10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சோதனை மேல் சோதனை……..[:]

[:ta]

26, ஆங்கிலத்தில் எழுத்துகள், 247, தமிழில்! இருபத்தியாறு எழுத்துகளை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர்கள் உலகத்தையே ஆண்ட பொழுது , கிட்டத்தட்ட பத்து மடங்கு கூடுதலான எழுத்துகளுடன் நாங்கள் ஏன் திண்டாட வேண்டும்? என்று மனதில் ஒரு சிறு குழப்பம். என்ன இருந்தாலும் தமிழ் ஒரு மரியாதையான மொழி என்று சிலர் பெருமைப்பட்டு கொள்வார்கள், உதாரணத்திற்கு, ‘நீ’, ‘நீங்கள்’ என்ற இரு சொல்லுக்கும் ஆங்கிலத்தில் you என்ற ஒரு சொல்லே உண்டு ஆனால் தமிழில் வயது குறைந்தவர்களை ‘நீ’ என்றும், வயது முதிர்ந்தவர்களை ‘நீங்கள்’ என்றும் கொஞ்சம் மரியாதையாக அழைப்போம். நாகரீகம் முன்னேறி வரும் இவ்வுலகில், எல்லோரையும் மரியாதையாக, வயது வேறுபாடின்றி , ‘நீங்கள்’ என்றே அழைக்கலாமே? ‘நீ’ என்று ஏன் மரியாதையை குறைக்க வேண்டும், ‘நீ’ என்ற, அதிகாரத்தை உணர்த்தும், சொல் தமிழில் உண்மையில் தேவையா? என்று கேள்விகள் எழலாம், இதுபோல் தான் ‘வா’ , ‘வாருங்கள்’, இப்படி பல.

தமிழில் உள்ள உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் கூட்டினால் மொத்தமாக முப்பது(30) எழுத்துகள், முப்பது எழுத்துகளை படிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை, எனவே இந்த உயிர்மெய் எழுத்துகளை (216) உள்ளே புகுத்தித் தான் எம் எல்லோரது உயிரையும் வாங்கி விட்டார்களோ? (எல்லாத்தையும் கூட்டினால் 246 எழுத்துக்கள் தானே வருகிறது, ஒரு எழுத்து எங்கே ஓடிவிட்டது என்று யாராவது தேடினால் அதுதான் உயிரும், மெய்யும் இல்லா ஆயுத எழுத்து, ஃ , இவர் தனித்திருப்பதில் அழகில்லை என்பதால் உயிர் எழுத்துகளின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளார்) எது எப்படியிருந்தாலும், நாங்கள் இனி எதுவும் செய்ய முடியாது, எம்முன்னோர் எழுதி வைத்துவிட்டார்கள், இவைகளை சரியாக படிப்பது தான் (அநேகமான) தமிழர்கள் வாழ்வில் வரும் முதலாவது சோதனை! எனக்கும் அப்படித்தான், ஆனால் ஆங்கிலத்தை விட கிட்டதட்ட பத்து மடங்கு எழுத்துகள் உள்ள தமிழை, அமுதை, அந்த அழகிய மொழியை கற்பதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை எனவே ஆங்கில பாடம் இன்னும் இலகுவாக அல்லவா இருக்க வேண்டும்? ஏன் அது எம்மில் பலருக்கு சிதம்பரசக்கரமாக இருக்கின்றது? அதற்கு எழுத்துகளின் எண்ணிக்கையோ, மொழியோ காரணமல்ல, எமது முயற்சியின்மையும், அதை ஆசிரியர்கள் சரியாக கற்று தராததும் தான் முக்கிய காரணம்.
நான் ஆரம்ப பாடசாலையில் கற்ற போது, ‘எனது கிராமம்’, ‘சுயசரிதை’ போன்ற சிறு கட்டுரைகளை தான் எழுதினேன். ஆனால் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இணைந்தபின் தமிழில் பலவிதமான கட்டுரைகளை எழுதவேண்டிய கட்டாயம், இப்படி நாங்கள் எழுதிய கட்டுரைகளை ஆசிரியர்கள் திருத்தும் பொழுது, பொதுவாக, கட்டுரையின் தொடக்கத்திலும் முடிவிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருக்கும், நடுவில்(இடையில்) திருத்தங்கள் இருக்காது. இதை பற்றி நாங்கள் நண்பர்களுடன் கலந்து பேசும் போது, ஒருவன் சொன்னான் “டேய், உந்தாள்(ஆசிரியர்) முழுதையும் வாசிக்கிறதெண்டு நினைக்கிறீங்களே, தொடக்கத்தையும் முடிவையும் பார்த்திட்டு மிச்சத்தை ரூலர் (Footrule) வைச்செல்லோ அளந்து போடுது, நீங்கள் இடையிலை என்னத்தை கிறுக்கினாலும் அந்தாள் கவனிக்காது” என்று. அது உண்மையோ தெரியாது, உண்மையானாலும் பெரிய தப்பில்லை, எத்தனை கட்டுரைகளை தான் அவரும் வாசிப்பது? இப்படியாக, பதினாறு வருடங்கள் படித்த தமிழ்ப் பாடத்துக்கு இறுதிப் பரீட்சை, அப்போது எங்களுக்கு பாரதச்சுருக்கம், கம்பராமாயணம் போன்றவற்றிலும் கேள்விகள் உண்டு, முழு இராமாயணமும் அல்ல , சுந்தரகாண்டம், எங்களை அந்தரத்தில் ஆடவைக்க அது மட்டுமே போதும் !
மாடு நின்ற அம் மணிமலர்ச்
சோலையை மருவித்
‘தேடி அவ் வழிக் காண்பெனேல்
தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் என்னில், பின்
உரியது ஒன்று இல்லை!
வீடுவேன், மற்று, இவ் விலங்கல்மேல்
இலங்கையை வீட்டி! ‘
என்று அனுமன் கூறுவது போல் முதல் பாடல் வருகிறது, இங்கு ‘மாடு’ என்பது நாலு காலுள்ள, சோலைகளை மேய்ந்து தள்ளும் மாடு அல்ல! அனுமன் ஏன் இப்படியெல்லாம், எமக்கு விளங்காதது போல் பாடவேண்டும், “பக்கத்தில் இருக்கும் சோலைக்குள் சீதையை காணாவிடில் வைக்கிறேன் இலங்கைக்கு வேட்டு !” என்று சிம்பிளாக (இலகுவாக) சொல்லி முடிக்கலாமே? சீ , அனுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரிந்திருக்காது, தனது புலமையை காட்ட, இதெல்லாம் கம்பன் எனும் வம்பன் செய்த வேலை என்று நான் எண்ணுவதுண்டு. இந்தப் பாடலுக்கு பதிலாக ‘கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை …..’ என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு கருத்து எழுதச் சொல்லியிருந்தால் பக்கம் பக்கமாகவல்லவா எழுதித் தள்ளியிருப்போம் என்று நான் நினைப்பதுண்டு.
சரி, இறுதிப் பரீட்சைக்காக மண்டபத்துள் நுழைகிறேன், நம்பிக்கையுடன், பல எதிர்பார்ப்புகளுடனும் தான், பதினாறு வருட படிப்பல்லவா ? வந்தன கேள்விகள், ஓரளவு எழுதிவிட்டேன் , இறுதியாக கட்டுரை எழுதவேண்டும், பிழையான தலைப்பை தெரிவு செய்து, அதிகப் பிரசங்கித்தனமாக எழுதி, கட்டுரை தண்டவாளத்தில் இருந்து இறங்கி எங்கோ ஓடத்தொடங்கி விட்டது, இழுத்து பிடித்து தண்டவாளத்தில் ஏற்றப் பார்க்கிறேன், முடியவில்லை. இன்னொரு தலைப்பை எடுத்து எழுத நேரமுமில்லை. இது நான் பாடம் தெரியாமல் விட்ட பிழையல்ல, சோதனையை எப்படி செய்வது, கஷ்டமான நேரத்தில், நேரம் தாமதிக்காமல், எப்படி திடீர் முடிவுகளை எடுப்பது என்று தெரியாததால் விட்ட பிழை. பிழைக்குமேல் பிழைவிடாமல் ஆரம்பத்திலேயே தலைப்பை மாற்றியிருந்தால் எனக்கு நேரமாவது மிஞ்சயிருக்கும். இது பரீட்சையில் மாத்திரமின்றி எமது வாழ்க்கையிலும் தெரிந்திருக்க வேண்டிய விடயம்; பிழையென்று தெரிந்தும் அதை தொடர்ந்து செய்து நேரத்தை வீணாக்குவது! பல பல்கலைகழக மாணவர்கள் பிழையான துறையை படிக்கத் தொடங்கி, விருப்பமில்லை என்று ஆரம்பத்தில் தெரிந்தும் அதை தொடர்கிறார்கள். ஒரு வருடம் வீணானால் என்ன, வாழ்க்கை முழுதும் இந்தத்துறையில் தானே வேலை செய்யப்போகிறோம், வேறு விருப்பமான, சரியான துறையை தேர்ந்தெடுப்போம் என்று பலர் நினைப்பதில்லை.
பாடங்களை சரியாக கற்பது மட்டுமன்றி பரீட்சைக்கு தம்மை சரியாக தயார்ப்படுத்தி, எது நடந்தாலும் , எந்தவித ஏமாற்றத்தையும் சமாளிக்க கூடிய மனநிலையை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஒரு சிறு பிழை விட்டவுடனேயே பலரது உலகம் தலைகீழாகி விடுகிறது, அதுவே மேலும் பல பிழைகளை விட காரணமாகின்றது. இப்படி மாணவர்கள் குழம்பிப் போவதற்கு ஒரு காரணம், அவர்களது எதிர்பார்ப்பு, பரீட்சையில் தேர்வடையாவிடில் தம் எதிர்காலமே பாழாகிவிடும் என்று பிழையாக நினைக்கிறார்கள். உலகம் மிகப் பெரிது, சந்தோசமாக வாழப் பல வழிகள் உண்டு என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் எடுத்துக்கூறி, மாணவர்களை பரீட்சைக்கு மட்டுமின்றி எதிர்கால வாழ்க்கைக்கும் அவர்களை தயார் செய்யவேண்டும்.
அண்மையில் ஒரு செய்தி வாசித்தேன், இங்கிலாந்தில் கடந்த வருடம் 134 பல்கலைகழக மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம், பல மாணவர்கள் பரீட்சையால் வரும் மன அழுத்தத்தை சமாளிக்க தெரியாமல் இருப்பது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மாணவர்களை பல்கலைகழக வாழ்க்கைக்கு சரியாக தயார்படுத்துவதில் பாடசாலைகள் பங்கு முக்கியம், அதற்காக உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டுமென கேட்டுளார்கள். பரீட்சையில் A எடுப்பதில் எல்லா கவனத்தையும் செலுத்தாமல், எதையும் சமாளிக்கும் திறனை வளர்ப்பது மிகவும் முக்கியம் என கூறுகின்றார்கள்.
இலங்கையில் ஒவ்வொரு வகுப்பிலும் பல மாணவர்கள் இருப்பதால் ஆசிரியர் /மாணவர் விகிதம் அதிகமாக உள்ளது எனவே, ஒவ்வொரு மாணவனினதும் மனநிலையை,பிரச்சனைகளை அறிந்து அவர்களை தனியாக கவனிப்பது மிகவும் சிரமம். பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்து பேசும் போது தமது பிள்ளைகளைப் பற்றிய உண்மையை சொல்லவேண்டும், மானப்பிரச்சனை என நினைத்து எதையும் ஒழிக்கக்கூடாது, இப்படி செய்வதால் ஆசியர்களின் வேலைப்பழு குறைந்து அவர்கள் சரியான இடத்தில் கவனத்தை செலுத்தி மாணவர்களை முன்னேற்றக் கூடியதாக உள்ளது. ஆசிரியர்களும் எத்தனை வேலைகளைத்தான் செய்வது? இது உண்மையில் நடந்த சம்பவம், ஒரு தாய்க்கு இரு ஆண் பிள்ளைகள், விடுமுறையின் போது வீட்டை அல்லோல கல்லோப் படுத்திக்கொண்டிருந்தார்கள், இதை சமாளிக்க முடியாத தாய் கண்டபடி அவர்களை கண்டித்து விட்டார், அதனால் கோபமடைந்த இளைய மகன் சொன்னான் “அம்மா, இரண்டு நாள் எங்களை பார்க்கவே நீ இவ்வளவு கத்துகின்றாய், நாளும் எங்களை வைத்து பார்க்கும் எங்கள் ஆசிரியர்களை ஒரு கணம் யோசித்துப்பார்” என்று. ஆகவே எல்லா வேலை பழுவையும், பழிகளையும் ஆசிரியர்கள் மேல் போடுவது நியாயமல்ல. பெற்றோர்களும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து எந்தக் காரணத்தை கொண்டும் மாணவர்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள், இயலுமானவரை ஒவ்வொரு மாணவனின் திறமையையும், ஆற்றலையும் அறிந்து கற்பியுங்கள். ‘நீ ஒரு மொக்கு, பார் எல்லோரும் செய்துவிட்டார்கள் நீ தான் எப்பவும் இப்படி”, “இது கூட தெரியாட்டி நீ குப்பை தான் கொட்ட வேண்டும் ” போன்ற வார்த்தைகளை கூறி அவர்கள் நம்பிக்கையை கொன்று விடாதீர்கள். பத்து புள்ளிகள்தான் எடுத்தாலும், ‘கவனமாக படித்தால் கட்டாயம் அடுத்தமுறை நல்ல புள்ளிகளை எடுப்பாய் ” என ஆறுதல் வார்த்தை கூறி ஊக்குவியுங்கள்.
“Every child is gifted. They just unwrap their packages at different times”
அன்புடன்
கனகசபேசன் அகிலன்

[:]

0 Comments

Leave A Reply