10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு பலாபலன்கள்

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1) ஆ, என்றவர்கள் ஆகா என்பீர்கள்

ஆர்வமுடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் குரு 4-ம் இடத்தில் இருக்கிறார். இதனால் கவனமாக இருக்க வேண்டும். ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது குடும்பத்தில் குதுõகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிச. 20ல் அவர் கன்னி ராசிக்கு அதிசாரமாக (முன்னோக்கி) இடம் மாறுகிறார். அப்போது உடல் நலம், மனநலத்தில் கவனம் வேண்டும். ராகு தற்போது 6-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். இதனால், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வலிமை ஏற்படும். ஆற்றல் மேம்படும். கேது மீனத்தில் இருப்பது அவ்வளவு உகந்த இடமல்ல.  2016 ஜன. 8ல் ராகு 5-ம் இடத்துக்கும், கேது 11ம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். அப்போது ராகுவால் கிடைத்து வந்த பலன்களில் மாற்றம் ஏற்படும். மனக்குழப்பம் நேரலாம். ஆனால், கேது 11க்கு செல்வதால், செயல்களில் வெற்றியைத் தந்து, மனக்குழப்பத்திற்கு மருந்து போட்டு விடுவார்.  

சனி 8ல் இருக்கிறார். இது அஷ்டமத்து சனி காலம். உறவினர் வகையில் கவனம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். அதேநேரம், சனி பகவான் செப். 5 வரை வக்கிரத்தில் இருக்கிறார். பொதுவாக அஷ்டமத்தில் இருக்கும் சனியால் பிரச்னை என்றாலும், அவர் வக்கிரத்தில் சிக்குவதால் பிரச்னையை தீவிரமாக்க முடியாது. அந்த வகையில் அவரால் நன்மையே என எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, அஷ்டமத்து சனி தந்த வலியால் ஆ என்றவர்கள் ஆறுமாதம் ஆகா என்பீர்கள்.  இந்த கால கட்டத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவும் வரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போய் விட்டால் சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். ஜூலை5க்கு பிறகு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் கடும் முயற்சியின் பேரில் வீடு கட்டுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு குறையும்.  பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றம் பெறலாம். புதிய பதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபத்துக்கு குறைவிருக்காது. சிலர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் தீவிர முயற்சி எடுத்தால் தான் முன்னேற்றம் காண்பர். அடுத்த கல்வி ஆண்டில். சிறப்பான பலன் கிடைக்கும்.  கலைஞர்கள் அரசிடம் இருந்து பாராட்டு, விருது பெற்று மகிழ்வர். சமூக நல சேவகர்கள் சிறப்படைவர். விவசாயிகள்  கால்நடை மூலம் சீரான வருமானம் பெறுவர். பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவரின் அரவணைப்பை பெற்று மகிழ்வீர்கள்.   2016 ஜனவரி முதல் கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு, மரியாதை, கவுரவம் மேம்படும். ராகுவால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும்.

பணியாளர்களின் வருமானத்திற்கு குறை இருக்காது. புகழோடு பெருமையும் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.

வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். கடையை விரிவுப்படுத்தலாம். எதிரிகளால்  இடையூறு அவ்வப்போது வரும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வளர்முகமாக இருப்பர்.

மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும்.

விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். சிலர் நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பர்.

பெண்கள் திருப்திகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன் பொருள் வந்து சேரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். 2015 ஜூலை5 வரை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள். பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

…………………………………………………………………………………………………………………………………………

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பாய்ஞ்சா காளை! பாசத்தால் மல்லிகை

சாதுர்ய குணம் படைத்த ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மன்மத ஆண்டு உங்களுக்கு ஓரளவு பலன்களையே தரும். காரணம் தற்போது குரு 3-ம் இடமான கடகத்தில் இருக்கிறார். இந்த இடம் பெரிய சிரமங்களைத் தராது என்றாலும், பதவி உயர்வு, திருமண எதிர்பார்ப்பு போன்றவை தாமதமாகும். ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையும் குரு அர்த்தாஷ்டமம் என்ற நான்காம் இடத்தைப் பெறுகிறார். இதுவும் ஓரளவுக்கே பலன்களைத் தரும்.  டிச. 20 முதல் பிப்.7வரை அதிசாரமாக (முன்னோக்கி) கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். வருமானம் கூடும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு 5-ம் இடமான கன்னியில் உள்ளார். அவரால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை உருவாகலாம். அதேநேரம் கேது 11-ம் இடமான மீனத்தில் இருந்து பிரச்னைகளுக்கு தீர்வைத் தந்து கொண்டிருப்பார்.  பணவரவில் இருக்கும் தாமதத்தைக் குறைத்து தேவையான நேரத்தில் கிடைக்க வழி செய்வார்.

2016 ஜன. 8ல் ராகு,சிம்மராசிக்கும், கேது கும்பராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கால கட்டத்தில் உங்கள் பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  சனிபகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால், நன்மை தர முடியாது. ஆனால்,  இவர் செப். 5 வரை வக்கிரத்தில் இருப்பதால் கெடுபலன் தர முடியாத நிலை ஏற்படும். சொந்த ஊருக்கு வந்து போக வாய்ப்பைக் கொடுப்பார். பணநிலையையும் முன்னேற்றுவார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். டிசம்பர் வரை கேதுவின் பலத்தால் கையில் பணப்புழக்கம் கூடும். முயற்சியில் இருந்த தடை விலகும்.  குருவின் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்க சந்தர்ப்ப சூழ்நிலை கை கொடுக்கும். அதேநேரம், வீடு, பொருள் எது வாங்க இருந்தாலும், அதனால் உங்களுக்கு பயன் உள்ளதா என்று ஆலோசித்து வாங்குவது நல்லது.  இந்த வகையில், கணவன், மனைவி ஒருவருக்குஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம்.நீங்கள் எது செய்தாலும், உங்கள் உறவினர்களிடம் சொல்ல வேண்டாம். அவர்கள் உங்கள் மீது பொறாமைப்படும் கிரகச் சூழ்நிலை உள்ளது. வேறு யார் மூலமோ அவர்களுக்கு தெரிந்து விட்டாலும் கூட, அவர்களிடம்வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படலாம். ஆனாலும், வழக்கமான வருமானத்திற்கு பாதிப்பிருக்காது. சேமிப்பில் கவனம் செலுத்தினால் பிரச்னையே இருக்காது. போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அரசு வகையில் நன்மை கிடைக்க தாமதமாகும். மனைவி பெயரில் தொழில், வியாபாரத்தை மாற்றி விட்டால் சிறப்படையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெறுவதில் முயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற போராடுவர். ஆன்மிகப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.

விவசாயம் சீரான வளர்ச்சி பெறும். மானாவாரி பயிர்களில் வருமானம் காணலாம். வழக்கு விவகாரம் சற்று இழுத்தடிக்கும். பெண்கள் சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. 2016 ஜனவரி முதல் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு மழலைபாக்கியம் கிடைக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலர் தொழில் காரணமாக குடும்பத்தை வேறு ஊருக்கு மாற்ற நேரிடலாம்.

விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். அக்டோபர், நவம்பரில் புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும். ரிஷப ராசியின் சின்னம் காளை. உங்களுக்குபாயவும் தெரியும். பாசமலராக மாறவும் தெரியும்.இந்த இயற்கையான மனதைரியம் என்றும் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுங்கள். காளியை வழிபடுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு  பாலபிஷேகம் செய்யுங்கள். சனீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்யுங்கள்.

………………………………………………………………………………………………………………..

மிதுனம்: (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பன்னிரெண்டில் எட்டு சூப்பர்!

எதையும் சமாளிக்கும் திறனுள்ள மிதுன ராசி அன்பர்களே!

இப்போது குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் உகந்த நிலை.  எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். இவர் ஜூலை5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அதேநேரம், டிச. 20ல் அவர் அதிசாரமாகி (முன்னோக்கி) கன்னி ராசிக்கு செல்கிறார். அங்கு அவர் மன உளைச்சலைத் தர இடமுண்டு. ராகு தற்போது கன்னி ராசியில் இருக்கிறார். இங்கு அவர் மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க இடமுண்டு. கேது 10-ம் இடமான மீனத்தில் இருக்கிறார். அவர் உடல்நிலையில் சிறுசிறு பிரச்னைகளைத் தரலாம்.  ராகு 2016 ஜனவரி 8ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆனவுடன், செயல்களில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். அதேநேரம் கேது கும்ப ராசிக்கு பெயர்ச்சியாவதால், வருகின்ற வருமானத்துக்கு தக்க செலவைத் தந்து விடுவார்.

இப்போது சனீஸ்வரர் விருச்சிகத்தில் இருக்கிறார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும், செயல்களில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும்.  தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ள அவர், மேற்கண்ட பலன்களை சற்று குறைத்து தர வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார். ஆண்டின் இறுதிப்பகுதியில் எடுத்த செயல்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். வீட்டுக்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு கட்ட ஏற்ற மாதம். தற்போதுள்ள வீட்டை விட அதிக வசதி மிகுந்த வீட்டிற்கு குடிபுகலாம். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலையில் ஆர்வம் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக குறையும். புதிய பதவி வர வாய்ப்புண்டு. சிலர் மேல்பதவிக்கு உயர்த்தப்படுவர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். கோரிக்கை நிறைவேறும். படித்துவிட்டு வேலைஇன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தெம்புடன் காணப்படுவர். வருமானம் அதிகரிக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்கள் உங்களிடம் நன்மதிப்பு வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலர் பெறலாம்.

விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். புதிய சொத்துக்களை வாங்கலாம்.

பெண்கள் முன்னேற்றம் அடைவர். புத்தாடை நகை, ஆபரணம் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வரலாம். 2016 ஜனவரி முதல் எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் வரும். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும்.  சுப நிகழ்ச்சிகள் தடைபட்டு நிறைவேறும். பணியாளர்களுக்கு கடந்த காலம் போல் அனுகூலமாக இருக்காது. சம்பள உயர்வுக்கு தடை   ஏதும் இல்லை. மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். மொத்தத்தில் 12 மாதத்தில் 8 மாதம் சூப்பராக அமையும்.

பரிகாரம்: காளியை ஞாயிறன்று ராகு காலத்தில் தரிசனம் செய்யுங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள்.

……………………………………………………………………………………………………….

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வாச மலர் பூக்கும் வசந்தகாலம்!

உறுதியான உள்ளம் படைத்த கடக ராசி அன்பர்களே!

குரு பகவான் தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் வீண் அலைச்சல், குழப்பம் ஏற்படும் என்றாலும், அவரின் பார்வை பலம் சிறப்பாக உள்ளது. ஜூலை 5ல் சிம்மத்திற்கு குரு பெயர்ச்சி அடைகிறார். இதன் பின் மனதில் துணிச்சல் பிறக்கும். ஆற்றல் மேம்படும். தொழிலில் மந்தநிலை மாறி வருமானம் அதிகரிக்கும். வீட்டுத் தேவை அனைத்தும் எளிதில் நிறைவேறும். வாசமலர் பூத்திடும் வசந்த காலம் போல வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். டிசம்பர் 20ல், குரு அதிசாரமாக (முன்னோக்கி) கன்னி ராசிக்கு செல்கிறார். இதனால் பதவி உயர்வு கிடைக்க  தாமதமாகும். ராகு தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் செயலில் வெற்றி, பொருளாதார வளம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.

கேது தற்போது மீனத்தில் இருக்கிறார். அங்கு அவரால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். ராகு 2016 ஜன. 8ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், திடீர் செலவு, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. சனி பகவான் 5-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது என்று சொல்ல முடியாது. 5-ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னை தருவார் என்பது பொது விதி. ஆனால் செப்.5 வரை வக்கிரமாக இருப்பதால், சனியால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் கெடுபலன் தர முடியாது. மாறாக நன்மையே தருவார். டிசம்பர் வரை, குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு குறுக்கிட்டாலும், உங்கள் மென்மையான அணுகுமுறையால் பிரச்னை பறந்தோடும். சுபநிகழ்ச்சிகளை ஆடம்பரமாகச் செய்வதால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும், உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். முயற்சி செய்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.

வியாபாரிகள் எதிரிகளால் பிரச்னையை சந்தித்தாலும், தக்க பதிலடி கொடுப்பீர்கள். நிர்வாகச் செலவும் கூடும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரம் புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. அரசியல்வாதிகள் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.  மக்கள்நலப் பணிகளில் ஈடுபடுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். ஜூலை 5க்கு பிறகு கல்வியில் முன்னேற்றம் காண்பர். வக்கீல்கள், ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம் ஆகிய பயிர்கள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே  கிடைக்கும். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சிறப்படையும். 2016 ஜனவரியில் இருந்து, குருவால் வரும் நன்மை குறையும். தொழிலில் தடைகள் குறுக்கிடலாம். சமூகத்தில் மரியாதை சுமாராக இருக்கும். யாருடனும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். சுபவிஷயம் குறித்த பேச்சில் தாமதம் ஏற்படலாம். ஆனால், குருவின் பார்வையால், முயற்சிக்கேற்ப நன்மை கிடைக்கும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.  முதலீட்டைஅதிகப்படுத்தக் கூடாது.

பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், வழக்கமான பதவி, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.

கலைஞர்கள் மிதமான வளர்ச்சி காண்பர்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றினால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.

விவசாயிகள் போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும்.

பெண்களின் எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். சனியன்று ராமரை வழிபடுவது நன்மைஅளிக்கும். ஆதரவற்ற பெண்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். 2016 ஜனவரிக்குப் பின், நவக்கிரகங்களை தவறாமல் வழிபடுங்கள். பத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ தீபமேற்றி பூஜியுங்கள்.

………………………………………………………………………………………………………….

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சோதனை தீர்க்கும் சாதனைக் காலம்

தைரியமுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு குரு 12ம் இடமான கடகத்திலும்,  ஜூலை5க்குப் பிறகு உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் சுமாரான பலனே ஏற்பட்டாலும் குருவின் 5,7,9 ஆகிய பார்வை பலத்தால் நன்மை பெறுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமைப்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்து கிடைக்க யோகமுண்டாகும். அதன் பிறகு டிச. 20ல் ராசிக்கு 2ம் இடமான கன்னியை அதிசாரமாக(முன்னோக்கி) செல்கிறார். இதனால், ஆற்றல் மேம்படும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.  ராகு 2ம் இடத்தில் இருக்கிறார். இவரால் திடீர் செலவு ஏற்படும். கேது 8ம் இடமான மீனத்தில் நின்று உடல்நலக் குறைவை ஏற்படுத்து வார். 2016 ஜன. 8ல் ராகு உங்கள் ராசிக்கு ராகுவும், கும்பத்திற்கு கேதுவும் பெயர்ச்சிஅடைகின்றனர்.  அப்போது நிலைமை இன்னும்  மாறும்.

சனி 4-ம் இடத்தில் சாதகமற்று இருப்பதால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், அவரின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது.   செப். 5 வரை சனி வக்கிரமாக இருப்பதால் அவரால் கெடுபலன் விலகி நன்மை உண்டாகும்.  டிசம்பர் வரை, சீரான முன்னேற்றம் காணும் காலம். புதிய முயற்சியில் தடை குறுக்கிட்டாலும், விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு சீராக இருக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. சுபவிஷயத்தில் எதிர்பார்த்த செய்தி தாமதமாக வந்து சேரும். பயணம் செல்லும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.

பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கப் பெறுவர். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. முக்கிய பொறுப்புகளை புதியவர் யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் எதிர்பாராத இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முதலீடு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. தொழிலில் போட்டி குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவியை பெறுவதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரை நன்மைக்கு வழி வகுக்கும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் பேச்சு வார்த்தையால் சமரச தீர்வு காண்பீர்கள். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். 2016 ஜனவரி முதல், வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு சாதனை படைப்பீர்கள். அதிர்ஷ்டவசமாக, பண வரவு அதிகரிக்கும். குடும்பத் தேவை நல்ல முறையில் நிறைவேறும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். தடைபட்ட திருமணம் இனிதே கைகூடும். உறவினர்களின் ஆதரவால் நன்மை பெறுவீர்கள். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவீர்கள். புதிதாக வாகனம் வாங்கவும் யோகமுண்டாகும்.

பணியாளர்களுக்குப் பணிச்சுமை குறையும். அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றமான நிலை அடைவர். வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவால் ஆதாயம் பெருகும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழி காண்பர்.

விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலால் வருமானம் அதிகரிக்கும். புதிய நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமை கொள்வீர்கள். மொத்தத்தில், சாதனைகளைத் தாண்டி சாதனைபடைக்கும் நல்ல ஆண்டாக அமையும்.

பரிகாரம்: சனியன்று பெருமாள் கோயிலுக்கு செல்லுங்கள். காகத்திற்கு எள் சாதம் படைத்து வணங்குங்கள். குருவுக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும். பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள்.

……………………………………………………………………………………………………

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) எல்லா நாளும் புத்தாண்டு தான்

பாசத்துடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!

குரு ராசிக்கு 11ம் இடத்தில் இருக்கிறார். இதனால் பொருளாதார வளம் மேம்படும்.தொழில் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குருவின் 7, 9-ம் பார்வைகள் சாதகமாக இருப்பதால்  ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். குரு ஜூலை5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பின், விடாமுயற்சி தேவைப்படும். மன சோர்வுக்கு ஆளாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். அதன் பிறகு  டிச. 20ல் அதிசாரமாக(முன்னோக்கி) உங்கள் ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ராகு, ராசியிலேயே இருக்கிறார்.

உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். கேது தற்போது மீனத்தில் இருப்பதால் அலைச்சல், அக்கம் பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம். ராகு 2016 ஜன. 8ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் வெளியூர் பயணம் ஏற்படும்.  கேது கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும்.  சனி 3-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. முயற்சி அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதாரம் பன்மடங்கு உயரும். தொழிலில் சிறப்பான வளர்ச்சியை உருவாக்குவார். விருச்சிக ராசியில் இருக்கும் சனி செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ளார். இந்த காலத்தில் அவரால் நன்மை தர இயலாது.டிசம்பர் வரை, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். மனதிற்குப் பிடித்த நல்ல வரனாகவும் அமையும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் அடைவர். உறவினர்களால் நன்மை கிடைக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டாகும் அல்லது தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புகுவர். வாகன யோகம் அமையும். பணியாளர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பதவி உயர்வும் கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். பகைவர்கள் சரணடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். திறமை மேம்படும். டிசம்பருக்கு பிறகு, புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். அரசின் உதவி கிட்டும். வேலை இன்றி இருப்பர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்கள் விருது பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள் நற்பெயர் காண்பர். எதிர்பார்த்த பதவி விரைவில் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நவீன முறையைக் கையாண்டு கூடுதல் மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எழுத்தாளர், பத்திரிகையாளர் நல்ல முன்னேற்றம் காணலாம். பெண்கள் முன்னேற்றம் அடைவர். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதி கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். 2016 ஜனவரி முதல் பணப் புழக்கத்துக்கு குறைவிருக்காது. சமூகத்தில் கவுரவத்துடன் செயல்படுவீர்கள். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், உங்கள் அணுகுமுறையால் விரைவில் மறைந்து விடும். சிலர் சுபச் செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம்.

பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும், அதற்கான ஆதாயத்தைப் பெறுவர்.  வியாபாரிகள் வெளியூர்ப்பயணம் மூலம் ஆதாயம் அடைவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற  வருமானம் காண்பர்.

மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.

பெண்கள் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச் செல்லுங்கள்.  துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். ராகு காலத்தில், பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

…………………………………………………………………………………………………………

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வருங்காலம் வளர்பிறை காலம்

உழைப்பில் உறுதி கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

தற்போது குரு, ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்தாலும், அவரின் 5-ம் இடத்துப்பார்வையால் நன்மை உண்டாகும். குரு  ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 11-ம் இடத்தில் இருக்கும் அவரால் இனி வருங்காலம் வளர்பிறையாக மாறும். பொருளாதார வளம் மேம்படும். பணி சிறப்படையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதன் பிறகு டிச.20ல் அதிசாரமாக(முன்னோக்கி) கன்னி ராசிக்கு செல்கிறார். குரு 12-ம் இடத்தில் இருக்கும் போது செலவு கூடும். அலைச்சல் அதிகரிக்கலாம். ராகு தற்போது 12-ம் இடத்தில் இருக்கிறார். அதன் மூலம் வெளியூர்பயணத்தையும் எதிரிகளால் இடையூறையும் ஏற்படுத்தலாம். கேது மீனத்தில் இருந்து நன்மையை வாரி வழங்குகிறார். பொருளாதாரம் சிறக்கும். பகைவர் தொல்லை விலகும். அபார ஆற்றல் பிறக்கும். 2016 ஜன.8ல் ராகு சிம்மத்திற்கும், கேது கும்பத்திற்கும் பெயர்ச்சிஆகின்றனர். ராகுவால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். கேதுவால் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், பாதிப்பேதும் உண்டாகாது. சனிபகவான் ராசிக்கு 2 ல் இருக்கிறார். இவரால் பணிச்சுமை அதிகரித்தாலும், அதற்கான நன்மையைத் தரத் தயங்க மாட்டார். மேலும் சனியின் 10-ம்இடத்துப் பார்வையால் தடைபட்ட செயல்கள் இனிதே நிறைவேறும்.டிசம்பர் வரை, செலவைக் குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. விவாதங்களில் ஈடுபடவேண்டாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். ஜூன் மாதத்திற்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். புதிதாக மனை, வீடு கட்ட வாய்ப்புண்டு. வாகன யோகமும் அமையும்.

பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும், உழைப்புக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.வியாபாரிகள் ஜூலை5க்கு பிறகு தொழிலில் அமோக லாபம் அடைவர். அரசின் வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.கலைஞர்கள் முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவுடன் சீரான வளர்ச்சி காண்பர். கலைஞர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கப் பெறுவர்.  ஜூலை5க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு வளர்ச்சியான காலகட்டமாக அமையும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். ஜூலை5க்குப் பிறகு பொன்,பொருள் சேரும்.  குடும்பத்தில் நன்மை மேலோங்கும். 2016 ஜனவரி முதல், வருமானம் உயர்ந்தாலும், செலவும் கட்டுக்கடங்காமல் போகும். குறுக்கிடும் தடைகளை முயற்சியுடன் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

பணியாளர்கள் அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்பட்டால் நற்பெயர் கிடைக்கும். சிலர் இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த ஆதாயம் கிடைக்கும். புதிய முதலீடு விஷயத்தில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க கடின முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள் தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றி வளர்ச்சி காண்பர்.

மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.

விவசாயிகள் உழைப்புக்கேற்ப விளைச்சல் காண்பர். வழக்கு விவகாரத்தில் நிதானம் தேவைப்படும்.

பெண்கள் குடும்பச் செலவுக்கான பணம் தடையின்றி கிடைக்கும். உடல்நலனில் அக்கறை உண்டாகும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யுங்கள். வெள்ளியன்று ராகுகாலத்தில் காளிக்கு தீபமேற்றி வழிபடுங்கள். நரசிம்மரைத் தரிசியுங்கள். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வணங்குங்கள்.

…………………………………………………………………………………………………

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மலைபோல் உயர்த்தும் மன்மத ஆண்டு

எதையும் சாதிக்கும் திறனுள்ள விருச்சிக ராசி அன்பர்களே!

வருட ஆரம்பத்தில் குரு 9-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகச்சிறப்பான இடம். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும்.  குருபகவான் ஜூலை5ல், சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது தற்போதுள்ள பலன்களின் அளவு குறையும். டிசம்பர் 20ல் கன்னி ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) ஆகும். குருவால், பொருளாதார வளம் மேம்படும். பணியிடத்தில் சிறப்பான நிலை அமையும்.  ராகு தற்போது 11-ம் இடமான கன்னியில் இருப்பது சிறப்பான இடம். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். கேது மீனத்தில் இருக்கிறார். அவரால் கடும் போட்டியைச் சந்திக்கலாம்.  ராகு 2016 ஜனவரி 8ல், சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் சிலரது பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். கேது அதே தேதியில் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானதல்ல, பயணத்தின் போது கவனம் தேவை. இது ஏழரை காலம் என்பதால், உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஆனால், சனியின் 3-ம் இடத்துப் பார்வையால்  செயல்களில் வெற்றியும், பொருளாதார வளமும்  ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் இருக்கும். விருச்சிக ராசியில் இருக்கும் சனி, செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ளார். அப்போது கெடுபலன்களைத் தரமாட்டார். டிசம்பர் வரை தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்பட்டாலும், கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிற்சில ஊடல்கள் வந்து மறையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். ஜூலை5க்கு பிறகு குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம்.

பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பார்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.வியாபாரம் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும். பொது மக்களிடம் செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்புண்டு. சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக  மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.  2016 ஜனவரி முதல்  பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வாகனம் வாங்கலாம். பணியிடத்தில் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். வரும் லாபத்தை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். புதிய தொழிலை தவிர்க்கவும். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க  பெறுவர்.

அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர்.

விவசாயத்தில் நல்ல வளம் காணலாம். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.

பெண்களுக்கு பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் மற்றும் முருகன் வழிபாடு உறுதுணையாக இருக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.

…………………………………………………………………………………………………………………

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) உல்லாசம்! உற்சாகம்! உங்கள் வாழ்விலே

பெருந்தன்மையுடன் நடக்கும்தனுசு ராசி அன்பர்களே!

குரு, உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பானதல்ல என்றாலும், அவருடைய பார்வை பலத்தால் நன்மை பெறுவீர்கள். குரு ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்றாடப் பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கையில் பணப்புழக்கம் கூடும். குடும்பத் தேவைகள் நல்ல முறையில் பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்டு வந்த சுபவிஷயம் இனிதே நடந்தேறும். திருமணம் நடக்க வாய்ப்புண்டு. அதன் பிறகு டிச. 20ல் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போதுமன சஞ்சலத்தை ஏற்படுத்துவார். ராகு தற்போது 10ம் இடமான கன்னியில் இருப்பதால், பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். கேது 4ம் இடமான மீனத்தில் இருப்பதால் நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. 2016 ஜன. 8ல் ராகு சிம்மத்திற்கும், கேது கும்பத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார். ராகுவால் எதிரி தொல்லை உண்டாகலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஆனால், கேதுவால் பக்தி எண்ணம் மேம்படும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் மேம்படும். இப்போது சனி பகவான் 12-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு ஏற்படலாம். இருந்தாலும், சனியின் 7ம் பார்வையால் நல்ல பொருளாதார வளம் உண்டாகும். பகைவரை முறியடிக்கும் பலம் உண்டாகும். சனிபகவான் செப். 5 வரை வக்கிரம் அடைவதால், கெடுபலன் தர மாட்டார் மாறாக நன்மையளிப்பார். டிசம்பர் வரை, குடும்பத்தில் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வருமானம் இருந்தாலும், செலவும் கட்டுக்கடங்காமல் செல்லும். குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை ஏற்பட்டு மறையும்.

பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். வியாபாரிகள் வாடிக்கையாளர் நலனில் கவனம் செலுத்துவர். அரசுவகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைஞர்கள் தீவிர முயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல் வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் குருவின் பார்வை பலத்தால், முயற்சிக்கேற்ப பலன் அடைவர். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காண்பர். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். பெண்கள் மனதில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர். ஜூலை 5க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் செல்வாக்கு மேலோங்கும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் நட்பு மலரும். தடைபட்டு வந்த திருமணம் இனிதே கைகூடும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணியாளர்அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். வியாபாரிகள் அரசின் சலுகை கிடைக்கப் பெறுவர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வளர்ச்சி காண்பர். 2016 ஜனவரி முதல், கேதுவால் பக்தி உயர்வு மேம்படும்.செயல் அனைத்திலும் எளிதாக வெற்றி காணலாம். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவர், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். சுபவிஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் நன்மையே உண்டாகும். பணியாளர்கள் சிறப்பான பலன் காண்பர். போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

வியாபாரிகள் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

கலைஞர்கள் முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் பெறுவர்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர் மூலம் நல்ல மகசூல் காண்பர்.

பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

பரிகாரம்: சனீஸ்வரனை வழிபட்டு, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்தால் தடையின்றி வளர்ச்சி  காணலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மை தரும். வெள்ளியன்று மாரியம்மனுக்கு தீபமிட்டு வழிபடுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு செல்வதும் நன்மை தரும்.

………………………………………………………………………………………………………

 மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பொருள் சேர்ப்பீர்கள் புகழோடு வாழ்வீர்கள்

சாந்தமே வடிவான மகர ராசி அன்பர்களே!

புத்தாண்டு துவக்கத்தில் குரு பகவான் 7-ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அவர் சுப நிகழ்ச்சிகளை நடத்தித் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த செயலை நிறைவேற்றுவீர்கள்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். குரு, ஜூலை5ல், சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது தற்போது நடக்கும் நன்மையின் அளவு குறையும். டிசம்பர் 20ல் அதிசாரமாக (முன்னோக்கி சென்று) கன்னி ராசிக்கு செல்கிறார். அப்போது அவரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். ராகு தற்போது 9-ம் இடத்தில் உள்ளார். அங்கு அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு வரலாம். கேது தற்போது 3-ம் இடத்தில் உள்ளார். அவர் இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். ராகு 2016 ஜனவரி 8ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது அவர் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். கேது ஜனவரி 8ல், கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவரால் சிறுசிறு உடல் உபாதை வரலாம். சனிபகவான் இப்போது 11-ம் இடத்தில் சாதகமாக இருக்கிறார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.

விருச்சிக ராசியில் இருக்கும் சனி, செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ளார். இந்த காலத்தில் அவரால் கிடைக்கும் நல்ல பலன்களின் அளவு குறையும்.வரும் டிசம்பர் வரை குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் காண்பர். புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வளம் காணலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். சிலர் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளம்பெறச் செய்வர். உங்களிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள் நம்பிக்கையுடனும், நல்ல எண்ணத்துடனும் நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் பொருள் வளத்தோடு புதிய பதவியும்,புகழும்கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். நவீன உத்திகளைக் கடைபிடித்து விளைச்சல் பெருகும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள்  நிம்மதி அடைவர். ஜூலை 5க்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்த்தால் சிரமம் குறையும். பணியாளர்கள் முன்புபோல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம்.  கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். வேலைக்கு செல்லும்  பெண்கள் பளுவை சுமக்க வேண்டி வரும். 2016 ஜனவரி முதல் தடைகள் அகலும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலைப்பளு குறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசின் உதவி கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் வரப்பெற்று முன்னேற்றம் காணலாம்.

மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம்.

விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு வகையில் அதிகம் சம்பாதிப்பர். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

பரிகாரம்: வக்கிர காலத்தில் சனீஸ்வரரை வணங்கினால் அவர் தடைகளை உடைத்து முன்னேற வழிவகுப்பார். துர்க்கை வழிபாடும், பைரவர் வழிபாடும் உங்களை முன்னேற்றும்.
ஜூன்மாதத்திற்கு பிறகு வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

…………………………………………………………………………………………………………………………

கும்பம்: (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஏணியாய் இருப்பார் ஏழாமிட குரு

பொறுப்புடன் பணியாற்றும் கும்ப ராசி அன்பர்களே!  

குரு, உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமானதல்ல என்றாலும், அவரது 9-ம் இடத்து பார்வையால் நன்மை ஏற்படும். ஆற்றல் மிக்கவராகத் திகழ்வீர்கள். ஜூலை 5ல் ஏழாம் இடமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு ஏணியாக வளர்ச்சிக்கு உதவப் போகிறார். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை நல்ல முறையில் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். டிச. 20ல் குரு அதிசாரமாக(முன்னோக்கி) கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன்பின், வருமானத்தில் தடை, வீண் விரோதம் ஏற்படலாம்.  ராகு தற்போது 8-ம் இடமான கன்னியில் இருக்கிறார். அவரால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கேது 2-ம் இடத்தில் இருப்பதால் பகைவர் வகையில் தொல்லை உருவாகலாம். 2016 ஜன. 8ல் ராகு சிம்மத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். அவரால் அலைச்சல் அதிகரிக்கும்.   தற்போது சனி பகவான் ராசிக்கு 10-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் தொழிலில் பின்னடைவு, ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம் என்றாலும், செப்.5 வரை வக்கிரமாக இருப்பதால், அவரால் கெடுபலன் உண்டாகாது. மாறாக நன்மையே அளிப்பார்.  டிசம்பர் வரை, உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வருமானம் இருந்தாலும், செலவும் கட்டுக்கடங்காமல் போகும். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.

பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், குருவின் பார்வை பலத்தால் உழைப்பிற்கேற்ப வருமானம் கிடைக்கும்.  வியாபாரத்தில் யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலையும் உருவாகலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைஞர்கள் முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ஆனால், எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும்.  விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் தானியத்தை பயிர் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலனே இருக்கும். பெண்கள் ஆடம்பர செலவைக் குறைப்பது நன்மையளிக்கும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
ஜூலை 5 க்கு பிறகு பிரச்னை அனைத்தும் மறையும். சமூகத்தில் மதிப்பு சிறப்படையும். பொருளாதார வளம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆற்றல் மேம்படும். புதிதாக வீடு. மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். தடைபட்டு வந்த திருமணம் சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர் திறமைக்கேற்ப அங்கீகாரம் பெறுவர். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பின் தங்கிய நிலை மறையும். விரிவாக்க முயற்சியும் வெற்றி பெறும்.  2016 ஜனவரி முதல், வாழ்வில் ஆடம்பர வசதி பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரித்தாலும் லாபத்திற்கு குறைவில்லை. அரசு வகையில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணி ரீதியாக, சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள், சமூகசேவகர்கள் பிரதிபலன் பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் முயற்சியுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர்.

பெண்கள் வாழ்வில் நல்ல மகிழ்ச்சி பெறுவர். உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வர். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமையளிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானை வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சிவனை வழிபட்டால் தடைகள் நீங்கி முன்னேற்றம் பெறலாம். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

…………………………………………………………………………………………………………

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மாலை சூடும் மணநாள் வந்தாச்சு

நிதானமுடன் பணியாற்றும் மீன ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 5ல் இருக்கிறார். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திட்ட மிட்டபடி வீட்டில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குருவின் பார்வையாலும் நன்மை உண்டாகும். குரு ஜூலை 5ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.  அதன் பிறகு  டிச. 20ல் கன்னி ராசிக்கு அதிசாரமாக(முன்னோக்கி) பெயர்ச்சிஅடைகிறார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். பணியாளர்கள் பணியில் உயர்வு நிலை காண்பர். ராகு 7-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் வீண் அலைச்சல் உண்டாகும். கேது உங்கள் ராசியில் இருப்பதால், பகைவர் தொல்லை அதிகரிக்கும்.  2016 ஜன. 8ல் ராகு சிம்மத்திற்கும், கேது கும்பத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றனர். ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். சனி 9-ம் இடத்தில் இருப்பதால் எதிரியால் பிரச்னை உண்டாகும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். சனி சாதகமற்று இருந்தாலும், அவரது பார்வை பலம் சிறப்பாக உள்ளது. 3,7,10 என்னும் மூன்று பார்வைகளும் நன்மையளிக்கும். செப். 5 வரை வக்கிரத்தில் சிக்கி உள்ளதால்,கெடுபலன் தர மாட்டார். மாறாக நன்மை தருவார்.ஜூலை5 முதல், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். வாகனம் வாங்க யோகம் உண்டாகும். உறவினர் வகையில் இணக்கமான போக்கு ஏற்படும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. பெரியோர்களின் வழிகாட்டுதலால் நன்மை பெறுவீர்கள்.

பணியாளர்கள் தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். போலீஸ், பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தி லாபத்தை பெருக்குவர். சனியால் பணிச்சுமை அதிகமானாலும், அதற்கான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைஞர்கள் நல்ல புகழும், பெருமையும் பெறுவர். மாணவர்கள் தேக்க நிலை மாறி ஆர்வமுடன் படிப்பர். சிலர் அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு பெறுவர். விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர் ஆதரவால் சந்தோஷம் காண்பர். அக்கம் பக்கத்தினர் நட்பு பாராட்டுவர். ஜூலை 5க்கு பிறகு வருமானம் இருந்தாலும், செலவும் கூடும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணியாளர்கள் பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே இருக்கும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம். மாணவர்கள் நட்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் பிள்ளைகளின்  நலனில் அக்கறை கொள்வர். 2016 ஜனவரி முதல், குடும்பம் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள்.  பணியாளர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு அதிக சம்பளத்தில் புதிய வேலை  கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

அரசு வகையில் உதவி கிடைக்கும். கலைஞர்கள் பாராட்டு கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். கை விட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் தற்போது நிறைவேறும்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரையும், சாஸ்தாவையும் வழிபடுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காளிக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வாருங்கள். பவுர்ணமியன்று சித்திரகுப்தரை வணங்குங்கள்.ஜூனுக்குப் பிறகு வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

0 Comments

Leave A Reply