10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கொடுத்ததெல்லாம் கொடுத்தான்………[:]

[:ta]

மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம் நானும் பார்க்காத ஆளில்லை …….சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், ஸ்ரீபிரியா, தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்த பில்லா திரைப்படம் இன்று இரவு வாசிகசாலை முந்தலில் காட்டப்படும். சிறியோர் பெரியோர் அனைவரும் காணத்தவறாதீர்கள்…….மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை……..” இப்படி ஒலி பெருக்கியபடி, நீர்வேலி கந்தசாமி கோவிலின் மேற்கு வீதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த, எம்மை தாண்டி ஒரு கார் சென்றது. உடனே விளையாட்டை நிறுத்திவிட்டு எல்லோரும் அதன் பின் சிறிது தூரம் ஓடினோம். ஒருவன் கேட்டான் ” டேய் வடிவா கேட்டனீங்களே, படத்திலை சண்டைஇருக்கெண்டு சொன்னவங்களே? யாராம் சண்டைப்பயிற்சி?”. மற்றவன் “ரஜனீன்ரை படம் எண்டா கட்டாயம் சண்டை இருக்குமடா, இதெல்லாம் ஒரு கேள்வியே?”. சிறிது நேரம் எமக்கிடையே இப்படி விவாதித்து விட்டு “வாங்கோடா வெள்ளண வீட்டை போவம்” என்று அரைகுறையில் விளையாட்டை நிறுத்தி எல்லோரும் எமது வீடுகளுக்கு சென்றோம்.

நானும், தம்பியும் வீட்டுக்கு சென்றவுடன் உடனே முகம் கழுவி, படிக்கும் மேசையில் அமர்ந்து விட்டோம். அம்மாவுக்கு ஆச்சரியம் “என்னடா அஞ்சு மணிக்கே இண்டைக்கு படிக்கத்தொடங்கீற்றீங்கள்? வழமையா ஆறுமணிக்கே ஆள்விட்டுத்தான் கூப்பிடவேணும், என்ன பெடியள் ஒருவரும் இண்டைக்கு விளையாட வரேல்லையே ?” என்று கேள்விகள் தொடுத்தார். நாங்கள் குனிஞ்ச தலை நிமிராமல் “இல்லையம்மா இண்டைக்கு ரஜனீன்றை பில்லா காட்டுறாங்கள் அது தான்…….” என்று இழுக்க. “அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? ” என்று அம்மா கேட்க. ” நீங்கள் ஓம் என்று சொன்னா எங்களுக்கும் போக விருப்பம்” என்று நாங்கள் சொல்ல. “அதுக்குத்தான் இந்த நல்லபிள்ளை நடிப்புப் போலை, பில்லாவும், குல்லாவும்…..அப்பாவும் கொழும்பிலை, உங்களை யார் நடுச்சாமத்திலை வந்து திரும்ப கூட்டிக்கொண்டு வாறது ? உது சரிவராது” என்று அம்மா மறுக்க. “அம்மா, நாளைக்கு பள்ளிக்கூடத்திலை பில்லாவை பற்றித்தான் எல்லா பெடியளும் கதைப்பாங்கள், நாங்கள் வாயைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும், எங்களையும் விடுங்கோ, நாங்கள் தனிய திரும்பி வருவம்” என்று அழுது மண்டாடி அனுமதி பெற்று படத்துக்கு போவதற்கு முன் வீட்டிலேயே ஒரு படம் நடந்து முடிந்து விடும் !
இப்படியெல்லாம் படாதபாடுபட்டு படத்துக்கு போக அங்கு சனக்கூட்டமாக இருந்தது. TV யின் அளவு இருபது இஞ்சி கூட இருக்காது(கீழுள்ள படத்தில் உள்ளது போல்), பிள்ளையாரை சுற்றி கும்பிடுவது போல அதை பலதடவை சுற்றி பார்த்து, அதை போர்த்தியிருக்கும் போர்வையை சிறிதாக விலக்கி அது உண்மையில் TV தான் என்று உறுதி செய்தபின், சரி, படம் பார்க்க நல்ல இடமொன்று பிடிப்போம் என்று அருகில் உள்ள மதில் மேல் ஏற, எமக்கு ஆறேழு வருடங்களுக்கு முதல் பிறந்த வாணரங்கள் “முளைச்சு மூன்று இலை விடேல்லை இதுக்கை மதில்லை இருந்து படம் பார்க்க வந்திட்டாங்கள்” என்று எங்களை தாறு மாறாக பேச, மதிலில் இருந்து குதித்து, “சரி வாங்கோடா, வேறை இடம் பார்ப்பம்” என்று அங்கும் இங்குமாக இருட்டில் இடம் தேடி அலையும் போது, சிலர் “பெடியள், மறைக்காமல் முன்னாலை போய் இருங்கோடா ” என்று கடிந்துதள்ள. மூன்றடிக்கு கொஞ்சம் கூடத்தான் எங்களின் உயரம் இருந்தாலும் “முன்னாலை இருந்தா மரியாதை இல்லையடா” என்று சொல்லி, பின்னாலை போய், முப்பது, நாற்பது மீட்டர் தள்ளி இருந்து பெரியவர்களின் தலைகளுக்கும், தோள்களுக்கும் இடையால் எம்பியெம்பி படம் பார்த்த சுகமோ தனி. குத்தும் கற்களுடன் நடக்கும் போராட்டமும், எறும்புகள் தரும் அன்புத் தொல்லையும்கூட இன்பம் தான்!
இது நடந்ததற்கு சில வருடங்களுக்கு முன்பு, இதே வாசிகசாலை முந்தலில் பெரிய திரையில் படம் காட்டுவார்கள், ஆனால் அது கருப்பு -வெள்ளை படம், ஒலி ஏதும் இருக்காது, நாங்கள் அதை ‘ஊமைப்படம்’ என்று சொல்லுவோம், இதைப் பார்க்கவும் கூட்டம்தான் ! எனக்கு அந்த வயதில் அதில் காட்டும் ஏதும் விளங்கியதில்லை ஆனால் எதோ விலங்குகளையும், அவைக்கு வரும் நோய்களையும், தடுப்பு மருந்துகளையும் பற்றி காட்டுகின்றார்கள் என்று சிலர் கதைப்பது காதில் விழுந்தது. எதுவும் விளங்காவிட்டாலும் , சத்தம் இல்லாவிடினும், மிருகங்கள் திரையில் அசைவதையே அதிசயமாக பார்த்த காலம் அது !
பல வருடங்கள் சென்று விட்டது, அன்று பார்த்த TV யை போல் மூன்று மடங்கு பெரிதான TV வெறும் மூன்றே மீட்டர் தூரத்தில் எம் முன்னே இருக்கிறது ஆனால் அதை பார்க்கும் எனக்கோ அல்லது எனது மகனுக்கோ அவ்வளவு சந்தோசம் இல்லை. எனக்கு நண்பர்களோடு அடிபட்டு படம் பார்க்க முடியவில்லையே என்று பழதை நினைத்து கவலை, எனது மகனுக்கு தனது நண்பர்கள் வீட்டில் இதை விட பெரிய TV இருக்கிறதே என்று நினைத்துக் கவலை! இங்கே தான் அவசியம் எது? ஆடம்பரம் எது ? என்று கேள்விகள் எழுகின்றன. எமது வாழ்க்கையை அவதானித்துப் பார்த்தோமேயானால் அவசிய தேவைகளை நோக்கி ஓடுபவர்களை விட ஆடம்பரத்தை நோக்கி ஓடுபவர்கள் தான் அதிகம். ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இறைவன் கொடுத்தது கையளவே, இதை எண்ணிப் பார்க்கையில் உண்மையிலேயே எமது அவசிய தேவைகள் என்ன என்று மனதில் கேள்வி எழுகின்றது. வெறும் திண்ணையில் உறங்குபவன் தனக்கு ஒரு நல்ல பஞ்சணை வேண்டும் என எண்ணுவதில் தவறில்லை, ஆனால் அந்த பஞ்சணை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும், பக்கத்துக்கு வீட்டுகாரனுடையதை விட அழகாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்ற ஆடம்பரம்,பேராசை! அநேகமாக எம் ஆடம்பர ஆசைகள் பிறருடன் எம்மை ஒப்பிடுவதாலே உருவாகின்றன, இது ஒரு வியாதியாக எங்கும் பரவி மனித சமுதாயத்தையே இருட்டில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
உலகம் இந்த வருடம் அழியப் போகிறது அந்த வருடம் அழியப்போகிறது என்று தீர்க்கதரிசிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள், உண்மையில் உலகம் எப்போதோ அழியத் தொடங்கி விட்டது, எப்போது மனிதன் ஆடம்பரத்துக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினானோ அப்போதே மனித சமுதாயத்தின் அழிவுக்கு அத்திவாரம் போடப்பட்டு விட்டது !
“You will see the real beauty of people and the world around you when you distance yourself from luxury and greed “
அன்புடன்
கனகசபேசன் அகிலன்

[:]

0 Comments

Leave A Reply