10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

அரசகேசரிப் பிள்ளையாரில் திருநாவுக்கரசு நாயனார் திருநாள்

unnamedநீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் முன்னெடுக்கும் திருநாவுக்கரசு நாயனார் திருநாள் நிகழ்வுகளும் ஸ்ரீ கணேச அறநெறிப் பாடசாலையின் 14 ஆவது ஆண்டு பரிசில் நாளும் 12.05.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.தகைசார் வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் தொழிலதிபர் க.கிருபாகரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். நீர்வை மணி கு.தியாகராசக் குருக்கள் ஆசியுரையையும் இந்து காலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மகிந்தினி விஜயகுமார் வாழ்த்துரையையும் வழங்குவர். “மின்னம்பலத்தில் நாவுக்கரசர்’ என்ற பொருளில் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் சிறப்புரையைத் தொடர்ந்து பன்முக நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கருத்தரங்கு இடம்பெறும். இதில் பக்தி நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் இலக்கிய நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் விரிவுரையாளர் கு.பாலஷண்முகனும் பண்பாட்டு நோக்கில் நாவுக்கரசர் என்ற பொருளில் கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்குவர்.

நாவுக்கரசரின் ‘திருத்தாண்டகம்’ பாடற்றொகுதி நூல் வெளியீடு செய்யப்படும். இதன் வெளியீட்டுரையை நூலின் பதிப்பாசிரியரும் அரசகேசரிப் பிள்ளையார் ஆலயப் பிரதம குருவுமாகிய சா.சோமதேவக் குருக்கள் ஆற்றுவார். நூலின் முதற்பிரதியை நீர்வேலி கந்தசுவாமி கோவிற் பிரதம குரு இரா.சுவாமிநாதக் குருக்களும் சிறப்புப் பிரதியை தொழிலதிபர் பொ.கிருஷ்ணானந்தனும் பெற்றுக் கொள்வர். தொடர்ந்து அறநெறிப் பாடசாலைப் பரிசளிப்பும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெறும். தியாக.மயூரகிரிக் குருக்கள் நிறைவுரையாற்றுவார்.
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் திருநாவுக்கரசு நாயனார் பெயரால் அறப்பணிகள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதுவும் இங்குள்ள மடம், திருக்குளம், கூபதீர்த்தம் என்பன திருநாவுக்கரசரின் பெயரைத் தாங்கியுள்ளன என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கன.
(நன்றி திரு.லலீசன் அவர்கள்)

0 Comments

Leave A Reply