10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மண் குதிரையும், கற்பூரக் கழுதையும் …… (கனகசபேசன் அகிலன்)

ஒரு ஆசிரியர் வகுப்பில் பிள்ளைகளிடம் கேட்டார், பிள்ளைகளே ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?’ என்ற பழமொழியின் விளக்கம் என்னவென்று தெரியுமா என்று. எல்லோரும் சொன்னார்கள், மண் குதிரையை ஆற்றுக்குள் கொண்டு சென்றால் அது கரைந்து போய்விடும் எனவே அதை நம்பி ஆற்றில் பயணம் செய்யக்கூடாது என்று. ஒரு மாணவன் மாத்திரம் “சார், மண் குதிரை தான் அசையாதே, அது எப்படி ஆற்றில் இறங்கும், அதில் எப்படி பயணம் செய்வது ?” என மறுத்துக் கேள்வி தொடுத்தான். அது அப்படித்தான், ஒரு பேச்சுக்கா சொல்லியிருக்கிறார்கள் என ஆசிரியர் மழுப்பி விட்டார். மாணவன் விடுவதாக இல்லை ” குதிரை  கரைவதாக இருந்தால், ‘உப்புக் குதிரை’ என்று கூறியிருக்கலாமே, உப்பு மண்ணை விட இலகுவாக கரையும் அல்லவா ” என்று குடையத் தொடங்கினான். ஆசிரியருக்கு கோபம் “அப்படியானால் நீயே உப்புக்குதிரை என்று மாற்றி எழுதிவிடு” என்று பாடத்தை அத்துடன் முடித்து விட்டார்.

நாங்கள் அதில் இருந்து தொடருவோம்,  இதற்க்கு உண்மையான விளக்கம் என்னவென்றால், ஆற்றில் ஆங்காங்கே மண் சேமிப்படைந்து, குவிந்து, குதிராக காணப்படும் (குதிரையாக அல்ல குதி(ர்)ராக). இதை ‘ குதிர்’ என்று கூறுவார்கள். இப்படியான குதிர்களை பார்த்துவிட்டு, ஆறு ஆழமில்லை என்று காலை வைத்தால் அது ஆபத்தாக முடிந்துவிடும் என்பது தான் அதன் விளக்கம். இங்கு குதிரையும் இல்லை, பயணமும் இல்லை!

ஆசிரியர் மறுநாள் வகுப்பறைக்கு வந்தார், பிள்ளைகளே   “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? ” என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா என்று வினவினார். பலரும் “கழுதைக்கு எங்கே கற்பூரத்தின் அருமை தெரியப்போகிறது” என்று விளக்கம் சொன்னார்கள். ஆசிரியரும் விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு மாணவன் மாத்திரம் “சார் , கற்பூரம் விற்கும் கும் விலையில் கழுதைக்குவேறா அதைக் கொழுத்துவார்கள்?” என்று கேள்வியெழுப்பி ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாகினான்.

ஏன் கழுதையையும் கற்பூரத்தையும் இங்கு இணைத்திருக்கிறார்கள்? மற்றைய மிருகங்களுக்கு கற்பூரவாசனை தெரியுமா? அல்லது இரு சொற்களும் (கழுதை, கற்பூரம் ) ‘க’ வில் தொடங்குவதால் சொல்ல இலகுவாக இருக்கும் என்பதாலா? என்று கேள்விகள் அவனுள் எழுந்தன. கழுதைக்கு கற்பூர வாசனை தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன என்று மாணவனும் வெறுப்புடன் அங்கிருந்து விலகினான்.

நாம் இந்தப்  பழமொழியின் உண்மையான விளக்கத்தைப் பார்ப்போம். அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அந்தப் பாய் புல்லுக்கொண்டு பின்னப்பட்டதாகும். அந்தப் புல்லு கற்பூரப்புல், கோரைப்புல் என இரு வகைப்படும். கோரைபுல்லுக்கு ‘கழு’ என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரப்புல்லால் தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும். கற்பூரப்பாயின் விலை அதிகம், செல்வந்தர்கள் தான் அதனை வாங்கி உபயோகிப்பார்கள்.

கோரைப்புல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும். இதன் விலையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் “கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை” கழு என்ற கோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து ‘கழுதைக்க’ என்று சொல்லிச்  சொல்லி, காலப்போக்கில் அவ்வார்த்தை மருவி ‘கழுதைக்கு’ என்று ஆகிவிட்டது.

அதன் உண்மையான அர்த்தம் “கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?” என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்று ஆகி விட்டது என்பது நான் அறிந்தது – இதுவும் பிழையாக இருக்கலாம்!

அன்புடன்

கனகசபேசன் அகிலன்

0 Comments

Leave A Reply