10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலியூர் மூத்த ஆங்கில ஆசிரியர் திரு த. ந. பஞ்சாட்சரம்

எனது பாடசாலை நாட்களில் ஆங்கிலம் ஒரு பாடமாக, மொழியாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு ஆடம்பரமாகவும், ஒரு அந்தஸ்தாகவும் பார்க்கப்பட்டது. “அடேய் , அவன் இங்கிலீசுலை கதைக்கிறானடா” என்று எட்டி நின்று வாயில் கைவைத்தவர்கள் அதிகம். இந்த நோக்கு பாடசாலை மாணவர்களிடையே மட்டுமில்லாமல் எமது சமுதாயத்திலும் பலரிடையே காணப்பட்டது. ஆங்கிலத்தை ஓரளவு எழுதிப் பேசத் தெரிந்தவர்களும், ஆங்கிலம் தெரிந்திருப்பதால் தாங்கள் சமூகத்தில் கொஞ்சம் உயர் நிலையில் இருப்பதாக போலியான மாயையில் மூழ்கியிருந்தார்கள்.

எனது பள்ளிக்காலங்களில் ஆங்கிலம் எனக்கு சிதம்பரசக்கரம் தான்! எப்பதான் இது என்னைவிட்டு தொலையுமோ என்று நான் ஏங்கிய நாட்கள் அதிகம், இதற்கு எமக்கு ஆங்கில பாடத்தை சொல்லித்தந்த ஆசிரியர்களும் ஒரு காரணம் (எல்லோரும் அல்ல), பல நேரங்களில் புத்தகத்தை வாசித்தல், சொல்வதெழுதல் இத்தோடு ஆங்கிலம் முடிந்துவிடும். சில ஆசிரியர்களுக்கு தாங்கள் சரியாக சொல்லித்தருகிறோமோ என்றே தெரியாது எனவே இவர்களிடம் படித்தால் எமது நிலைமை எப்படியிருக்கும் ? ஆங்கிலத்தில் ‘blind leading the blind’ என்று சொல்லுவார்கள், அப்படித்தான் எங்களில் பலரின் நிலை இருந்தது.

பத்தாம் வகுப்பில் இருக்கும் போது எமக்கு ஆசிரியராக வந்தவர் உபஅதிபராக பதவியேற்றதால் அவர் வகுப்புக்கு வருவது குறைந்தது, அதற்கு முன்னரே அவர் ஒழுங்காக கற்பிப்பதில்லை, இந்த நிலையில் இது வேறு. மாணவர்களில் பலருக்கு (நான் உட்பட) இது சந்தோசமான விடயமே, காரணம் ஆங்கிலம் கற்கத் தேவையில்லை, ஆசிரியர் வராவிடில் அந்தப் பாடத்துக்கு, அனேகமாக நேரங்களில், மைதானத்துக்கு சென்று விளையாடலாம், கடைசிப்பாடமெனில் தப்பி வீட்டேயும் ஓடலாம். இப்படி ஆங்கிலத்தில் இருந்து தப்பியோட நினைத்தோமேயன்றி அதன் பின்விளைவுகளை நாங்கள் எண்ணிப் பார்த்ததில்லை. நாங்கள் தமிழர்,தமிழில் எல்லா வேலையும் செய்யக்கூடியதாகவுள்ளது அப்படியிருக்கையில் ஆங்கிலத்துக்கு என்ன அவசியம்?

இப்படியிருக்கையில் 1987ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு, குறிப்பாக தமிழ் பிரதேசங்களுக்கு, வந்தது, எமது கிராமத்தை விட்டு வெளியே செல்லும்போது அவர்களை சந்திக்காமல் செல்வது கடினம், அவர்களது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதில் கூற வேண்டும். இதற்கு அவர்கள் கேட்பது எனக்கு விளங்க வேண்டும், பின்பு நான் சொல்வது அவர்களுக்கு விளங்க வேண்டும், அவர்கள் கையில் துப்பாக்கி வேறு! மிகவும் தர்மசங்கடமான நிலை, எதோ தெரிந்ததை போட்டுத்தள்ள வேண்டிய கட்டாயம், இல்லாவிடில் எங்களை அவர்கள் போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் எனது பிழையான ஆங்கிலத்தை கேட்டு, எமது சமூகத்தில் உள்ளவர்களைப் போல, அவர்கள் கைகொட்டிச் சிரித்ததில்லை, ஏனெனில் ஆங்கிலத்தை அவர்கள் என்னோடு உரையாட உதவும் ஒரு மொழியாக மட்டும்தான் பார்த்தார்கள். நாட்கள் செல்ல நானும் என் ஆங்கிலத்தை திருத்த வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்டேன், இந்த நேரத்தில் தான் எனது தந்தையார் மூலமாக, எமதூரில் உள்ள மிகச்சிறந்த ஆங்கில ஆசான் திரு த. ந. பஞ்சாட்சரம் அவர்களின் வகுப்பில் இணைந்து கொண்டேன், அன்றுவரை அவரை கண்டால் பயத்தில் தூர ஒதுங்கியவன் இன்று அடக்கொடுக்கமாக அவர் காலடியில். ஒருபக்கம் சிரிப்பு மறுபக்கம் ‘இந்த மனுசன் என்னத்தை கேட்டு தொலைக்கப்போகுதோ’ என்று பயம்.

அவரிடம் படிப்பதற்கு நானும் எனது பெரியப்பாவின் மகனும் தான் செல்வோம், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள அழகான ஒரு தென்னோலையால் வேயப்பட்ட கொட்டகையில் தான் அவர் இருப்பார் (இப்பவும் இருக்கின்றார்), ஒரு மேசை, அலுமாரிகள் நிறைய அரிய புத்தகங்கள். இருவரும் போய் அவர் படுக்க உபயோகிக்கும் வாங்கில் இருப்போம், அவர் தனது இலகுநாற்காலியில் கண்ணை மூடி அமர்ந்தபடி ‘என்னடா தம்பி ஊரிலை என்ன புதினம்’ என்று ஆரம்பிப்பார். ஊர்ப்புதினம் முழுக்க முழுக்க எனக்கு தெரிந்திருந்தாலும் நான் வாயை திறப்பதில்லை, வாயை கொடுத்து வில்லங்கத்தை வாங்கிவிடுவேனோ என்ற பயம்! இப்படியே ஆரம்பித்து உலக விடயங்கள் எல்லாம் எமக்குச் சொல்லி அதனூடே ஆங்கிலத்தையும் அழகாக கற்பிப்பார். அவரிடம் சென்று சில நாட்களிலேயே எனக்கு ‘இவர் ஆங்கிலத்தை கற்பிக்கவில்லை, ஒவ்வொரு வினாடியும் அதை காதலித்துக்கொண்டிருக்கின்றார்’ என்று புரிந்துகொண்டது. ஆசிரியர் ACT WELL YOUR PART….. என்று அடிக்கடி சொல்லுவார், அதுபோலவே அன்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். வேற்றூர்களில் உள்ளோர் இவரை தேடித்தேடி ஆங்கிலத்தை பயின்றபோது ஒரே ஊரில் இருந்த நான் பல வருடங்களாக இவரிடமிருந்து ஓடி ஓடி ஒழிந்திருக்கின்றேனே என்பதையெண்ணி இன்றும் கவலைப்படுகின்றேன். மாணிக்கம் மிக அருகில் இருந்தும் அதன் மதிப்புத் தெரியாமல் வாழ்ந்துவிட்டோம்.

மேலே எழுதியதை ஆங்கிலத்திலேயே எழுத எண்ணினேன் பின் சிறிது யோசித்து தமிழில் எழுதுகின்றேன், காரணமுண்டு, ஒரு நாள் மதியம் வகுப்பிற்காக அவர் வீட்டுக்கு செல்கின்றோம், அங்கு ஏற்கனவே வாட்ட சாட்டமாக ஒருவர் ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அமைதியாக வாங்கில் இருந்தோம். அவர் சென்ற பின் ஆசிரியர் சொன்னார் “உவன் கனடாவிலையிருந்து விடுமுறைக்கு வந்திருக்கிறான், இஞ்சை நிற்கேற்கை என்னட்டை ஆங்கிலம் படிக்க வந்தவன், உப்படித்தான் முந்தியும் ஒருவன் என்னட்டை வந்து சிலநாட்கள் படிச்சுட்டு வெளிநாட்டுக்குப்போய் எனக்கொரு கடிதம் போட்டான், அதிலை அவன் ‘I am in the well, I hope you also in the same well’ என்று எழுதியிருந்தான், வாசிச்சிட்டு யோசிச்சன், உவனுக்கு படிப்பிச்சதுக்கு நானும் அவன் இருக்கிற கிணற்றுக்குள்ளை தான் அவனோடை போய் இருக்க வேண்டுமென்று “. இதே போல் நான் ஆங்கிலத்தில் எழுதுவதை பார்த்து அவர் மனம் நொந்து விடக்கூடாதென்பதற்காகவே இதை தமிழில் எழுதுகின்றேன்.

மேலே எழுதியது எனதும் எனது ஆங்கில ஆசிரியரின் கதையையும் உங்களுக்கு சொல்வதற்கல்ல, எல்லா ஆசிரியர்களும் எப்படி தாம் கற்பிக்கும் பாடங்களில் புலமை பெற்றிருக்க வேண்டும், எப்படி தாம் கற்பிக்கும் பாடத்தை காதலித்து அதை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே. இது எல்லாத் தொழிலுக்கும் பொருத்தமாக இருந்தாலும், ஆசிரியத் தொழிலுக்கு மிகவும் அவசியம், வெறும் சம்பளம் வாங்குவதற்கு மட்டுமல்ல இந்தத்தொழில், பலரின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் உன்னதமான தொழில்! ஆசிரியர்களே, மாணவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாது விருப்புடன் கற்பியுங்கள், காலங்கள் கடந்தபின்னும் நீங்கள் அன்புடன் நினைவுகூரப்படுவீர்கள்,

காதலியுங்கள் காதலிக்கப்படுவீர்கள் !

~~~ A GOOD TEACHER IS LIKE A CANDLE, IT CONSUMES ITSELF TO LIGHT THE WAY FOR OTHERS ~~~

அன்புடன்
கனகசபேசன் அகிலன்.

0 Comments

Leave A Reply