10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பிறக்கின்ற “துன்முகி வருடம்” உங்களுக்கு எப்படி ?

இவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PM மணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது. சிலர் துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் அப்படி அல்ல. கிரக நிலைகளை பொறுத்து பலனை அம்பாள் கொடுக்கிறாள். இந்த வருடம் மிதுன இராசி, துலா லக்கினம், புனர்பூசம் நட்சத்திரத்தில் துன்முகி வருடம் பிறப்பதால் நன்மைகளே ஏற்படும்.

துன்முகி வருடம் குறித்த ஜோதிட பொது பலன் பாடல்கள் சில உண்டு.

“மிக்கான துன்முகியில் வேளாண்மை அறுமே
தொக்க மழைபின்னே சொரியுமே-மிக்கான
குச்சரதே சத்திற் குறைதீர வேவிளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!”
என்கிற துன்முகி வருடம் குறித்த ஒரு பாடலில், கால மழை தவறிப் பெய்யும் எனவும், விளைச்சல்கள் பாதிக்கப்பட்டாலும் பஞ்சம் வந்துவிடாது என்று குறிப்பிடுகிறது.

துன்முகி வருடம் குறித்து மற்றோரு பாடல்,

“மிக்க துன்முகியில் வெள்ளாண்மை மிகும்”

என்கிறது. வேளாண்மை அதிகம் இருக்கும் ஆனால் வெண்மையான வஸ்துக்கள் குறைவுண்டாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் கிரக நிலை என்ன சொல்கிறது? என்பதை கணித்து பார்த்தபோது, லக்கினத்திற்கு 2-ல் சனி–செவ்வாய், 5-ல் கேது, 6-ல் உச்சம் பெற்ற சுக்கிரன், சப்தமத்தில் புதன்–சூரியன் பாக்கியத்தில் சந்திரன், லாபத்தில் குரு–ராகுவின் கணக்கில் கடைசியாக வருவதும் லாபமே. மக்களுக்கு மகிழ்ச்சித் தரக் கூடிய அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.

தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளிநாட்டவர் நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம்நாடு முன்னேறும். அரசியலில் புதிய கூட்டணி உருவாகும். தனஸ்தானத்தில் செவ்வாய்–சனி இருப்பதால், ஷேர் மார்கெட் சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கும். உச்சம் பெற்ற சூரியன் வலுவான ஆட்சி அமைய உதவும். எதிரிகளின் பிரச்னை தீரும். அயல்நாட்டு பகை ஒழியும். சுக்கிரன் உச்சம் பெற்றதால், கனமழை உண்டு. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும். சனி–செவ்வாய் இணைவதால், உலகில் சில இடங்களில் பூகம்பம் ஏற்படலாம். உச்சம் பெற்ற சுக்கிரனால் பெண்களுக்கு நல்ல யோக வருடம்.

சரி, எது எப்படி இருந்தாலும், நாளும்-கோளும் சரியில்லாமல் போனாலும், இறைவனை வணங்கினால் அவனருளால் பாதகங்களும் சாதகமாக மாறும் என்பதே நிஜம்.

இந்த துன்முகி வருடமானது, புதன்கிழமை பிறக்கிறது. அதாவது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடிய பொன்னான தினமான புதன்கிழமையில் பிறப்பது விசேஷம்.

அதனால் அனைவருக்கும் பொன்னான வாழ்க்கை அமையும் என்று எதிர்பார்ப்போம்.

சரி, இனி ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கான தமிழ் புத்தாண்டு இராசி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்

“துன்முகி வருடம்” : மிதுன இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

மிதுன இராசி நேயர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து இருப்பதால், எடுத்த காரியம் நிறைவேறும். 6-ல் செவ்வாய்–சனி இருப்பது அவ்வளவு நன்மை இல்லை. தேவையில்லா அலைச்சல், பிரச்னைகள் கொடுக்கும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமைந்து குரு பார்வை பெறுவதால் வீடு, மனை அமையும் யோகம் உண்டு. 10-ல் சுக்கிரன் உள்ளார். ஜீவனத்தில் புதிய முயற்சி உருவாகும். தொழில் இல்லாதவர்களுக்கு புதிய தொழில் அமையும். நசிந்த தொழில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு வரும். பல காலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வரும். லாபஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்து இருப்பதும் யோகமே. திருமணம், குழந்தை பாக்கியம் அமையக்கூடிய வருடம் இது. 6-ல் செவ்வாய் அமைந்து உங்கள் இராசியை பார்ப்பதால், வாகன விஷயத்தில் கவனம் தேவை. பிரயாண விஷயத்திலும் கவனம் தேவை. பொதுவாக லாபம் தரக்கூடிய வருடம். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– செவ்வாய் கிழமையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அதேபோல, செவ்வாய் பகவானுக்கு சிகப்பு மலர்களை சமர்பித்து வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.
………………………………………………………………………………………………………..

 “துன்முகி வருடம்” : ரிஷப இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து “குரு சண்டாள யோக”த்தை கொடுப்பதால், தடைபட்ட கல்வி தொடரும். மேல்படிப்புக்காக அயல்நாடு செல்ல வாய்ப்பு வரும். விரயஸ்தானத்தில் புதன்-சூரியன் இணைந்து இருப்பதால், கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில்துறை முன்னேற்றம் அடையும். சப்தமஸ்தானத்தில் செவ்வாய்-சனி இணைந்து இருப்பதால், கூட்டாளிகள் வசம் கவனம் தேவை. கூட்டு தொழிலில் சிறு,சிறு பிரச்னைகள் எழும். 10-ல் கேது இருப்பதால், உத்தியோகத்தில் கவனம் தேவை. மேலதிகாரி வசம் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். லாபஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். புதிய தொழில் துவங்க நேரம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். ஜென்மத்தை விரயாதிபதி பார்ப்பதால், உடல்நலனில் கவனம்  தேவை. பொதுவாக, உங்கள் இராசிக்குரிய சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் துன்முகி வருடம், யோகமான வருடமே. உங்கள் இராசிக்கான பரிகாரம் :– வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். வியாழக் கிழமையில் விநாயகப் பெருமானை வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.
…………………………………………………………………………………………………………………
“துன்முகி வருடம்” : கடக இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

கடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் குரு-இராகு அமர்ந்து இருப்பதால், கை நிறைய காசு என்று சொல்கிற அளவில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் கவலை வேண்டாம். குடும்பஸ்தானத்தில் “குரு சண்டாள யோகம்” இருப்பதால், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்–சனி அமைந்துள்னர். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். கோர்ட், கேஸ் இருந்தால் வெற்றி பெறும். ஜீவனஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்து இருப்பதால், திட்டங்கள் அத்தனையும் நிறைவேறும். மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி சாதனை புரிவீர்கள். பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், தாய்-தந்தையருக்கு உடல்நலனில் பிரச்னை இருந்தாலும் தீரும். தெய்வ ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். அஷ்டமத்தில் கேது அமைந்ததால் தேவையில்லா செலவுகளும் வரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் நன்மைகள் அமையும். போதிய பணம் கிடைக்கும். கவலையே வேண்டாம். இந்த வருடம் யோக வருடமே. உங்கள் இராசிக்கான பரிகாரம் :– வியாழக்கிழமையில் பைரவரை வணங்குங்கள். அஷ்டமி திதியில், பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்
…………………………………………………………………………………………………………………………………….

“துன்முகி வருடம்” : சிம்ம இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

சிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிலேயே குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோக”த்தை கொடுப்பதால், தொட்டது பொன்னாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பேறு உண்டாகும். சுகஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால், சொத்து விஷயத்தில் தடைப்பட்டு நின்ற கட்டடம் கட்டி முடிக்கப்படும். உடல்நலனில் இருந்த பிரச்னைகள் தீரும். கல்வி தடை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சப்தமத்தில் கேது இருப்பதால், கூட்டு தொழிலில் கவனம் தேவை. 3-க்குரிய சுக்கிரன், 8-ல் இருப்பது எதிர்பாரா வெற்றியை கொடுக்கும். பாக்கியஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்து, “புஷ்கல யோக”த்தை கொடுப்பதால், பேச்சால் மற்றவர்களை கவர்ந்து நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள். இராசிக்கு அதிபதியான சூரியன் உச்சம் பெற்று இருப்பதால், அவசரம், பரபரப்பு கூடாது. பேச்சில் நிதானம் தேவை. பொதுவாக இந்த வருடம் அருமையான வருடம். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– முருகப்பெருமானை வணங்குங்கள். முருகப்பெருமானுக்கு வாசனை மலர்களை சமர்ப்பித்து வணங்குங்கள். இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

………………………………………………………………………………………………………………………………..

“துன்முகி வருடம்” : துலா இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

துலா இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால், தடைப்படாமல் பண வரவு அமையும். சுகாதிபதி சனி 2-ஆம் இடத்தில் இருப்பதால், சிறு,சிறு உடல்நலப் பிரச்னைகள் இருக்கும். அதனால் செலவுகளும் ஏற்படும். பஞ்சமஸ்தானத்தில் கேது அமைந்ததால் தெய்வஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும். 6-ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், கடன் பிரச்னை தீரும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். 7-ல் சூரியன்–புதன் இணைந்து உள்ளனர். உறவினர் உதவிகள், நண்பர்களின் உதவிகள் தேடி வரும். தொழில் துவங்க நல்ல வாய்ப்பு வரும். சிலருக்கு அயல்நாட்டில் தொழில் துவங்கவும் ஆயத்தம் ஆவார்கள். லாபத்தில் குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோகம்” தருவதால், இத்தனை நாள் இருந்த பிரச்னைகள் காற்றில் பஞ்சு போல் பறந்து விடும். இந்த வருடம் அருமையான வருடம். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– புதன் கிழமையிலும், சனிக்கிழமையிலும் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கற்கண்டை படைத்து வணங்குங்கள். ஏழை பெண்ளுக்கு வஸ்திரம் தானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

………………………………………………………………………………………………………………

“துன்முகி வருடம்” : விருச்சிக இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

விருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிலேயே செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால், நன்மைகள் தரும். ஆனால் சுகாதிபதி சனி செவ்வாயோடு இணைந்து இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. தனஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் தனலாபம் உண்டு. சுகஸ்தானத்தில் கேது அமர்ந்து உள்ளதால், தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. 12-க்குரிய சுக்கிரன், 6-ல் இருப்பதும் யோகமே. மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். ரோகஸ்தானத்தில் சூரியன்–புதன் அமைந்துள்ளதால், கடன் சுமை தீரும். கல்வி ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், தடைப்பட்ட கல்வி தொடரும். பட்டபடிப்பு முடித்து விடுவீர்கள். ஜீவனஸ்தானத்தில் குரு-இராகு இருப்பதால், தொழில் துறையில் இருந்த பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. வாக்கு ஸ்தானாதிபதி குரு, இராகுவோடு இருப்பதால், பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. பொதுவாக இந்த வருடம் அருமையான வருடமாக இருக்கும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– ஸ்ரீ பிரத்தியங்கிராதேவியை வணங்குங்கள். அத்துடன் முன்னோர்களையும் வணங்குங்கள். ஒன்பது முறை  ஸ்ரீதுர்கை அம்மனின் ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை உச்சரித்து வணங்குங்கள்.  இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.
…………………………………………………………………………………………………………………..

 “துன்முகி வருடம்” : தனுசு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

தனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு பஞ்சமஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்துள்ளதால், எதிர்பாரா யோகம் அடிக்கும். தொட்டது துலங்கும். பணவரவு உண்டாகும். வீடு, மனை அமையும். பாக்கியஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோகம்” ஏற்படுவதால், உங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் அமையும். வேலை வாய்ப்பும், தொழில் துறையில் அனுகூலங்களும் கிட்டும். 12-ல் செவ்வாய்-சனி இருப்பது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம். தேவையில்லா விரோதங்கள் ஏற்படும். அலைச்சல் கொடுக்கும். சனி, குடும்பஸ்தானத்தை பார்வை செய்வதால், குடும்பத்தில் சற்று நிம்மதி குறைவான விஷயம் ஏற்படலாம். இருப்பினும் உச்சம் பெற்ற சுக்கிரன் பல பிரச்னைகளுக்கு தடை போடும். கீர்த்தி ஸ்தானத்தில் கேது இருப்பதால் புகழ், கீர்த்தி கிடைத்திட பலர் உதவி புரிவார்கள். புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். பொதுவாக, துன்முகி நல்ல யோக வருடமே. உங்கள் இராசிக்கான பரிகாரம் :–  ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

……………………………………………………………………………………………………………….

 “துன்முகி வருடம்” : மகர இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

மகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-க்குரிய குரு, 8-ல் இராகுவுடன் இணைந்து இருப்பது வெகு விசேஷம். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்பார்கள். எதிர்பாரா யோகம் அமையும். கடன் சுமை தீரும். பாதியில் நின்றுபோன கட்டடப் பணி கட்டி முடிக்கப்படும். நோய் நொடிகள் தீரும். தடைபட்ட கல்வி தொடரும். புதிய வண்டி, வாகனம் வாங்க வைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வெளிநாட்டு நபர்களால் தக்க உதவிகள் கிட்டும். வழக்கு விஷயத்தில் மட்டும் சற்று இழுபறி நிலை காணப்படும். சுகஸ்தானத்தில் சூரியன்–புதன் இணைந்துள்ளதால், கணவன்-மனைவிக்குள் சற்று கருத்து வேறுபாடு ஏற்படும். ஆகவே நிதானம், பொறுமை தேவை. தனஸ்தானத்தில் கேது இருப்பதால், அதிகமான செலவுகள் ஏற்படும். ஜாமீன் விஷயத்தில் கவனம் தேவை. யாருக்கும். கடன் கொடுப்பதோ, கடன் வாங்கி கொடுப்பதோ கூடாது. ஆக, இந்த வருடம் யோக வருடம். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அனுமனுக்குரிய மந்திரத்தை 9 முறை உச்சரித்து வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

……………………………………………………………………………………………

“துன்முகி வருடம்” : கும்ப இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

கும்ப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால், இனி வருவாய்க்கு கவலையில்லை. உங்கள் துன்பங்கள் தீரவே சப்தமஸ்தானத்தில் குரு– இராகு அமைந்துள்ளனர் எனலாம். பல பிரச்னைகள் பறந்து விடும். திருமணம், குழந்தைபேறு நன்கு அமையும். கீர்த்தி ஸ்தானத்தில் புதன்–சூரியன் இருப்பதால் பெயர், புகழ் கிடைக்கும். செய்யும் காரியங்கள் வெற்றியாக அமையும். 10-ல் செவ்வாய்–சனி சேர்க்கையுள்ளதால், தொழில் வளம் நன்கு அமையும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். விரயாதிபதி சனி 10-ல் இருப்பதால், கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. “சுண்டைக்காய் கால் பணம்,  சுமைக் கூலி முக்கால் பணம்” என்பதுபோல் நீங்கள் இருந்தால் நெற்றியில் நாமம்தான். ஆகவே கவனமாக இருங்கள். கூட்டு தொழில் செய்வதும் நலம் தரும். மனைவியால் யோகம் உண்டு. ஜென்ம கேது இருப்பதால் முக்கியமாக உடல்நலனில் கவனம் தேவை. பயணங்கள் இருந்தால் நிதானமாக செல்லவும். வாகனம் ஓட்டுவதிலும் பொறுமை தேவை. ஆனாலும், இந்த வருடம் அருமையாகவே இருக்கும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை சமர்ப்பியுங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானமாக வழங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

…………………………………………………………………………………………………..

“துன்முகி வருடம்” : மீன இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

மீன இராசி அன்பர்களே… உங்கள் இராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால், நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். தன-வாக்கு ஸ்தானத்தில் சூரியன்-புதன் இணைந்துள்ளதும் சிறப்பாகும். உங்கள் வாக்குக்கு நல்ல பலன் கிடைக்கும். 6-ல் குரு-இராகு இணைந்துள்ளதும் நல்லதே. உடல்நலனில் இருந்த பிணிகள் அகலும். 10-க்குரியவன் 6-ல் இருப்பதால், கடன் இருந்தால் அத்தனையும் காணாமல் போகும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்திருப்பதால், புத்திர, புத்திரிகளுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வும், உத்தியோக மாற்றமும் ஏற்படும். தெய்வ தரிசனம் அதிகம் கிட்டும். பயணங்கள் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பொதுவாக, பாக்கியஸ்தானத்தில் தனாதிபதி இருப்பது மிக விசேஷம். இனி உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் யோக ஆண்டாக சித்திரை துவக்கம் இருக்கும். உங்கள் இராசிக்கான பரிகாரம் :– முருகப் பெருமானை வணங்குங்கள். முருகனுக்கு உகந்த ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரித்து வாருங்கள். உங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்

 

 

0 Comments

Leave A Reply