10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி தெற்கு -புளியடி அதிசயம்

இலங்கையில் சைவர்கள் செறிந்து வாழும்/வாழ்ந்த இடங்களில் பல வைரவர் கோயில்களை காணலாம். ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இவைகள் அமைக்கப்பட்டன என பலரும் கூற கேள்விப்பட்டிருக்கிறேன், உண்மையோ தெரியாது ஆனால் அவர்கள் கூறிய காரணங்கள் நம்பத்தகுந்ததாக உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்துசமய தெய்வங்களை வழிபடுவதற்கு தடைகள் இருந்ததாகவும், இப்படியாக வைரவர் சூலங்களை வைத்து வழிபட்டால் ஆங்கிலேயர்கள் வரும்போது சூலத்திலன் இருபுறமும் உள்ள கம்பிகளை வளைத்து நிலத்திற்கு சமாந்தரமாகி, அதை உடனே சிலுவையாக்கி அவர்களிடமிருந்து தப்பித்து விடுவதாகவும் கேள்வி. சூலம் அநேகமான நேரம் சிலுவையாகவும் வழிபடும் நேரம் மாத்திரம் சூலமாகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகம். எப்படிப் பார்த்தாலும் எல்லாம் கடவுள் தான்.

இந்தப்படத்தில் உள்ள, எனது வீட்டிலிருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கும், வைரவர் கோவிலும் அந்தக் காலநேரத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். நான் சிறுவனாக இருந்த காலங்களில் இது சிறிய கோவிலாக(உள்ளிருக்கும் பகுதி மாத்திரம்) புளியமரத்தை அண்டி இருந்தது. பகல் நேரங்களில் இந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும், இங்குதான் நாங்கள் கிரிக்கெட், கிட்டி, பேணியும் பந்தும் போன்ற பல விளையாட்டுகளையும் காலத்திற்கேற்ப விளையாடுவோம், வைரவ சுவாமி தான் எங்கள் நடுவர்! சிலநேரங்களில் நாங்கள் இந்த கிணற்றில் மீன், நண்டு பிடிப்பதும் உண்டு, வைரவர் பார்த்துக்கொண்டிருப்பதால் நாங்கள் திரும்பவும் அவற்றை கிணற்றிலேயே விட்டு விடுவோம்.

இரவு நேரத்தில் இந்த இடம் கசை இருட்டாக இருக்கும், ஆறு மணிக்கு முன்பே பலரும் கும்பிட்டு வந்துவிடுவார்கள், புளியும் இருட்டும் கூடினால் சொல்லவும் வேண்டுமா. நான் சில நேரங்களில் இந்த வழியாக இருட்டில் போகும் போது மூச்சுப்பிடித்து ஓடுவேன், அப்போதெல்லாம் வைரவரின் வாகனமாகிய நாய் அவர்கள் எங்களை துரத்திப் பதம்பார்க்கத் தவறியதில்லை. வெள்ளிக்கிழமைகளில் பலரும் கொளுத்தும் கற்பூர வெளிச்சம் சிறிது வெளிச்சத்தையும், ஆறுதலையும் கொடுக்கும்.

ஒருநாள், என் வயதையொத்த சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த வைரவருக்கு கோயில் அமைக்க முடிவெடுத்தோம். ஏன் அப்படி முடிவெடுத்தோம் என்று இன்று வரை எனக்கு ஞாபகம் இல்லை. அப்போது எங்களுக்கு பதினோரு, பன்ரெண்டு வயதுதான் இருக்கும், கடையில் வெறும் தோடம்பழ இனிப்பு வாங்குவதற்க்கே பெற்றோரிடம் கை நீட்டி நிற்கும் வயது இதில் கோவில் கட்ட காசு ஏது ? அந்த நேரத்தில் காசுக்கு சினிமா படங்கள் ஓடுவார்கள் எனவே அதன் மூலம் காசு சேர்க்கலாம் என யோசித்தோம். அதுவும் நடந்தது ஆனால் நாங்கள் எல்லோரும் படம் பார்த்து ரசித்து அந்த இடத்திலேயே குறட்டை விட்டதுதான் மிச்சம், காசு எதுவும் தேறவில்லை! இரண்டாவது திட்டம் தீர்மானிக்கப்பட்டது, அயலில் உள்ள வீடுகளுக்கு சென்று காசு சேர்ப்பதுதான் அந்த திட்டம். வீடுகளுக்கு சென்று கோயில் கட்ட காசு கேட்டோம், சிலர் ‘பார்ப்போம்’ ‘யோசிக்கலாம்’ என்று ஊக்கம் தந்தார்கள், சிலர் ‘பெடியள், உதெல்லாம் சரிவராது, சிறுபிள்ளை வேளாண்மை…’ என்று உதாசீனப்படுத்தி விட்டார்கள். நாங்கள் முயற்சியை கைவிடவில்லை, சிறு தொகையை சேர்த்தோம் (பேப்பரில் எழுதிவாங்கி, கையில் எவரும் காசு தரவில்லை), எங்கள் பிரயத்தனத்தை பார்த்த சில பெற்றோர்கள் எம்முடன் இணைந்து கொண்டார்கள்.

வெற்றி ! கட்டட வேலைகள் ஆரம்பமானது, கோயில் வேலை என்பதால் கட்டட வல்லுனர் திரு காராளி அவர்கள் தனது சம்பளத் தொகையை குறைத்து கோவிலை கட்ட அனுமதித்தார். வேலைகள் மும்மரமாக, எமது மேற்பார்வையில், நடந்தது. கடைசித்தூண் கட்டும்போது (கோயிலை பார்த்து கும்பிடும்போது, வலது பக்கத்தில், கிணற்றுக்கு அருகில் இருக்கும் நீலத்தூண்) திரு காராளி அவர்களுக்கும் நிர்வாகத்தினருக்கு ஏதோ ஒன்றில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. தூணை முக்காவாசி எழுப்பியாகி விட்டது இன்னும் சிறுபகுதிதான் மிச்சம், ஆனால் பல மணித்தியாலங்கள் பாடுபட்டும் அதை அவரால் கட்டி முடிக்க முடியவில்லை, அது திரும்பத் திரும்ப சளிந்து விழுந்துகொண்டே இருந்தது, எங்களுக்கோ சிரிப்பு, இதை பார்த்து அவருக்கு மனச்சங்கடமும் கோபமும். இதை பார்த்துக்கொண்டிருந்த பலரும் சொன்னார்கள் “காராளி, நீ வைரவரின் கோபத்திற்கு ஆளாகிவிட்டாய், கற்பூரம் கொழுத்தி நன்றாக கும்பிடு” என்று. அவரும் அப்படி செய்து விழுந்து கும்பிட்டு வைரவரை மண்டாடிய பின்தான் அந்த தூண் விழாமல் நின்றது. இதை அதிசயம் என்றும் சொல்லலாம் இல்லை எதோ தற்செயலாக நடந்ததாகவும் நினைக்கலாம். (இந்த கோயிலில் இருபக்கங்களிலும் இருக்கும் கம்பி வலைகளும், அருகில் உள்ள கட்டடங்களும் பின்பு அமைக்கப்பட்டவை.)

இதில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல, அதில் ஒன்று, நல்ல விடயத்தை ஆரம்பிக்க வயதோ பணமோ முக்கியம் இல்லை, மனத்திடத்துடன் ஆரம்பிப்பதுதான் முக்கியம், அது எப்படியோ எவராலோ முடித்துவைக்கப்படும். வெறும் விளையாட்டுப் பருவத்தில் இருந்த சிறுவர்களாகிய எம்மை வைரவர் தான் பின்னிருந்து இயக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். என்னை பொறுத்தவரையில், புளியடி வைரவர் ஒரு அதிசயம்!

அன்புடன்

கனகசபேசன் அகிலன்

0 Comments

Leave A Reply