நீர்வேலியில் இடம்பெற்ற திருநாவுக்கரசர் திருநாள்-Photos
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் முன்னெடுத்த திருநாவுக்கரசு நாயனார் திருநாள் நிகழ்வுகளும் ஸ்ரீ கணேச அறநெறிப் பாடசாலையின் 14 ஆவது ஆண்டு பரிசில் நாளும் 12.05.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணிக்கு கொடஆலய கோபுர மண்டபத்தில் இடம்பெற்றன.தகைசார் வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில். நீர்வை மணி கு.தியாகராசக் குருக்கள் ஆசியுரையையும் இந்து காலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.அனந்தலட்சுமி அம்மர் வாழ்த்துரையையும் வழங்கினர்.
“மின்னம்பலத்தில் நாவுக்கரசர்’ என்ற பொருளில் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் சிறப்புரை இடம்பெற்றது. தொடர்ந்து பன்முக நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது.. இதில் பக்தி நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் இலக்கிய நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் விரிவுரையாளர் கு.பாலஷண்முகனும் பண்பாட்டு நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்கினர்
நாவுக்கரசரின் ‘திருத்தாண்டகம்’ தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற்றொகுதி நூல் வெளியீடு செய்யப்பட்டது. இதன் வெளியீட்டுரையை நூலின் பதிப்பாசிரியரும் அரசகேசரிப் பிள்ளையார் ஆலயப் பிரதம குருவுமாகிய சா.சோமதேவக் குருக்கள் ஆற்றினார். நூலின் முதற்பிரதியை பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க நீர்வேலி கந்தசுவாமி கோவிற் பிரதம குரு இரா.சுவாமிநாதக் குருக்களும் சிறப்புப் பிரதியை தொழிலதிபர் பொ.உதயனும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து அறநெறிப் பாடசாலைப் பரிசளிப்பும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன நிகழ்வுகளை தியாக.மயூரகிரிக் குருக்கள் முன்னிலைப்படுத்தினார்.நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் திருநாவுக்கரசு நாயனார் பெயரால் அறப்பணிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதுவும் இங்குள்ள மடம், திருக்குளம், கூபதீர்த்தம் என்பன திருநாவுக்கரசரின் பெயரைத் தாங்கியுள்ளன என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கன.
0 Comments