சிறப்புற இடம்பெற்ற அரசகேசரியானின் தேரோட்டம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமானும் வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியரும் கும்போதர சண்டேசுவரப் பெருமான் பின்தொடர்ந்து வணங்கிவர புதிதாக அமைக்கப்பட்ட சிம்மாசனத்தில் உள்வீதியுலா வந்தனர். தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கோவில் முன்றிலில் உள்ள அரசசேரியின் திருவுருவச் சிலைக்கு விசேட வரவேற்பு வழிபாடு இடம்பெற்றது. அரசகேசரிப்பிள்ளையார் ஆலயம் யாழ்ப்பாண மன்னர் காலத்தில் எட்டாம் பரராசேகரனுடைய முதன்மந்திரியாக விளங்கிய அரசகேசரியால் அமைக்க்பட்டதாகும். இதனால் 2011 இல் இடம்பெற்ற கும்பாபிசேகத்தின்போது அரசகேசரிக்கும் இங்கு சிலை அமைக்கப்பட்டது. தேர்த்திருவிழாக்காண அரசகேசரியும் வருகை தருவதாகப் பாவனை செய்யப்பட்டு அவருக்கு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மாலை மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து அடியவர்கள் நிவர்த்திக்கடனாக அர்ப்பணித்த பத்தாயிரம் வரையான தேங்காய்கள் உடைக்கப்பட்டன.
தேர் வீதியுலா பக்தி பூர்வமாக இடம்பெற்றது. தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றமையாலும் சந்நிதி தேர் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளமையாலும் இன்று அரசகேசரிப் பிள்ளையார் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
பக்தர்கள் சிலர் பறவைக்காவடி எடுத்தும் பலர் அடியழித்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் கற்பூரச் சட்டி ஏந்தியும் தங்கள் நிவர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
சுவாமி தேர் ஏறவென இம்முறை புதிதாக அமைக்கப்பட்ட சிம்மாசனம் திருவாசி என்பவற்றை நான்கரை இலட்சம் ரூபா செலவில் மத்தியவங்கியின் யாழ். கிளையின் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு சிதம்பரப்பிள்ளை கௌரிசங்கர் அமைத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments