10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் ….[:]

[:ta]

நான் சிறுவனாக இருக்கும் பொழுது எமது கிராமத்தில் உள்ள ஆசிரியர் திரு த. ந. பஞ்சாட்சரம் அவர்களிடம் ஆங்கிலம் கற்க போவது வழக்கம். அப்படி ஒரு நாள் போகும் போது கொஞ்சம் தாமதமாகி விட்டது. வரும் வழியில், நண்பர்களுடன் விளையாடியதால் தான் நான் தாமதமாக வந்தேன் என்று சொன்னால் அவர் கோபப்படுவார் என்பதற்காக, நான் சொன்னேன் “வாற வழியிலை library க்கு போட்டு வந்தனான் சார்” என்று.
அவருக்கோ குழப்பம், என்னை கேட்டார் “நல்லதடா தம்பி, எந்த Library க்கு போனனீ? ” என்று. ஒரு பொய் சொல்லப்போய் மாட்டிக்கொண்டு விட்டேனோ என்று எண்ணி ” உங்கை தான், நீர்வேலி மத்தியில், நிற்குணானந்தன் அவர்களின் வீட்டுக்கு முன்னாலை இருக்கிற Library க்கு தான் சார்” என்று பதில் சொன்னேன்.

அவருக்கோ கோபம் “அதை யாரடா Library(நூலகம்) என்று உனக்கு சொன்னது, அதுக்கு பெயர் Reading Room(வாசிப்பு அறை), இது கூட தெரியாமை நீ இவ்வளவு காலமாய் Library க்கு போட்டுவாராய்” என்று கடிந்து கொண்டார். அவர் சொன்னது சரி, நீர்வேலியில் எனக்கு தெரியக்கூடியதாக இரண்டு நூலகங்கள் இருந்தன(பிழையெனில் மன்னிக்கவும்); ஒன்று நீர்வேலி தெற்கு ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்திலும், மற்றது பழைய கிராம சேவகர் அலுவலகத்திலும் இருந்தது. ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்தில் உள்ள வாசிப்பு அறையை, நாங்கள் சிலர் ஒன்று சேர்ந்து, ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த, தூசி பிடித்த அரிய நூல்களையெல்லாம் துப்பரவு செய்து பாவனைக்கு கொண்டுவந்து, சில மாதங்கள் அதை நூலகமாக இயங்க வைத்தோம், காலத்தின் கெடுபிடியால் அதுவும் நீடிக்கவில்லை.
நான் நீர்வேலியில் இருந்த காலத்தில், வீட்டில் இருந்து தப்பிப்பதற்காக Library க்கு போறன் என்று சாக்கு சொல்லி இந்த வாசிப்பு அறையில் நண்பர்களோடு கூடுவதுண்டு. இங்கு போனவர்களுக்கு தெரியும், இதன் வாசலில் “வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்” என்று அழகாக எழுதி கொழுவியிருந்தார்கள்.
இதன் அர்த்தம் விளங்குவதற்கு எனக்கு பல காலம் எடுத்தது. காரணம், இங்கு போனால் நாங்கள் படிப்பது முழுவதும் ‘ஜெமினி சினிமா’ போன்ற சினிமா புத்தகங்களை தான். “இதை படித்து மனிதன் எப்படி பூரணமாக போகிறான் ?” என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு.
ஆனால் எமக்கு தெரியாமலே எமக்குள் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது, இந்த ஜெமினி சினிமா போன்ற பத்திரிகைகள் பல நாட்களுக்கு ஒருமுறை தான் வரும், ஆகவே நாங்கள் வேறு வழியில்லாமல் அங்கு வரும் செய்தி பத்திரிகைகளையும் வாசிக்க தொடங்கிவிட்டோம். வாசிக்கும் பழக்கம் சிறிது சிறிதாக எம்முள் எமக்கு தெரியாமலே புகுந்து கொண்டது. கண்டதையும் வாசிக்க தொடங்கியவர்கள், நாட்கள் செல்லச் செல்ல எமக்கு தேவையான நல்ல விடயங்களை தேடி வாசிக்க தொடங்கி விட்டோம், நாள் செல்ல வாசிப்பு என்பது ஒரு போதையாகி விட்டது!
நான் யாழ் இந்து கல்லூரியில் படித்து கொண்டிருந்த பொழுது, எமக்கு விருப்பமில்லாத பாடங்கள் நடக்கும் பொழுது, பல தடவைகள் ஆசிரியருக்கு தெரியாமல் நண்பர்களுடன் பாடப்புத்தகங்களின் உள்ளே கதைப்புத்தகங்களை மறைத்து வைத்து வாசித்து, அவர்கள் கோபத்திற்கு ஆளாகியதுண்டு!
அந்தக்காலங்களில் நேரம் போகாவிடில் எமக்கு வேறு வழியேது? வானத்தில் உள்ள அம்புலியை பார்க்கலாம் இல்லை அம்புலிமாமா படிக்கலாம்! ஆனால் எங்களை கதை புத்தகங்களுடன் கண்டால் பெற்றோர்க்கும், ஆசிரியர்களுக்கும் கோவம் வந்துவிடும். “உதை தூக்கி குப்பையிலை போட்டிட்டு படிச்சு முன்னுக்கு வாற வழியை பார்” என்று அவர்கள் கூறும் வார்த்தைகள் இப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
என்னை பொறுத்த வரையில், சிறுவர்களுக்கு எது விருப்பமோ அதை அவர்களை வாசிக்க விட்டு விட வேண்டும், அவர்களுக்கு வாசிப்பின் மீது உள்ள ஆர்வத்தை “இதை வாசி, அதை வாசியாதை” என்று முளையிலேயே கிள்ளி எறிந்து விடக்கூடாது. எதையும் வாசிக்க விட வேண்டும், காலப்போக்கில் அவர்களே நன்றையும், தீதையும் அனுபவத்தால் அறிந்து கொள்வார்கள். ‘களவும் கற்று மற’ என்பது போல், ஓரிரண்டு களவுகளை தெரிந்து மறப்பதில் தீங்கிருப்பதாக எனக்கு தெரியவில்லை. கண்டது கற்று பண்டிதன் ஆகக்கூடிய வாய்ப்பும் உள்ளது அல்லவா ?
“Once you learn to read, you will be forever free.” — Frederick Douglass
“Outside of a dog, a book is a man’s best friend. Inside of a dog, it’s too dark to read.” — Groucho Marx
அன்புடன்
கனகசபேசன் அகிலன்

 [:]

0 Comments

Leave A Reply