10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இராசுக்குருக்களை அறியாதோர் இலர்

நீர்வேலி இராஜேந்திரக்குருக்கள் என்ற இராசுக்குருக்களை அறியாதோர் இலர். வலிகாமம் கிழக்கில் நீர்வேலியில் வாழ்ந்த குருக்களை யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் வாழ்ந்த சைவமக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
இவ்வளவுக்கும் அவர் தம்மை ஒரு அமைப்பினூடாக அடையாளப்படுத்திக் கொண்டவரல்ல. பெரிய பதவிகளை வகித்தவருமல்ல.
ஈழத்தின் முக்கிய தலங்களின் கும்பாபிஷேக குருவாக திகழ்ந்தவருமல்ல. எளிமையின் வடிவமாக திகழ்ந்த ஒருவர். எனினும், அவர் மிகப்பிரபலம் பெற்று திகழ்ந்தார்.
தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரிடம் பல்வகை ஆலோசனைகளையும் பெறுவதற்காக நாடினார்கள். பல ஊர்களுக்கும் அழைத்து பயன்பெற்றார்கள்.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்று சிந்திப்பது மிகப் பொருத்தமானது. நெடிதுயர்ந்த தோற்றம் கொண்ட குருக்கள் ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர். மிக எளிமையானவர். அவரிடம் பல்துறை ஆற்றல் இருந்தது.

தம் முன்னோர்கள் பூசித்த நீர்வேலிக் கந்தசுவாமி ஆலய குருவாக திகழ்ந்த குருக்கள் அவர்கள் மேற்படி தலத்தில் குருவாக விளங்கிய சுவாமிநாதக்குருக்களுக்கும் வாலாம்பிகை அம்மைக்கும் மகனாக 22.04.1922 சித்திரை புனர்பூசநாளில் பிறந்தவர்.
கிருஹஸ்த வாழ்வில் ஈடுபட்டு சிவாச்சார்யராக குடும்பவாழ்வில் நல்ல தந்தையாகவும், கணவனாகவும் திகழ்ந்த குருக்கள் அவர்கள் மரபுவழி சம்ஸ்கிருதக்கல்வியுடையவராகவும், நல்ல தமிழறிஞராகவும் திகழ்ந்தார். இதற்கு அவர் பிறந்து வளர்ந்த சூழல் பெரிதும் துணை செய்திருக்கிறது.
அவரது தந்தையார் ஒரு சிறந்த சம்ஸ்கிருத- ஆகம அறிஞர். அவரது கோயிலுக்கு அருகில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் முதலிய அறிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மேற்படி கோயிலில் கந்தபுராண படனத்திலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
இந்த சூழல் அவருக்கு இயல்பான கந்தபுராண பற்றை ஏற்படுத்தியதுடன் மேற்படி புராணத்திலுள்ள பல நூறு பாடல்களை மனனமாக சொல்லக்கூடிய ஆளுமையையும் ஏற்படுத்தியிருந்தது.
தீராத அறிவுத் தாகம் கொண்ட குருக்கள் தமிழக அறிஞர்களுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணினார். குருத்துவ மரபுக்கு அப்பால் நல்ல தமிழறிஞர்களுடனும் அவரது தொடர்பு விரிந்ததாகவும் நெருக்கமானதாகவும் இருந்தது.
அக்காலத்தில் தமிழகத்தில் மிகப்புகழோடு வெளியாகி வந்த கலைமகள் இதழாசிரியர் பேரறிஞர் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் குருக்கள் வீட்டிலேயே தங்கினார்.
அவரது இலங்கை தொடர்பாடல்கள் எல்லாம் குருக்கள் வழியே தான் நடந்தது. இவ்வாறு பல்வேறு அறிஞர்களுடன் அவர் நல்ல நட்பை பேணினார்.
தவிர, பேராசிரியர் கா.கைலாசநாதக்குருக்கள், அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள், வியாகரணசிரோமணி சீதாராமசாஸ்திரிகள் போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞர்கள், சிவாச்சார்யார்களுடன் இராஜேந்திரக்குருக்கள் மிகவும் நெருக்கமான உறவைப் பேணினார்.
அவர்களது பணிகளுக்கு உதவியதோடு, தம் பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வுறவு வழியே அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்களின் சுப்பிரமணிய பிரதிஷ்டாவிதியை குருக்கள் அவர்களே பதிப்பித்திருக்கிறார். சீதாராமசாஸ்திரிகளைக் கொண்டு மாம்பழத்திருவிழாவை சம்ஸ்கிருதத்தில் கதை வடிவில் உத்ஸவ பத்ததியாக எழுதத்தூண்டினார். அதனை அடிப்படையாக கொண்டு நீர்வேலி கந்தசுவாமிகோயிலில் உத்ஸவத்தை நெறிப்படுத்தினார்.
தவிர, முருகப்பெருமான் குறித்த சம்ஸ்கிருத மொழியிலமைந்த பத்ததி நூல்களை பதிப்பிப்பதில் பெரும் அக்கறை காட்டினார். அக்காலத்தில் எவரிடமும் குமாரசூக்தம் கைவசம் இல்லாதிருந்த போது திருச்செந்தூரிலிருந்து குமாரசூக்தத்தை கொண்டு வந்தார். அது நாகரலிபியில் இருந்த போது கிரந்த லிபிக்கு மாற்றி பதிப்பித்தார். அவர் காலத்தில் குமாரதந்திராகமமும் யாழ்ப்பாணத்தில் குருக்களிடம் மட்டும் தான் இருந்தது என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
இறைவன் முருகனுக்கு புதிதாக- தனித்துவமாக- சிறப்பாக விழாக்களை ஆகமோக்தமான- புராணோக்தமான முறையில் செய்ய வேண்டும் என்பது குருக்களின் பேரவா.
எனவே, நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலில் முன்னரே நடைபெற்று வந்த சித்திரை மஹோற்சவத்திற்கு மேலதிகமாக ஸ்கந்த சஷ்டி புண்ணிய காலத்திலும் தனித்துவமான கொடியேற்றம், தீர்த்தோற்சம், யாகபூஜை, பலி என்பவற்றோடு கூடிய ஸ்கந்த மஹோற்சவத்தை நெறிப்படுத்தினார். குமாரதந்திர அடிப்படையில் ஏழு நாள் மஹோற்சவத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
அந்த உத்ஸவத்தில் ஐந்தாம்நாள் விஸ்வரூபதரிசனம் என்ற திருப்பெருவடிவக்காட்சியை விழாவாக நடத்தினார். ஆறாம் நாள் சூரசம்ஹாரத்திற்கு முன் வேல்பெறும் காட்சியை நிகழ்வாக நடாத்தினார்.
சூரசம்ஹாரத்திற்கு இறைவன் எழுந்தருளும் போது ஸ்கந்தபுராணத்தில் உள்ளது போலவே அந்த நிகழ்வு நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்தார்.
இவை மட்டுமல்ல, குருக்கள் அவர்களை யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் உள்ள கோயில்களில் கோயில் கட்டட அமைப்பு, கும்பாபிஷேகம், வழிபாடு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குமாறு பலரும் அழைப்பர்.
வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், வலிகாமம், வன்னி என்ற பலபாகங்களிலும் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு குருக்கள் அவர்கள் சென்றிருக்கிறார். மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களை மிக லாவகமான முறையில் குருக்கள் தீர்த்து வைத்து பாராட்டுப் பெறுவார்.
அவருக்கு வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம் என்பவற்றில் மிகுந்த நிபுணத்துவம் இருந்தது.
ஆகவே, ஆகமம், வைதிகம் என்பவற்றிற்கு அப்பால் ஜோதிட ஆலோசனைக்காகவும் வாஸ்து, மனையடி பார்க்கவும் பலரும் குருக்களை அணுகுவர்.
சொந்தமாக வாகனம் வைத்திருக்காத குருக்கள் மிகவும் வேகமான நடையினர். தவிர, குருக்களை நம்பி வாழ்ந்த கார் வண்டிக்காரர்களும் அக்காலத்தில் இருந்தனர். ஏனெனில் அவ்வளவுக்கு குருக்களுக்கு நாளுக்கு நாள் அழைப்புக்களும் பயணங்களும் இருந்தன.

 

நாட்டு சூழல் மிக மோசமடைந்த காலத்திலும் குருக்கள் நல்ல ஆற்றுப்படுத்துனராகவும், மக்களுக்கான ஆலோசகராகவும் திகழ்ந்தார்.
அவர் தமிழார்வலர். தமிழறிஞர். எப்போதும் ஏதாவது ஒரு நூல் அவர் கையில் தவளும். புராண படனம் செய்வதோடு நின்று விடாமல் பக்தர்களோடு இணைந்து கந்தரனுபூதி முதலிய தமிழ் துதிகளை பாராயணம் செய்வார்.
முருக பக்தியில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் ஷண்முகப்பெருமானின் வழிபாட்டில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர். அதனால் அவர் மந்திரசித்தி பெற்றவராயும் விளங்கினார். நோய் தீரவும், பயமகலவும் அவரிடம் வந்து விபூதி இட்டுக் கொள்ளவும் நூல் கட்டவும் என்று ஒரு கூட்டம் தினமும் கோயில் வாசலில் காத்துக் கிடக்கும்.
முகூர்த்த நிர்ணயத்திற்காகவும் ஜாதக பலன் பார்க்கவும் இன்னொரு கூட்டம் நிற்கும். கோயில் ஆகம விஷயங்களை கேட்கவும் அறியவும் இன்னொரு தொகுதியினர் நிற்பர்.
இவை மட்டுமல்ல ஆன்மீக ஆர்வலர்களும் தமிழார்வலர்களும் சித்தாந்திகளும் குருக்களின் கருத்தறியவும் அவரோடு ஆலோசிக்கவும் காத்திருப்பர்.
அவர் சமூகத்தில் அறிஞர்கள் முதல் கிராமத்துப் பாமரர்கள் வரை பலரும் இருப்பர். எந்த விடயத்தை நேருக்கு நேர் இடித்துரைப்பார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே வலிந்து கூப்பிட்டு வீட்டில் விருந்துபசாரம் செய்வார். அவரது வீட்டுப் படியேறும் எவரும் எதுவும் உண்ணாமல் திரும்பியதாக சரித்திரம் இல்லை.
அவர் முன்னே ஊர் சண்டியன்களும் முரடன்களும் கூட சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக நிற்கும் காட்சி வியப்பிற்கு உரியது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தவிரவும் அவர் சிறிதும் ஆணவமில்லாதவர். எனக்கு பதினொரு வயதிருக்கிற போதே குருக்கள் அவர்கள் சிவப்பேறு பெற்று விட்டார். ஆனால், மிகச்சிறியவனாக அவருடன் பேசியிருக்கிறேன். வாதிட்டிருக்கிறேன். அவரோ, சிறுவர்களை கண்டால் தானும் அவர்களைப் போலவே மாறி விடும் அதிசய மனிதர்.
ஆனால், அவரை யாரும் ஏமாற்ற முடியாது. போலித்தனமான ஆசாரவாதிகளுக்கு அவர் ஒரு சிம்ம சொற்பனம். அவர் பலருக்கும் தொழில் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். வறியவர்களுக்கு உதவி செய்வதிலும் அவருக்கு நிகர் அவரே. அதாவது அவர்களுக்கு வெறுமனே பணம் கொடுக்கமாட்டார். ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்துவார். இவ்வாறு அவரால் வழிகாட்டப்பட்டு உயர்ந்த பலரை நான் அறிவேன். அவர்கள் இன்றும் குருக்கள் மீது நன்றியுடையர்களாக இருக்கிறார்கள். இத்தகு செயற்பாடுகளுக்கெல்லாம் குருக்கள் குலம், கோத்திரம் பார்க்க மாட்டார்.
தவிரவும், அந்தண சமூக முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவராக குருக்கள் விளங்கினார். இன்றைக்கு சிறந்த குருமார்களாக திகழும் பலரும் இராசுக்குருக்களால் வழிப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். சிவாச்சார்ய இளைஞர்களை பத்ததி வாசிக்கவும், குருத்துவப் பணியிலும் ஈடுபடுத்தி தான் பின் நின்று ஊக்குவிப்பார். தவிரவும் சைவக்குருமார்கள் பலருக்கும் குருக்கள் நல்லாற்றுப்படுத்துனராகச் செயற்பட்டார்.
20.12.2000 அன்று சிவப்பேறு பெற்ற குருக்களின் ஆளுமையும் அறிவாற்றலும் செயற்பாடும் நினை தொறும் வியப்பூட்டும். இரண்டு தசாப்தங்களை கடந்தும் குருக்களின் நினைவு பலர் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறது.
தியாக. மயூரகிரிக்குருக்கள்

0 Comments

Leave A Reply