10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கதிர்காமகோவில்

அதிசயங்கள் நிறைந்த அருள் வேலவன் ஆலயம்..

நீர்வேலிக்கிராமம் பெரிதாக நவீனப்பட்டு விடாத காலம் அது… எங்குநோக்கினும் செழிப்பும் வனப்பும் நிறைந்திருக்கிறது. விவசாயமேபெரும்பாலோரின் முக்கிய தொழில் ஆதலில், சூழல் விவசாயச் சூழலாகஇருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அங்கிங்கெணாது எங்கும் குடிகொண்டிருக்கிற இறைவன் அந்த மக்கள் உள்ளம் தோறும் கோயில்கொண்டிருக்கிறார்.

அதற்கு அத்தாட்சியாக, நீர்வேலியில் முப்பெரும் கோயில்கள்.. ஆகப்பெரியனவாயில்லாத போதும், ஓரளவு சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. இதுமட்டுமல்ல, பெருமரங்களின் அடிகளில் சூலமும் வேலும் கல்லும் சுந்தரமாகஅமைக்கப்பெற்று அந்த ஆண்டவன் வழிபாடு நடக்கிறது.

ஆனாலும், ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர், சிவப்பிரகாச பண்டிதர்,நடராசபண்டிதர் மூவரும் தொடர்ந்து ஆற்றியிருக்கிற கல்விப்பணியால் மக்களில்பெரும்பாலோர் எழுத்தறிவு பெற்று விளங்குகிறார்கள்.. காலையில் எழுந்தால்ஆலயங்களின் காண்டாமணி ஓசை வேதபாராயணம், திருமுறை முழக்கம் இவைகள் இந்தக்கிராமத்திற்கு இயல்பாகவே அமைந்து விட்டன.

இற்றைக்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்.. இந்நிலைமைகளோடு கூடியநமதுநீர்வேலிக்கிராமம்இருந்தது.இந்நிலையில் நீர்வேலியின் வடபகுதியில்குடிசை அமைத்துத் தன் குடும்பத்துடன் வாழ்ந்தவர் தான்செல்லாச்சிஅம்மையார்.சாதுவான குணம், சத்தியமான கடவுள் நம்பிக்கை, என்று இயல்பாக இருந்தவர்.தொடர்ந்து வந்த துன்பங்கள் அவரைப் புடம்போட்டுத் தூயவராக்கி இருந்தன.

இப்போதெல்லாம் பார்ப்பதெல்லாம்.. கடவுளும்.. கடவுளுக்காகவும்,இப்படியே அவர் வீட்டுப் பலாமரம் அன்றைக்குத் தான் பிஞ்சுபிடித்திருந்தது.. இது கதிர்காமத்து வேற்பெருமானுக்கு.. அன்றைக்கே அதுமனதில் அர்ப்பணிக்கப்பெற்று விட்டது.

ஆனால், ஓரிரு நாட்களில் பார்த்தால்.. அதிசயமாக பிஞ்சு காயாகி.. பழமாகி..பறவைகள் கூடி உண்ணும் நிலையை பெற்று விட்டது. திடுக்கிட்ட அம்மையார் என்செய்வது என்று கலங்கினார்.

புகைவண்டி இல்லாத.. பஸ் பயணங்கள் இல்லாத அந்தக் காலத்தில்இப்பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு பல மைல்களுக்கு அப்பாலிருக்கிற தென்கதிர்காமம் செல்வது என்றால் எப்படி? இதற்கு எத்தனை மாதமாகும்..?அவர் ஏதும் அறியாமல் திகைத்தார். பலாப்பழத்தை வெட்டி கைகளில் வைத்துக்கொண்டு அந்த சித்திரமயில் வாகனனை வள்ளி மணவாளனை.. செந்தமிழின் நாயகனை..சிந்தித்துப் போற்றத் தொடங்கினார். சிறிது நேரத்தில் ஆளையே காணவில்லை..

ஓரிரு மணி நேரங்கள் கடந்தோடி விட்டன.. நீர் வடிகிற சேலை.. நீறணிந்தநெற்றி… தங்க வேலும் முருகயந்திரமும் மின்னும் வலக்கை.. கதிர்காமத்திலேநிவேதித்து, பிரசாதமாகக் எடுத்த பலாப்பழத்துண்டு இப்படியே வீட்டுமுன்றலில் நிற்கிறார்.

எங்கு இவர் சென்றாரோ.. என்று ஏங்கியவர்களும் தேடியவர்களும் இவரைக் கண்டுவியக்கிறார்கள்.. என்ன நடந்தது..? எப்படி நடந்தது..? யார் நடத்தியது?என்று குழம்பி ஆச்சரியத்தில் ஆட்பட்டார்கள்..

இது வரை எந்தச் சித்தும் செய்யாமல் எம்மேர்டு இருந்தவர் தானே..செல்லாச்சி அம்மை தானே .. ? என்று அஞ்சினார்கள்.. சிறிது நேரம் செல்லஅம்மையாரே வாய் திறந்தார். இறைவனே தம்மை தென் கதிரமலைக்குக் ஒரு  நொடியில்கொண்டு சென்று மீள நீர்வேலியில் விட்டதாக.. வியந்து நயந்து கண்ணீர்சொரியக் கூறினார். அவர் கையில் மின்னுகிற வேலும் யந்திரமும் அவருக்குகதிரமலையில் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் என்று தௌ;ளத் தெளிவாயின..

ஆங்கிருந்த நெல்லிமர நீழலில்.. இறைவனின் உத்தரவுப்படி வேல்பிரதிஷ்டைநடந்தது. ஆம், நீர்வேலியில் ஒரு கதிர்காமம் உருவாகி விட்டது.  இன்னும்  சிலநாட்கள் சென்றன.. கதிர்காமத்திலிருந்து வந்தவர்கள் ஓரிருவர்செல்லாச்சியம்மையைத் தேடி நீர்வேலிக்கு வந்தார்கள்.. உங்களைகதிர்காமத்தில் கண்டோமே..? என்றார்கள்.. ஊர் வியந்து போனது..மாதக்கணக்கில் கால்நடையாகச் செல்ல வேண்டிய தென் கதிர்காமம் ஓரிருமணித்துளிகளில் சென்று வருவதென்றால் என்ன அதிசயம்..?

ஓளவையார், காரைக்காலம்மையார், செந்தமிழ்க் கோதையாம் ஆண்டாள், மீராஇவர்கள் வழியே அன்றேசெல்லாச்சியம்மைதன் குடும்ப வாழ்வை நீத்தார்..தவவாழ்வைக் கைக் கொண்டார்.செல்லாச்சியம்மையின் பணிகளில் சின்னாச்சியம்மை என்கிறவரும் இணைந்துகொண்டார். இருவரும் குலத்தால்.. மரபால் வேறுபட்டவர்கள்.. ஆனால், பக்திக்குணத்தால் இங்கே நீர்வை செல்வக்கதிர்காமத்தில் ஒன்றானார்கள்.காலங்கள் ஓடின.. நெல்லிமரநீழல் தெய்வீகமயமானது.. கறுத்த இருளில் அங்குமட்டும் தீபம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். காற் சிலம்போசை மக்கள் கர்த்துரட்சிக்கும்.. இப்படியே சென்ற வேளையில், பெருமானின் உத்தரவின் வண்ணம் இருதபஸ்வினிகளும் ஊருராய்ச் சென்று மடிப்பிச்சை கேட்டார்கள்.. கிடைத்தவற்றைகொண்டு முருகனுக்கு வைரக்கல்லால் கோயிலமைக்கத் தொடங்கினார்கள்..

வியாபாரி ஐயா என்று ஊரவர்களால் அன்போடு போற்றப்பெற்றவர்பிரம்மஸ்ரீ.க.தியாகராஜக்குருக்கள்.  அரசகேசரியானின் சூழலில் வாழ்ந்த அவர்ஆகமம், இசை, ஜோதிடம், புராணபடனம், இவைகளில் ஒப்பாரும் மிக்காருமில்லாப்அறிஞர். அடக்கமும் அறிவும் மிக்கவரான அவர் இவ்விருதவச்செல்விகளின்பக்திமையைக் கண்டார். உரிய நிலைகளில் ஆகம முறைமைகளைக் காட்டிவழிப்படுத்தினார்.

இம்மூவரின் பங்களிப்பால் நீர்வேலி வடக்கில் வைரக்கற்களால் இழைக்கப்பெற்றகருவறையுடன்.. அழகிய சிறிய அற்புத ஆலயம் உருவானது. 1936 ஆவணி மாதத்துரேவதியில் கோயிலில் குமரன் குடியேறினான். குடமுழுக்கும் நடந்தது. அந்த
மனநிறைவில் .. செல்லாச்சி அம்மையார் சிவப்பேறெய்தினார். அவர் தம் சமாதிகோயில் வீதியில் இன்றும் இருக்கிறது. கோயிற் பரிபாலனத்தையும் பூஜையையும்க.தியாகராஜக்குருக்களே சிறிது காலம் மேற் கொண்டார்.

குருக்களும் முதுமையால் தளர்வுற ஆலய பூஜை செய்பவர்கள் அடிகக்டி மாறிக்கொண்டேயிருந்தார்கள். கருவறையைத் திறந்தால் பாம்பு நடமாடும்.. கோயிலைச்சுற்றிலும் பனைமரக்காடு.. எங்கும் புதர்கள்.. மிகவும் பாடுபட்டு கோயிற்பராமரிப்பாளராக செல்லாச்சியம்மை நியமித்திருந்த திருமதி இராசாவள்ளிப்பிள்ளையும் அவர் பிள்ளைகளும், அன்பர்களும் ஆலயத்தை ஒருவாறுபராமரித்து வந்தனர். அவர்களால் தொடர்ந்து அது முடியாமல் போயிற்று..

கோயிலைச்சுற்றி பனைமரக்காடு.. எங்கும் புதர்.. கோயில் முன்றலில்கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களின் தொடர் குடியிருப்புக்கள்..இப்படியான சூழலில்… கோயிற் கருவறையில் தீபமேற்றுவதே சவாலாக இருந்தது..இக்காலத்தில் திருமதி இராசா குடும்பம், க.அப்பாத்துரை, இ.கந்தசாமிபோன்றோர் பெருமான் ஆலயத்தில் தீபமேற்றும் திருப்பணியில்
ஈடுபட்டுழைத்தனர்.

இப்படியான சூழலில், நீர்வை மணி பிரம்மஸ்ரீ. கு.தியாகராஜக்குருக்கள்கோயில் பூஜையை ஏற்றுக் கொண்டார்கள். அன்பர்கள் பலர் சேர்ந்து மாதாமாதபூஜை ஒழுங்குகளை ஏற்றார்கள். கோயிற் சூழல் புனரமைக்கப்பெற்றது.கருவறையின் மேலே விமானம் அமைக்கப்பெற்றது. வலஞ்சுழி விநாயகர்பிரகாரத்தில் வந்தமர்ந்தார். இந்நிலையில் சிறப்பாக, 1985 பங்குனிரோகிணியில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயிலைச் சுற்றியுள்ள பல்தொழில் சார் மக்களும் கோயிற் பணியில் பேதம்மறந்து பணியாற்றினர். கோயில் முன்றலில் வாழ்ந்த பிற சமயிகளும் தம்இருப்பிடங்களை விட்டுக் கொடுத்து .. கோயிலின் எழுச்சிக்கு உதவினர்.இப்பட மேன்மையான நிலையை நோக்கி கோயில் எழுச்சியுற, விழாக்களும் வெகுசிறப்பாக நடைபெறலாயின..

1995ல் மீள பெரும் உள்நாட்டுப் போர் பிறந்தது. யாவரும் ஊரை விட்டு, உறவைவிட்டு தென்மராட்சி நோக்கி ஓடவேண்டியதாயிற்று.. இந்த ஓட்டத்தின்சீர்கேட்ட சூழலில் கோயிற் சூழலே இருதரப்புக்களின் சமர்க்களமானது..மூலத்தானத்து வேலும்.. இன்னும் பெருமானின் ஆபரணங்களும்கொள்ளையடிக்கப்பட்டன.. கோயில் மதிப்பிட முடியாத சேதத்திற்கு உட்பட்டது.

கு.தியாகராஜக்குருக்கள், ஸ்ரீமான் அமரர்.த.சின்னத்துரை, திருமதிஇராசாகுடும்பம், என்று பற்பல அன்பர்களின் கூட்டு முயற்சியால், கோயில்அழிவுகளிலிருந்து மீட்டெடுக்கப்பெற்று 1997ல் வைகாசி புனர்பூச நாளில்திருக்குடமுழுக்குச் செய்யப்பெற்றது. 2001லிருந்து ஆனித்திங்களில்பிரம்மோத்ஸவமும் ஆரம்பமாகி நடைபெறும் இக்கோயிலில் 2003 மகாமகவருஷத்தில்“குமாரபுஷ்கரணி” திருக்குளமும் அமைக்கப்பெற்றது.

சுpல ஸ்தலங்களில் முருகன் சிவரூபமாக விளங்குவான்.. இங்கோ, பெருமான்விஷ்ணுரூபமாக விளங்குகிறான். முருகனோடு.. மாயன் மாமன்.. திருமாலும்விளங்குகிற அழகை இங்கு காணலாம். கண்ணனும் கந்தனும் கலந்து “ஈழத்துப்
பழமுதிர் சோலை”யாக இத்தலத்தில் சிறப்புற்றுக் காட்சி தரும் அழகேபேரழகாகும்.

சுந்தரவல்லி, அமிர்தவல்லித் தாயார்களுடன் உற்சவராகிய சுந்தரராஜன்எழுந்தருளும் அழகு இங்கு சிறப்பானது. ஆனி மஹோத்ஸவம், ஐப்பசி ஷஷ்டி விழா,ஆடித் திருவோணம், மார்கழி சுவர்க்கவாயில் ஏகாதசி என்று இங்கு சிறப்பானதிருநாட்கள் அமைந்திருக்கின்றன.

நீங்களும் ஒருமுறை நீர்வேலி வாருங்கள்.. செல்வக்கதிர்காம வேலன்சந்நதியில் நின்று ஒரு கணம் போற்றுங்கள்.. நன்மையும் செல்வமும் அவன்அள்ளி வழங்குவான்..

 

(நன்றிபிரம்மஸ்ரீ.தி.மயூரகிரி சர்மா-நீர்வேலி)