10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தெய்வம் இருப்பது எங்கே?….

சில வருடங்களுக்கு முன் நானும் எனது மகனும் கோவிலுக்கு சென்றிருந்தோம். அவன் அங்கு போனதிலிருந்து மற்றைய பிள்ளைகளுடன் ஓடி விளையாடிக்கொண்டிருந்தான். கோவிலில் விளையாடக்கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பூஜை தொடங்கியது. நானோ ஒருமாதிரி அவனை இழுத்துப்பிடித்து என்முன் நிறுத்தி வைத்தேன், அப்படியிருந்தும் அவன் கண்கள் கடவுளை தவிர வேறு இடங்கள் எல்லாவற்றையும்  ஒவ்வொன்றாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. நான் அவன் தலையில் இரண்டு தட்டுத்தட்டி “தம்பி, பூஜை நடக்கேக்கை சுவாமியை பார்க்க வேண்டும், அங்கையும், இங்கையும் பார்க்கக்கூடாது, சுவாமி கோவிக்கப்போறார் என்று சொன்னேன்”. எனது அடியால் கோபமடைந்தவன் என்னைப்பார்த்து “நீங்கள் தானே, கடவுள் பரம்பொருள், அவர் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று அடிக்கடி சொல்லுறனீங்கள், இப்ப மாத்திரம், கடவுள் குருக்களுக்கு பக்கத்திலை நிற்கிறார்  என்று சொல்லி  என்னோடை ஏன் கோபிக்கிறீங்கள்? நான் பார்க்கிற இடமெல்லாம் கடவுள் இருக்கவேணுமல்லோ?”. எனக்கு உருப்படியாக பதில் சொல்ல நேரமும் இல்லை, இடமும் சரியில்லை, அவன் வாயை அடக்க  “தம்பி, வாயை மூடிக்கொண்டு முன்னாலை பார்த்து கும்பிடு இல்லாட்டி, பூஜை கடவுளுக்கு நடக்காது மாறாக உனக்குத் தான் இப்ப பூஜை நடக்கும்” என்று அதட்டினேன்.

அவன் வாயை அப்போது மூடினாலும் எனது மனதில் சிறு குழப்பம். கேள்விகள் பல, அதில் ஒன்று , எங்கே கடவுளின் உண்மையான கோவில்? திருமூலரின் திருமந்திரத்தில் பதில் உள்ளதோ ?

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளர்  பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

தெள்ளத்தெளிந்தார்க்கு உள்ளம் தான் கோவில், ஆத்மா தான் சிவலிங்கம்…….

இதை நான் அவனுக்கு இன்னும் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் கோவில் பக்கமே இனி காலடி வைக்கமாட்டான். இப்போதைக்கு அவனை பொறுத்தவரையில் கோயிலுக்கு போவதற்கு ஒரு முக்கிய காரணம் ……..அம்மாவின் சோறு,கறியை விட கோவிலில் தரும் சோறும், சாம்பாரும் மிகவும் ருசி ! இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும், சாம்பாரின் ருசி போகும் வரை ……….

கனகசபேசன் அகிலன்

0 Comments

Leave A Reply