10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நலன்புரி அமைப்புக்கள் மேற்கொண்ட பங்களிப்பின் பலாபலன்கள்

உயர் தகைமை கொண்ட கல்வியைப் போதிக்கும் பாடசாலைகள் நீர்வேலிக் கிராமத்தில் ஐந்து உள்ளன. அத்தியார் இந்துக் கல்லூரி,நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழக் கலவன் பாடசாலை, கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம் ,நீர்வேலி சீ.சீ. தமிழக் கலவன், பாடசாலை நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலை ஆகிய ஐந்து அரச கல்விச் சாலைகளிலும் 1470 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். இப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக புலம் பெயர் நாடுகளில் வாழும் நீர்வேலி மக்கள் பல உதவிகளை வழங்கி வருகின்றனர். தனிபட்ட வகையிலும் நலன்புரி அமைப்புக்கள் மூலமும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவரினும் நலன்புரி அமைப்புக்கள் வழங்கி வரும் உதவிகளை வெளிப்படுத்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். புலம் பெயர் நலன்புரி அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளுரிலும் தனிப்பட்ட அன்பர்கள் வழங்கிய உதவிகள். அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் மனித வளங்களின் அறிவுசார் செயற்பாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு நீர்வேலி பாடசாலைகளின் உயர்வுக்கு வழியமைத்து வருகின்றன. பௌதிக வளத்துறையில் மட்டுமன்றி கல்வி மற்றும் இணைக்கலைத் திட்டத்துறையில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.பௌதிக வளத்துறையில் மட்டுமன்றி கல்வி மற்றும் இணைக்கலைத் திட்டத்துறையில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.கல்வி அடைவுகளின் முக்கிய குறிக்காட்டிகளாகத் தேசியப் பரீட்சைப் பெறுபேறுகள் விளங்குகின்றன.

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மூன்று தேசியப் பரீட்சைகளையும் ஏனைய நான்கு பாடசாலைகளும் ஒரு தேசியப் பரீட்சையையும் (தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை) எதிர் நோக்கி வருகின்றன.அத்தியார் இந்துக் கல்லூரி கல்வி அடைவுகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை க.பொ.த. (சா/த) பரீட்சை க.பொ.த. (உ/த) பரீட்சை ஆகிய மூன்று தேசியப் பரீடசைக்கு முகம் கொடுத்து வருகின்றது. இக் கல்லூரிக்கு  புலம் பெயர் நலன்புரி அமைப்புக்களின் உதவிகள் அதிகமாகத் கிடைக்கத் தொடங்கி அவற்றின பலாபலன்களை கல்லூரி அனுபவிக்கத் தொடங்கிய 2003 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை சித்தி வீதம் 04% காணப்பட்டது. பின்பு 2005 ஆம் ஆண்டில் 14%உயர்ந்து 2009 இல் 12%  வீழ்ச்சியடைந்தது. ஆனால் 2011 இல் சித்தி வீதம் 16%  உயர்ந்தது. மேலும் 2011 ஆம் அண்டு கோப்பாய்க் கல்விக் கோட்டத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 35 பாடசாலைகளில் அத்தியார் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி கீர்த்திகா சண்முகவடிவேல் என்ற மாணவியே கோட்டத்தில் உயர் புள்ளியைப் (182 புள்ளிகள்) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உதவிகள் கிடைத்த ஆரம்ப காலத்தில் 04%  ஆகக் காணப்பட்ட  தரம் ஐந்து புலமைப் பரிசில் சித்தி வீதம் 2011 ஆம் ஆண்டில் 16% க்கு உயர்ந்திருப்புது உதவிகளின் பலாபலன்களை காட்டி நிற்கிறது.

                                                                             க.பொ.த. (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளைப் பொறுத்த வரை 2003 ஆம் ஆண்டில் 20% ஆகக் காணப்பட்ட சித்தி வீதம் 2005 இல் 64%ஆக 2007 இல்  71 %  ஆக உயர்ந்து 2008 இல் 53%  வீழ்ச்சியடைந்ததாயினும் 2010 இல் மீண்டும் 71 %  ஆக உயர்ந்தது. மேலும் 2003 இல் உயர் பெறுபேறாக 6A2B2C என்ற பெறுபேறு 2010 இல் (செல்வன் தர்மலிங்கம் தபீந்திரன்) 8A1B ஆக உயர்ந்து காணப்பட்டது. எனவே 2003 இல் 20% ஆகக் காணப்பட்ட க.பொ.த. (சா/த) சித்தி வீதம் 2010 இல் 71 % ஐ எட்டி இருப்பது உதவிகளின் பலாபலன்களைப் பிரதிபலிக்கின்றது.

                                                                         க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேறுகள் 2003 இல் 28% சித்தியைக் காட்டி நின்றன. இவை 2005 இல் 68%   2007 இல் 71%  2009 இல் 86%  2011 இல் 88% என்ற வகையில் உயர்ந்து வருகின்றன. இடையிடையே சித்தி வீதத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்ட போதும் பொதுவில் சித்தி வீதம் உயர்வாகவே காணப்படுவது பாராட்டுக்குரியது மட்டுமன்றி இது உதவியளிப்போர்க்கு உவகை அளிக்கும் என்பதிலும் ஐயமில்லை. பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வியற் கல்லூரி என்பவற்றிற்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோப்பாய்க் கல்விக் கோட்டத்தில் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு முகம் கொடுக்கும் ஏழு பாடசாலைகளில் 2009 ஆம் ஆண்டு அத்தியார் இந்துக் கல்லூரியே முதலாம் நிலையில் சித்தி வீதத்தை பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு செல்வன் பூவுலிங்கம் ராஜ்வினோத் மூன்று படங்களிலும் யு தர சித்திகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் கலைப் பிரிவில் இரண்டாம் நிலையில் அத்தியார் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது உதவியளிக்கும் நலன்புரி அமைப்புக்களுக்கு நல்லதோர் குறிகாட்டியாகும்.இவ்வாறாக அத்தியார் இந்துக் கல்லூரியின் கல்வி நிலை படிப்படியாக மேல் நோக்கி நகர்வது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். இணைக் கலைத் திட்ட செயற்பாடுகளில் வெற்றி வாய்பபுக்களை அதிகம் திரட்டித் தருவது மெய்வல்லுநர் நிகழ்வாகும்.

மெய்வல்லுநர் போட்டிகளில் தனி நிகழ்வுகளில் ஆண்டு தோறும் அத்தியார் இந்துக் கல்லூரி பாடசாலைப் போட்டிகளுக்கு அப்பால் கோட்டம்வலயம் மாவட்டம் மாகாணம் என்ற போட்டி நிலைகளில் வெற்றி பெற்று தேசிய போட்டிகளிலும் பங்குபற்றி வருகின்றது. 2004 ஆம் ஆண்டு செல்வன் தங்கராசா துசன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் (அப்போது இரு மாகாணங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன) 21 வயது ஆண்கள் பிரிவில் சிறந்த வீரனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பெருவிளையாட்டுக்களான வலைப்பந்து கரப்பந்து உதைப்பந்து போட்டிகளில் கோட்டம் வலயம் மாவட்டம் மாகாணம் வரை பங்கு பற்றி வெற்றி வாகை சூடியுள்ளவர். மேலும் 2010 ஆம் ஆண்டு கோப்பாய்க் கல்விக் கோட்டத்தில் 37 பாடசாலைகள் பங்கு பற்றிய கோட்ட மட்டப் போட்டிகளில் அத்தியார் இந்துக் கல்லூரி அதியுயர் புள்ளிகளைப் பெற்று முதலாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் பாடசாலை மாணவர்களிடையே 2012 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் தரம் 12 வகுப்பைச் சேர்ந்த ஆ.சுஜெந்தினி என்ற மாணவி மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.இத்தகைய மகிமைகள் பெற்று வரும் 763 மாணவர்களைக் கொண்ட அத்தியார் இந்துக் கல்லூரியின் தற்போதைய அதிபராக திரு. S.பத்மநாதன் அவர்கள் விளங்கி வருகின்றார். இங்கு தரம் ஒன்று முதல் தரம் பதின்மூன்று வரை க.பொ.த. (உ/த) வரை வகுப்புக்கள் உள்ளன.

கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம் கல்வி அபிவிருத்தியைப் பொறுத்த வரை நீர்வேலிப் பாடசாலைகளல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கூடுதலான மாணவர்களைச் சித்தியடையச் செய்யும் பாடசாலையாக இருந்து வருகிறது. 2003 இல் 13% ஆக இருந்த சித்தி வீதம் படிப்படியாக உயர்ந்து 2006 2007 ஆம் ஆண்டுகளில் 24%  எய்தியது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சிறிது வீழ்ச்சி நிலையைக் காட்டினாலும் நீர்வேலியில் கூடுதலான மாணவர்களைப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்யும் பாடசாலையாக இன்றும் இப் பாடசாலையே மிளிர்கிறது. 2012 ஆம் ஆண்டில் 8 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நீர்வேலிப் பாடசாலைகளில் மட்டுமன்றி கோப்பாய்க் கல்விக் கோட்டத்திலேயே அதிக மாணவர்கள் ஒரே பாடசாலையில் சித்தியடைந்த எண்ணிக்கையாக இருப்பது பாராட்டுக்குரியதாகும். 2012 இல் சித்தி வீதம் 17% ஆகும். நீர்வேலியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதிக்கு மதிப்பைப் பெற்றமுதலாவது பாடசாலையாக கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 சுற்றாடல் அமைச்சினால் 2010 ஆம் ஆண்டு சூழல் தொடர்பாக தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம்  முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியதாகும். மேலும் குறித்த இப் போட்டியில் தரம் மூன்று வகுப்பு தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் வகுப்பின் ஆசிரியர் திருமதி புஸ்பராணி பத்மநாதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும்; பெற்றுள்ளமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இத்தகைய மகிமைகள் கொண்ட கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம்  தரம் 1 – தரம் – 9 வரை 350 மாணவர்களைக் கொண்டுள்ளது. இதன் தற்போதைய அதிபராக திரு. கு.வாகீசன் விளங்குகிறார்.

நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை கல்வி அபிவிருத்தியில் படிப்படியாக முன்னேறி வருவதை அவதானிக்க முடிகிறது. 2006ம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு மாணவர் மட்டும் சித்தி நிலையைக் காட்டினாலும் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்வடைந்து 2009 இல் மூன்று மாணவர் சித்தியடைந்தமை கலிவி அடைவில் அதன் படிமுறை வளர்ச்சியைக் காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் இப் பாடசாலை மிகப் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ளது. கோப்பாய்க் கல்விக் கோட்டத்தில் இவ்வாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தொற்றிய 35 பாடசாலைகளில் நீர்வேலி R.C.T.M  பாடசாலை முதலாம் நிலையில் சித்திவீதத்தை பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது. மேலும் இவ்வாண்டு பாடசாலை மாணவி செல்வி ம. கலைநிலா புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று கோப்பாய்க் கல்விக் கோட்டத்தில் 2ம் நிலையில் சித்தியடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இணைக்கலைத் திட்டச் செயற்பாடுகளில் ஒன்றான விஞ்ஞானக் கண்காட்சியில் இப் பாடசாலை ஆசிரியர்கள் இருவர் 2012ம் ஆண்டு மாகாண நிலையில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர். மாணவர்களும் மாகாண நிலையில் வெற்றிச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

 நீர்வேலி R.C.T.M  பாடசாலையின் படிமுறை வளர்ச்சியில் இதன் அதிபராக திரு. சி. தர்மரெத்தினம் செயலாற்றி வருகின்றார் இங்கு தரம் 1 – தரம் – 9 வரை 245 மாணவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றார். நீர்வேலி சீ.சீ. தமிழக் கலவன் பாடசாலை தேசிய பரீட்சையில் பெரிய சாதனைகளை அண்மைக் காலத்தில் வெளிப்படுத்தவில்லையாயினும் புலம் பெயர் அமைப்புக்களின் பங்களிப்புக்கள் அதன் கல்வி அபிவிருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 2012 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆனால் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் (148 புள்ளிகள்) எவரும் பெறத் தவறிவிட்டனர். இரப்பினும் 135 புள்ளிகளை உயர் புள்ளியாகப் பெற்றிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் இப் பாடசாலை பெறும் வாய்ப்புண்டு என எதிர்பார்க்கலாம். மேலும் நீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா அமைப்பு தரம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கி வரும் நிதி அன்பளிப்பின் மூலம் பாடசாலையில் குறித்த வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்டியாக உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீர்வேலி C.C.T.M  பாடசாலையில் தரம் 1 – தரம் – 8 வரை 58 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதன் அதிபர் பொறுப்பை ஏற்று நடாத்தி வரும் திரு. சு.பசுபதீஸ்வரன் காலத்தில் பாடசாலை பல வெற்றி சாதனைகளை படைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலை நீர்வேலி கிராமத்தில் ஆரம்ப வகுப்புக்களை மட்டுமே கொண்ட பாடசாலையாகும். பொதுப் பரீட்சையில் பெரிய அடைவு மட்டத்தை அடையவில்லையாயினும்  2012 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்;சையில் 70 புள்ளிகளுக்கு மேல் 63% மாணவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெட்டுப் புள்ளிக்கு மேல் எவரும் எவரும் பெறத் தவறிவிட்டனர். இருப்பினும் எதிர்காலத்தில் கல்வி அடைவுகள் உயர்வதற்கான சாதக நிலைமைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் நீர்வேலி நலன்புரிச் சங்கம் – கனடா அமைப்பு தரம் ஒன்று மாணவர்களுக்காக வழங்கி வரும் நிதி அன்பளிப்பு குறித்த வகுப்பில் வருடா வருடம் சேரும் மாணவர் எண்ணிக்கையை அதிகித்து வருவது பாராட்டுக்குரியது.

நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலையின் அதிபராக திரு. ம.சிவானந்தன் இளமைத்துடிப்புடன் செயலாற்றி வருகின்றார். இங்கு தரம் 1 – தரம் – 8 வரை 54 மாணவர்கள் கல்விப் பயனைப் பெற்று வருகின்றனர்.

நீர்வேலி சார்ந்த புலன் பெயர் நலன்புரி அமைப்புக்களின் உதவிகளினால் கிடைத்த பலாபலன்களைத் தொகுத்து நோக்கும் போது உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லல் வறுமை காரணமாக இடைவிலகும் மாணவர் எண்ணிக்கை குறைந்து செல்லல் வெளி கிராமங்கள் நோக்கி மாணவர் நகர்ந்து செல்லும் எண்ணிக்கை குறைதல் கல்வி இணைக் கலைத்திட்டம் சார் செயற்பாடுகளில் மாணவர் வெற்றிச் சாதனைகள் விரிவடைந்து செல்லல் ஒழுங்கான வரவில் மாணவர் அக்கறை காட்டுதல் உள்ளுர் சமுகத்தில் அக்கறை அதிகரித்து வருதல் முதலான சாதக நிலைமைகளை அவதானிக்க முடிகிறது. இந் நிலைமைகள் எதிர்காலத்தில் நீர்வேலி கிராமத்தின் அபிவிருத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே நீர்வேலி சார்ந்த புலன்பெயர் நலன்புரி அமைப்புக்களின் பணிகளுக்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் பணி மனித மனங்களை வளம்படுத்தும் பணி மனித உயர்வுக்கு வழிகோலும் பணி மனித சமூகத்தை மேம்படுத்தும் பணி வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் பணி இந் நற்பணிகள் தொடர வாழ்த்துகின்றோம்.

நீர்வேலி கல்விச்சமூகத்தின் சார்பில்
திரு.இ.குணநாதன் (முன்னாள் அத்தியார் இந்துக் கல்லூரி அதிபர்)

0 Comments