நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதி திருத்தப்படவில்லை
நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமையினால் பாரிய குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது. இந்த வீதியால் பாதசாரிகள் நடந்து செல்வதற்கே முடியாதநிலை காணப்படுகின்றது.எனவே இந்த வீதியைத் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இக்கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகம் நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் மாதவன் வீதியின் நிலை தொடர்பாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளது. அம்மகஜரில், நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதியானது, இராச வீதி, மாசுவன் சந்தியில் இருந்து வடக்கு புன்னாலைக்கட்டுவன் மூன்று சந்தி வரை உள்ளது. ஆனால் இவ்வீதி கடந்த 30 வருடங்களாக செப்பனிடப்படாமையால் பாரிய குன்றும் குழிகளும் காணப்படுகின்றன.
இந்த வீதியைப் பயன்படுத்தி வருகின்ற அச்செழு, நீர்வேலிப் பகுதிப் பொதுமக்களும் மாணவர்களும் பல்வேறு சிரமங்களை தினமும் எதிர்கொண்டு வருகின்றனர்.வீதியில் காணப்படும் குழிகளில் மழை நேரங்களில் வெள்ளநீர் நிற்பதால் பொதுமக்கள் எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். வீதியைத் திருத்தி அமைத்து மக்களின் இயல்பு நிலைப் பயன்பாட்டிற்கு வகைசெய்யவேண்டும் என்றுள்ளது.
0 Comments