நீங்கள்தான் ஐயா” ஆசிரியர் இராஜேந்திரன் என்னைக் கண்ட மகிழ்வில் தனது மனக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.

தலங்கஹா உள்ளிட்ட பெருந்தோட்டப் பிரதேசங்கள் யாவற்றையும் வட்டவல தேயிலைத் தோட்ட நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. நாங்கள் விரும்பிப் பருகும் வட்டவல மற்றும் செஸ்ரா தேயிலைகள் இங்குதான் பயிரிடப்படுகின்றன. அதைவிட பைன் மரச் செய்கையும் பெருமளவில் இடம்பெறுகின்றது. இளைஞர்கள் பைன்மரத் தோட்ட வேலைகளிலேயே பெருமளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்குத்தான் மற்றைய வேலைகளோடு ஓப்பிடும்போது கூடியளவு ஊதியம் கிடைக்கின்றது. அவர்கள் பெறுவது என்னவோ குறைந்த ஊதியம்தான். ஆனால் ஒரு பவுசர் பைன் எண்ணெய் 35 இலட்சம் பெறுமதியுடையதாம். இவை எல்லாம் முதலாளி வர்க்கத்திற்கே சேர்கின்றன.

G 22

தலங்ககாவில் இடம்பெற்ற விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் எனப் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் எனது உரை பிரதான நிகழ்வாக அமைந்தது. நிகழ்வில் ஆசியுரை நல்கவெனக் காலியில் இருந்து குருக்கள் ஒருவரை அழைத்து வந்திருந்தனர். தான் இந்தியாவில் இருந்து

சமஸ்கிருத மொழியிலேயே கல்வி கற்றதால் பெருமளவு சமஸ்கிருதமும் சிறிதளவு தமிழும் கலந்துதான் பேசுவேன் எனத் தனது பேச்சை ஆரம்பித்தார். அதனை ஒலிப்பதிவு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள சமஸ்கிருதம் நன்கு அறிந்தவர்களுக்குப் போட்டுக்காட்டினேன். அவர்கள் நகைத்தபடி இதுதான் அங்குள்ள நிலையோ ஐயோ.. என்றனர். ஏதோ வாய்க்கு வந்தபடி விளங்காத வார்த்தைகளைச் சொல்லித் தன் கடமையை முடித்தார்; அவர். தொடர்ந்து என்னுடைய உரை. எனது யாழ் மண்மணம் வீசும் தமிழை அவர்கள் புரிந்து கொள்வார்களோ என்ற அச்சம் என்னுள் இருந்தாலும் எனது கலாசாலையில் மலையகப் பிள்ளைகளுக்குக் கற்பித்த அனுபவம் அன்று எனக்குக் கைகொடுத்தது. நித்திரை என்பதைத் தூக்கம் என்றும் இருங்கள் என்பதை உட்காருங்கள் என்றும் மனைவி என்பதைச் சம்சாரம் என்றும் சொல்வது பொருத்தம். இப்படி ஏராளமான வார்த்தைகள் உள்ளன. இருப்பினும் அங்குள்ள யாழ்ப்பாண ஆசிரியர்களின் பேச்சு மொழியைப் பிள்ளைகள் கேட்டிருந்தமையால் என் பேச்சைக் கேட்பதில் அவர்கள் சிரமப்படவில்லை. ஆன்மீகத்தோடு கல்வியின் சிறப்பை வலியுறுத்துவதாகவே எனது பேச்சை அமைத்துக் கொண்டேன்.

G 21

தலங்ககாப் பிரதேச மதமாற்றத்திற்கு இன்னொரு பிரதான காரணத்தையும் குறிப்பிட வேண்டும். பிளவுற்ற குடும்ப நிலைமையே அது. தாய் வெளிநாட்டுப் பணிப்பெண்ணாக வேலை தேடிச் சென்று விட… தந்தை பிள்ளைகளைக் கைவிட்டு நிற்க… – ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிள்ளைகளை பிறசமய நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. அவர்களை ஆதரித்துக் கல்வி கொடுக்கின்றன. இது விடயத்தில் இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களின் பார்வை தலங்ககா மீது இன்னும் விழவில்லை. அறநெறிப் பாடசாலையில் ஆசிரியப் பணியாற்றியவரையும் மதமாற்றப் பிசாசு விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தலங்ககாப் பாடசாலையின் விழாவை மாலையில் முடித்துக்கொண்டு பொழுது சாயும் நேரம் என்னை உடுகம ஓமந்தல முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். காணும் இடம் எங்கணும் இயற்கையை இரசித்தபடி இருபது நிமிட மோட்டார் சயிக்கிள் பயணத்தில் ஓமந்தலவை அடைந்தேன். அரச சார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்யும் திரு. மாதவன் என்னை வரவேற்றார். அந்தக் களத்தைப் பற்றி விளக்கினார்.

G 12

உடகம நகருக்கு அண்மையில் உள்ள கிராமமதான்; ஓமந்தல. இங்கு சில நூற்றுக்கணக்கிலேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமது பிரதான பேச்சு மொழியாகத் தற்போது சிங்களத்தையே கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் தமிழ்ப் பாடசாலைகள் எதுவும் இல்லாமையால் இவர்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் தமது பிரதான குல தெய்வமாக முத்துமாரியையே கொள்கின்றனர். பார்ப்பவரை அச்சங்கொள்ளச் செய்யும் வகையில் சிமெந்தினால் ஆன உருவச் சிலைகளே கோவில் கருவறைகளில் உள்ளன. கருவறையை அடுத்து மக்கள் நின்று வழிபடும் இடம். ஏறத்தாழச் சிறிய வீட்டைப் போலத் தமது இயல்புக்கேற்பக் கோவில்களை அமைத்துள்ளனர். கோவில்களில் மந்திரமில்லாத பக்தி பூர்வமான வழிபாடு. பூசாரி என்று அவர்களால் அழைக்கப்படும் இளைஞர்களே பக்தி பூர்வமாகப் பூசை செய்கின்றனர்.

G 18

இந்து சமயம் என்றால் என்ன? ஏன் பல தெய்வங்களை நாம் வழிபடுகின்றோம். எமது சமயத்தின் தொன்மைகள் பெருமைகள் எவை என எனது ஒரு மணி நேர உரை அங்கு இடம்பெற்றது. மாதவன் அதனைச் சிங்கள மொழியில் அவர்களுக்குப் புரிய வைத்தார். அந்தப் பிரதேசத்தில் தமிழும் சைவமும் வாழ வேண்டும் என்ற தீவிரம் மாதவனிடம் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

தொடர்ந்து நாக்கியாதெனியவில் உள்ள படகெடிய முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் ஆசிரியர் இராஜேந்திரன். கடும் இருட்டிலும் எனது வருகைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். அவர்களுள் பலர் காலையில் பாடசாலையில் என் உரையைக் கேட்டவர்கள். அங்கும் இந்து சமயம் பற்றிய சிறப்புக்களை எளிமைப்படுத்தி விளக்கினேன். அவர்களது சந்தேகங்களுக்கும் பதிலிறுத்தேன். இந்து சுயம் சேவா சங்கத்தினர் தங்கள் மத்தியில் வந்ததாகத் தெரிவித்தனர். இலங்கைக்கான பிரதிநிதி திரு இராதாகிருஷ்ணன் ஜி இக்கோவிலுக்கு வந்துள்ளார் எனவும் பெருமையாகக் கூறினர். மகிழ்ச்சியாக இருந்தது. திரு. இராதாகிருஷ்ணன் ஜி தீவிர இந்துப் பற்றாளர். மதமாற்றத்திற்கு எதிராகக் கடுமையாக உழைப்பவர்.

G 13

நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தவூர் மக்கள் மிகுந்த மரியாதையுடன் விடை தந்தனர். சிறிய குறுகலான பாதைகளில் தனது மோட்டார் சைக்கிளின் வெளிச்சத்தில் இராஜேந்திரன் என்னை தலங்ககா கீழ்ப்பிரிவில் உள்ள விவேகானந்தர் அறநெறிப் பாடசாலையின் விழாவிற்கு அழைத்துச் சென்றார்.

விசேடமாகப் பந்தர் அமைத்துச் சமய எழுச்சி விழாவாகக் கலை நிகழ்வுகளை ஆற்றுகை செய்துகொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்துப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு பழக்கிய நடனங்கள் மற்றும் பாடல்கள் அழகாக மேடையேற்றப்பட்டன. தலங்ககா பாடசாலைக்குச் சமீபமாகவே இந்தஇடம் அமைந்துள்ளது. இதனால் பாடசாலைகயில் தங்கியிருந்த ஆசிரியர்களும் அங்கு வந்திருந்தனர்.

தலங்ககா அறநெறிப்பாடசாலை விழாவில் உரையாற்றி அவர்கள் விழாவையொட்டி நடத்திய போட்டிகளுக்குப் பரிசில் வழங்கி அங்கிருந்து விடை பெற்றேன்.

G 05

நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. நின்று சென்றால் என்ன என என்னை வினயமாகக் கேட்டனர். இருப்பினும் என் நிலையைப் புரிந்து கொண்டனர். திரு இராஜேந்திரன் தனது உடற்சோர்வையும் பாராது யாருமற்ற தெருவில் என்னைக் காலி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தார். வழியில் இடையிடையே இருந்த காடுகளின் இருள் என்னை மிரட்டியது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை துணிவைத் தந்தது. இராஜேந்திரன் என்னைக் கொழும்பு பஸ் ஒன்றிலும் ஏற்றி விட்டார்.

“இந்து சமயம் சார்ந்து எத்தனையோ பேரை அழைத்துப்பார்த்தேன் சார். யாரும் வரல்ல.. நீங்க வந்து எங்களுக்குக் கைகொடுத்தீங்க.. என்னிக்குமெ மறக்க மாட்டோம் சார்..” கண்களில் நீர் கனக்க விடை தந்தார்.

G 10

தலங்ககா மக்களைச் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். கூழுக்கு உப்பில்லையே என்று அங்கு அவர்கள். பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்று இங்கு நாங்கள்.

G 04G 03G 02G 01G 11……………………………………………………………………………………………

2 Comments

 1. Well done! Keep up the good work.

 2. The fact that Mr Laleesan accepted the invitation to travel all the way to Thalanga is highly commendable. He, not only made the daunting trip but also improved the awareness of many others by writing about the people who live, perhaps suffer, in this part of Srilanka. I was touched by the following lines;

  கூழுக்கு உப்பில்லையே என்று அங்கு அவர்கள். பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்று இங்கு நாங்கள்

  The words ‘Necessity’ and ‘Luxury’ come to my mind. This is what the famous actor Leonardo DiCaprio had to say after his stay in Africa, while filming Blood Diamond;

  “What I was left with after spending time with Africa, and this is not at all to sound trivial, but it really was the power of the human spirit there. The fact that these people have been through so much. They have been in a civil war for 30 years, the poverty rate, but literally, people were still dancing in the streets. The joy, the energy, the happiness they exuded to everyone was unbelievable. It made me come back home and sort of not want to listen to anyone’s problems. I don’t want to hear what we as Americans have to deal with. When you are immersed in a place like that for six months and you see the extreme levels of what people have to deal with there, yet they are able to keep a positive attitude. You just don’t want to hear people’s problems out here anymore.””

  I can only assume that Mr Laleesan had similar experience. We are living in a world where the weak die out and the strong survive. In search of fame and fortune, quite often, we pay no attention to people who are badly affected as a result of our mindless actions.

  I do not want to elaborate too much on the religious issues highlighted in the article however, in my opinion there should be only one religion in this world;

  ‘Religion of Love and Kindness.’

  .

Leave A Reply