newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

தமிழ் வருடப்பிறப்பு 2016

13006650_1594637384187921_6654521926766152976_n13.04.2016 புதன் கிழமை (பங்குனி 31) அன்று மாலை 6.36 மணிக்கு பூர்வபக்க ஸப்தமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில், துலா லக்கினத்தில், விருச்சிக நவாம்சத்தில் “துர்முகி” வருடம் பிறக்கின்றது. விஷ புண்ணிய காலம் (மருத்து நீா் வைத்து நீராடும் நேரம்) அன்று மாலை 2.36 தொடக்கம் இரவு 10.36 வரை.அணியவேண்டிய ஆடையின் நிறம் வெள்ளை மற்றும் பச்சை.கைவிஷேட நேரம் *16.04.2016 (சனி) இரவு 10.38 – 12.23 *17.04.2016 (ஞாயிறு) அதிகாலை 2.35 – 4.04 *18.04.2016 (திங்கள்) காலை 9.07 – 9.35 பகல் 9.47 – 11.46 மாலை 6.05 – 7.25 இரவு 10.19 – 12.15 வரை.


சங்கிரம தோஷ நட்சத்திரங்கள் மிருகசீாிடம், திருவாதிரை, புநா்பூசம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, சதயம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தோா் தவறாது மருத்து நீா் வைத்து நீராட வேண்டும்.

மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.


அதன் காரணமாக இப் புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன

சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்க பட்டஎல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.

மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

புதுவருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்) மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

 

0 Comments